அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – கரவு

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  கரவு

பொருள்

  • ஒளிவு
  • மறைவு
  • களவு
  • கபடம்
  • தீய எண்ணம்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

கரவின் றிநன்மா மலர்கொண்டு
இரவும் பகலுந் தொழுவார்கள்
சிரமொன் றியசெஞ் சடையான்வாழ்
வரமா மயிலா டுதுறையே.

தேவாரம் – முதலாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

கருத்து உரை

நெஞ்சில் கபடம், தீய எண்ணம் ஆகியவை இல்லாமல், மணம் மிக்கதும், சிறந்த மலர்கள் உடையதுமான பலவற்றையும் பறித்துக் கொண்டு வந்து இரவும் பகலும் தொழும் அடியார்களுக்கு, தலையில் மாலை பொருந்திய செஞ்சடை உடைய சிவபெருமான் வாழும் பதியாகிய மயிலாடுதுறை மேம்பட்ட தலமாகும். இது  வள்ளல் தன்மை உடையவனாகிய அவன் உகந்தருளும் திருத்தலமும் ஆகும்.

விளக்க உரை

  • மயிலாடுதுறைப் பெருமான் அடியார்களுக்கு வள்ளலாக அருள் வழங்குகிறான் என்பது குறிப்பு.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – எய்ப்பு

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  எய்ப்பு

பொருள்

  • இளைப்பு
  • தளர்ச்சி
  • ஒடுக்கநிலை
  • வறுமைக்காலம்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

எய்ப்பானார்க் கின்புறு தேனளித் தூறிய
இப்பாலா யெனையு மாள வுரியானை
வைப்பான மாடங்கள் சூழ்ந்த மணஞ்சேரி
மெய்ப்பானை மேவிநின் றார்வினை வீடுமே.

தேவாரம் – இரண்டாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

கருத்து உரை

வறுமையால் இளைத்தவர்க்குப் பெருகும் படியான இன்பம் அளித்து இவ்வுலகத்துள் இருக்கும்படி அருள்புரிபவன். என்னையும் ஆட்கொடு அருளும் உரிமையன். நிலங்கள் எங்கும் செல்வத்தை குறிக்கும் மாடி வீடுகள் சூழ்ந்த திருமணஞ்சேரியில் உண்மைப்பொருளாய் விளங்குபவன். இவ்வாறான அவனை விரும்பி வழிபடுபவர்கள் வினைகள் நீங்கும்.

விளக்க உரை

  • மெய்ப்பான் – பொய்யாதல் இல்லாதவன்; உண்மைப்பொருள்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – ஒண்புழுக்கல்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  ஒண்புழுக்கல்

பொருள்

  • நெய்யால் மறைக்கப்பட்ட சோறு

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

மைப்பூசு மொண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பூசு நீற்றான் கபாலீச் சரமமர்ந்தான்
நெய்ப்பூசு மொண்புழுக்க னேரிழையார் கொண்டாடும்
தைப்பூசங் காணாதே போதியோ பூம்பாவாய்.

தேவாரம் – இரண்டாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

கருத்து உரை

பூம்பாவாய்! மைபூசியும் ஒளிநிறைந்த கண்களையும் உடைய மகளிர் வாழும் சிறந்தத் தலமான மயிலாப்பூரில், கைகளில் திருநீறுபூசியவனாய் அமர்ந்துள்ள பெருமான் உறையும்  கபாலீச்சரம் என்னும் கோயிலில், அணிகலன் அணிந்துள்ள மகளிர், நெய் வழிந்தும்  சிறப்பானதும் ஆன பொங்கல் படைத்துக் கொண்டாடும் தைப்பூசவிழாவைக் காணாது செல்வது முறையோ?

விளக்க உரை

  • வறியர் முதலானவர்க்கு அமுது அளிக்கும் தைப்பூசவிழாச் சிறப்பு பற்றியது இப்பாடல்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – காரான்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  காரான்

பொருள்

  • எருமை
  • கருநிறப்பசு
  • மேகமாயிருப்பவன்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

காரானைக் கடிகமழ் கொன்றையம் போதணி
தாரானைத் தையலொர் பான்மகிழ்ந் தோங்கிய
சீரானைச் செறிபொழிற் கோழம்ப மேவிய
ஊரானை யேத்துமின் நும்மிட ரொல்கவே.

தேவாரம் – இரண்டாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

கருத்து உரை

செறிவுடைய சோலைகள் சூழ்ந்த திருக்கோழம்பத்தைத் தன் ஊராகக் கொண்டு அதன்கண் உறைபவனாகிய ஈசன், மேகமாக இருந்து மழையாக பொழிபவன். மணம் கமழும் கொன்றை மலரால் தொடுக்கப்பட்ட மாலையை அணிந்தவன். மகிழ்வோடு உமையம்மையை ஒருபாகத்தில் கொண்டு விளங்கும் புகழ் உடையவன்.  உம்முடைய இடர்கள் நீங்க அவனை துதியுங்கள்.

 

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – குழகு

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  குழகு

பொருள்

  • இளமைச்செல்வி
  • அழகு
  • குழந்தை

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

ஆற்றையுமேற்றதோ ரவிர்சடையுடைய ரழகினையருளுவர் குழகலதறியார்
கூற்றுயிர்செகுப்பதோர் கொடுமையையுடையர் நடுவிருளாடுவர் கொன்றையந்தாரார்
சேற்றயன்மிளிர்வன கயலிளவாளை செருச்செயவோர்ப்பன செம்முகமந்தி
ஏற்றையொடுழிதரு மெழிறிகழ்சார லிடைச்சுரமேவிய விவர்வணமென்னே.

தேவாரம் – முதலாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

கருத்து உரை

வயல்களில் உள்ள சேற்றில் விளையாடும் கயல் மீன்களும், வாளைமீன்களும் தம்மோடு சண்டையிடுவதைக் கூர்ந்து நோக்கும் சிவந்த முகத்தையுடைய பெண்குரங்கோடு ஆண்குரங்கு கூடித் திரியும் அழகிய மலைச்சாரலை உடைய திருஇடைச்சுரத்தில், கங்கை நதியை தன் தலையில் ஏற்று அருளிய விரிந்த சடையை உடையவராகவும், அழகும் இளமையும் உடையவராகவும், கூற்றுவன் ஆகிய எமனின் உயிரை மாய்க்கும் பெருவிரல் உடையவராகவும், நள்ளிருளில் திருநடம்புரிபவராகவும், கொன்றை மலர்மாலை சூடியவராகவும் விளங்கும் இந்த இறைவர் தம்முடைய  இயல்பு யாதோ?

விளக்க உரை

  • இத்திருத்தல பாசுரம் முழுவதும் இறைவனுடைய வீரம் முதலிய பல இயல்புகளை எடுத்துக்கூறி, இடைச்சுரம் மேவிய இவர் சிறப்புகள் என்னே என்று வினாவுவதாக அமைந்துள்ளது.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – தழை

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  தழை

பொருள்

  • தழைகை
  • தளிர்
  • இலை
  • இலையோடு கூடிய சிறு கொம்பு
  • பீலிக்குடை
  • தழையாலான உடை
  • ஒருவகை மாலை
  • பச்சிலை
  • செழி
  • தாழ்
  • பூரித்தல்
  • மிகு
  • விருத்தியாகு
  • சீட்டாட்டத்தில் எண்ணிக்கையில் சேர்க்கப்படாத சீட்டு

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

தவள வெண்பிறை தோய்தரு தாழ்பொழில் சூழநல்
திவள மாமணி மாடந் திகழ்தெளிச் சேரியீர்
குவளை போற்கண்ணி துண்ணென வந்து குறுகிய
கவள மால்கரி யெங்ஙன நீர்கையிற் காய்ந்ததே.

தேவாரம் – இரண்டாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

கருத்து உரை

வெண்மையான பிறையுடன் கூடியதும், இலையோடு கூடிய சிறு கொம்பு கொண்ட தாழ்வான  சோலைகள் சூழ்ந்ததும், அசைகின்ற அழகிய ஒலியினையுடைய உடைய மணிகளால் இழைக்கப்பட்ட மாடவீடுகளுடன் திகழ்வதுமான திருத்தெளிச்சேரியில் உறையும் இறைவனே! குவளை மலர் போன்ற கண்களை உடைய உமை நடுங்குமாறு உம்மைக்கொல்ல வந்து அடைந்த கவளம் அளவு உண்ணும் மதமயக்கமும் துதிக்கையும் உடைய பெரிய யானையை எவ்வாறு நீர் சினந்து கைகளால் அதனை அழித்தீர்?

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – அயில்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  அயில்

பொருள்

  • இரும்பு
  • சத்திரம் வைக்கும் கத்தி.
  • அழகு
  • கூர்மை

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

அயிலாரு மம்பத னாற்புர மூன்றெய்து
குயிலாரு மென்மொழி யாளொரு கூறாகி
மயிலாரு மல்கிய சோலை மணஞ்சேரிப்
பயில்வானைப் பற்றிநின் றார்க்கில்லை பாவமே.

தேவாரம் – இரண்டாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

கருத்து உரை

கூரிய அம்பு எய்து முப்புரங்களையும் அழித்து, குயில் போன்ற இனிய மென்மையான மொழிபேசும் உமையம்மையை ஒரு பாகத்தில் உடையவனாகி, மயில்கள் நிறைந்து வாழும்  சோலைகள் சூழ்ந்த திருமணஞ்சேரியில் எழுந்தருளிய இறைவனைப் பற்றி நின்றவர்களுக்குப் பாவம் எதுவும் இல்லை.

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

கருதல் அளவையின் நான்கு வகைகள் யாவை?
வாயில் காட்சி, மானதக் காட்சி, தன் வேதனைக் காட்சி, யோகக் காட்சி

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – பொறையார்தரு

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  பொறையார்தரு

பொருள்

  • சுமையாகப் பொருந்திய

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

கறையார்மிட றுடையான்கமழ் கொன்றைச்சடை முடிமேல்
பொறையார்தரு கங்கைப்புன லுடையான்புள மங்கைச்
சிறையார்தரு களிவண்டறை பொழில்சூழ்திரு வாலந்
துறையானவ னறையார்கழல் தொழுமின்துதி செய்தே.

தேவாரம் – முதலாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

கருத்து உரை

ஆலகால விடத்தை உண்டு அதனால் உண்டான கறை பொருந்திய கண்டத்தை உடையவனும், நறுமணம் கமழும் கொன்றை மலர் அணிந்த சடைமுடியின்மீது கங்கையாற்றையும் அணிந்தவனுமாய சிவ பெருமானுக்கு உரித்தான தலம் சிறகுகளுடன் கூடிய மது உண்ட வண்டுகள் ஒலிக்கும் பொழில்களால் சூழப்பட்ட திருப்புள்ளமங்கை என்னும் தலத்தில் உள்ள ஆலந்துறை என்னும் கோயிலாகும். அக்கோயிலுக்குச் சென்று அப்பெருமானது திருவடிகளைத் துதி செய்து தொழுவீராக.

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

காட்சியாலும், அனுமானத்தாலும் அறிய முடியாததை ஆப்த வாக்கியத்தால் அறிவது என்ன அளவை?
உரை அளவை (நூல் அளவை)

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – துளக்கு

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  துளக்கு

பொருள்

  • அசைவு
  • வருத்தம்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில்
துளக்கில் கபாலீச் சரத்தான்றொல் கார்த்திகைநாள்
தளத்தேந் திளமுலையார் தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்.

தேவாரம் – இரண்டாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

கருத்து உரை

பூம்பாவாய்! வளையல்கள் அணிந்த கன்னிப் பெண்கள் வாழும் வளமான தெருக்களைக் கொண்டுள்ள திரு மாமயிலையில், தளர்வற்ற கபாலீச்சரம் என்னும் கோயிலில் விளங்கும் கபாலிச்சரர் எனும் பெருமானை பூச்சுக்களை உடைய இளமகளிர் கொண்டாடும் திருவிழாவாகிய கார்த்திகைத் திங்களில் நிகழும் கார்த்திகை விளக்கீடு  விழாக்களின்போது  திருவிளக்குகள் ஏற்றிக் கொண்டாடும் காட்சியைக் காணாது செல்வது முறையோ?

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

ஞாதுரு என்பது யார்?
அறிபவன்

 

Loading

சமூக ஊடகங்கள்