‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – சழக்கு
பொருள்
- குற்றம்
- தீமை
- பயனின்மை
- தளர்ச்சி
- பொய்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
வெம்பினா ரரக்க ரெல்லா மிகச்சழக் காயிற் றென்று
செம்பினா லெடுத்த கோயில் சிக்கெனச் சிதையு மென்ன
நம்பினா ரென்று சொல்லி நன்மையான் மிக்கு நோக்கி
அம்பினா லழிய வெய்தா ரவளிவ ணல்லூ ராரே
தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்
கருத்து உரை
இராவணன் சீதாபிராட்டியை வஞ்சனையால் சிறை வைத்து மிகப் பெரிய குற்றம் இழைத்தான். அவனின் இந்த செயலால் செம்பினால் உறுதியாக அமைக்கப்பட்ட அவன் அரண்மனை உறுதியாக அழிந்துவிடும் என்று நல்ல மனம் கொண்ட அரக்கர்கள் எல்லோரும் வேண்ட. ` நம்மிடத்தில் நம்மை விரும்பினவர்களுக்கு நாம் நன்மை செய்ய வேண்டும்` என்றும், இராவணனால் துன்புறுவார்க்கு இன்புறும் நன்மை செய்யவேண்டும் என்றும் அந்த நல்ல மனம் கொண்ட அரக்கர்களை விருப்பத்துடன் நோக்கி, இராமபிரான் தனது அம்புகளால் இலங்கையை அழிப்பதற்கு அவன் உள்ளிருந்து அம்பு எய்தவர் அவளிவணல்லூர்ப் பெருமான் ஆவார்.
விளக்க உரை
- இந்த தலத்துப் பதிகங்கள் முழுவதும் இராவணன் வரலாறே கூறப்படுவதால் இதிலும் அவ்வாறே கொள்ளப்பட்டது .
- இராமன் வாயிலாக அவனுக்கு உயிர்த்துணையாய் நின்று அம்பை விடுத்து அருளினார் என்னும் இராமாயண வரலாற்றின் உண்மைக்கு இது சான்று.
துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை
காத்தல் என்பது என்ன?
தனு முதலியவற்றை ஒரு கால எல்லை வரை நிலை பெறச் செய்தல்