
பாடல்
ஆச்சப்பா சிவயோகி ஆவதென்றால்
அடங்கி நின்ற பஞ்சகர்த்தாள் அஞ்சு பேரை
பேச்சப்பா பேச்சறிந்து கண்டு கொண்டு
பெருமையினால் சிவயோக முத்தனாச்சு
மூச்சப்பா தானறிந்து தன்னைப் பார்த்து
முனையான சுழினையில் வாசி பூட்டி
காச்சப்பா அக்கினி கொண்டாறாதாரங்
கசடகலக் காச்சிவிடு கனகமாமே
அகத்தியர் சௌமியசாகரம்
கருத்து – சிவயோகி ஆவது எவ்வாறு என்பதை குறிக்கும் பாடல்
பதவுரை
அக்னி எனப்படுவதான குண்டலினியில் தொடங்கி ஆறு உணர்வு நிலைகளைக் குறிப்பதானதும், தத்துவங்கள் எனப்படுவதும், மலங்கள் எனப்படுவதும் ஆன ஆறு ஆதாரங்களையும் குற்றம் இல்லாமல் கடக்க வேண்டும்; பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், மகேஸ்வரன் மற்றும் சதாசிவன் ஆகிய பஞ்ச கர்த்தாக்களையும் அவர்களுக்கு உரித்தான மூலமான நாதத்தை பிராணன் என்றும் வாசி என்றும் உரைக்கப்படுவதான மூச்சின் வழி அறிந்து அதன் மூலம் தன்னையும் அறிந்து அதை சுழிமுனை எனப்படும் ஆக்ஞையில் பூட்ட வேண்டும்; அவ்வாறு செய்யும் பொழுது உடல் கனகம் எனப்படுவதான பொன் போன்ற மேனியாகும்.