அமுதமொழி – சார்வரி – ஆனி – 21 (2020)


பாடல்

கலங்காத சித்தமுஞ் செல்வமுஞ் ஞானமுங்
   கல்வியுங் கருணை விளைவுங்
கருதரிய வடிவமும் போகமுந் த்யாகமுங்
   கனரூப முள மங்கையும்
அலங்காத வீரமும் பொறுமையுந் தந்திரமு
   மாண்மையு மமுத மொழியு
மானவிச் செயலெலாஞ் சனனவா சனையினா
   லாகிவரு மன்றி நிலமேல்
நலஞ்சேரு மொருவரைப் பார்த்தது பெறக்கருதி
   னண்ணுமோர் ரஸ்தாளி தன்
னற்சுவை தனக்குவர வேம்புதவ மேநெடிது
   நாள்செயினும் வாராது காண்
அலங்கார மாகமலர் கொன்றைமா லிகைசூடு
   மண்ணலே யருமை மதவே
ளனுதினமு மனதினினை தருசதுர கிரிவள
  ரறப்பளீ சுர தேவனே

சதுரகிரி அறப்பளீசுர சதகம் – அம்பலவாணக் கவிராயர்

கருத்து – ஒருவருக்கு வரும் நற்செயல்கள், அழகு, ஞானம் ஆகியவை பிறவி வாசனயினல்  வரும் என்றும் அவை குறித்து மற்றவர்கள் பெற கருதக்கூடாது என்பதை உவமையுடம் கூறும் பாடல்.

பதவுரை

அலங்காரமாக மலர்களுடன் கொன்றை மாலையை சூடிடும் அண்ணலே, அழகும் வனப்பும் கொண்டவனே, உள்ளத்தில் அனுதினமும்  இன்பத்தைத் தரும் சதுரகிரியில் வீற்றிருக்கும் அறப்பளீசுர தேவனே! முன் செய்த வினைகளின் காரணமாக துயர் வரும்போது இருக்கும் கலங்காத சித்தமும், செல்வமும், ஞானமும், கல்வியும், கருணை கொண்ட வடிவமும், அளவற்ற இன்பமும், தியாகமும், அழகிய வடிவமுடைய மணத்தலும், ஒளிவீசி புகழ் தரும்படியான வீரமும், பொறுமையும், தந்திரமும், சிறப்புகளும், சிறப்புகள் உடைய பேச்சும், மானம் கொண்டு செய்யப்படும் செயல்களும் பிறவி வாசனயினல் இந்த புவிதனில் வரும்; இவ்வாறு நலங்கள் கொண்டிருக்கும் ஒருவரைப் பார்த்து அதைப் பெறக்கருதுவது என்பது ரஸ்தாளி எனும் வாழைப்பழ சுவை தனக்கு வரவேண்டும் என வேம்பு நீண்ட நாட்கள் தவம் செய்தலுக்கு ஒப்பானது; (கிட்டாது என்பது முடிபு)

விளக்க உரை

  • அலங்குதல் – அசைதல், மனந்தத்தளித்தல், இரங்குதல், ஒளிசெய்தல்
  • மத – மடன், வலிமை, மிகுதி, வனப்பு

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *