
பாடல்
ஆறெட்டு எழுத்தின்மேல் ஆறும் பதினாலும்
ஏறட்டு, அதன்மேலே விந்துவும் நாதமும்
சீறிட்டு நின்று, ‘சிவாயநம’ என்ன,
கூறு இட்டு மும்மலம் கூப்பிட்டுப் போமே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
கருத்து – திருவைந்தெழுத்துச் செபத்திற்கு ஆவதொரு சிறப்புமுறையும் அதன் பயன் வீடுபேறு என்றும் கூறும் பாடல்
பதவுரை
மேற்கூறியதான திருவம்பல சக்கரத்தில் உள்ள ஐம்பத்தோர் எழுத்துக்களில் நாற்பத்தெட்டாம் எழுத்தான `ஸ்` என்பதுடன் ஆறாம் எழுத்தான `உ` என்பதையும் பதினான்காம் எழுத்தான `ஔ` என்பதையும் ஏறச்செய்து, `ஸு` எனும் எழுத்தை `ஸௌ` என்றும் ஆக்கி, அவற்றின் இறுதியில் முறையே விந்துவையும் நாதத்தையும் சேர்த்து ஒலிக்கப் பண்ணிப் பின்பு, `சிவாயநம` என்று உச்சரித்தால் (அஃதாவது ஓம் ஸும் ஸௌ: சிவாயநம) என உச்சரித்தல்) மூன்று மலங்களும் விலகும்.