பாடல்
மூலம்
மருவினிய மலர்ப்பாதம் மனத்தில்வளர்ந் துள்ளுருகத்
தெருவுதொறும் மிகஅலறிச் சிவபெருமா னென்றேத்திப்
பருகியநின் பரங்கருணைத் தடங்கடலிற் படிவாமா
றருளெனக்கிங் கிடைமருதே இடங்கொண்ட அம்மானே
பதப்பிரிப்பு
மருவு இனிய மலர்ப் பாதம் மனத்தில் வளர்ந்து உள் உருகத்
தெருவுதொறும் மிக அலறிச் சிவபெருமான் என்று ஏத்திப்
பருகிய நின் பரம் கருணைத் தடம் கடலில் படிவு ஆம்
ஆறு அருள் எனக்கு இங்கு இடைமருதே இடம் கொண்ட அம்மானே
எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்
கருத்து – திருவிடைமருதூர் பெருமானிடம் உன்னுடைய பரங்கருணை ஆகிய பெரிய கடலில் படிந்து மூழ்கும் வண்ணம் அருள் செய்ய வேண்டுதல்
பதவுரை
திருவிடைமருதூரை ஊராகக் கொண்ட எம் தந்தையே! தழுவி இரண்டற கலத்தலுக்கு உரித்தான இனிய மலர் போன்ற திருவடியை உள்ளத்தில் வைத்து அது மலருமாறு செய்து உள்ளம் உருகி, வீதிகள் தோறும் மிகவும் ஓலமிட்டு அலறி, சிவபெருமானே என்று புகழ்ந்தும் துதித்தும் நுகர்ந்த மேலான கருணையை அறியாதவனாக இருப்பினும் உன் பரங்கருணை ஆகிய பெரிய கடலில் படிந்து மூழ்கும் வண்ணம், அடியேனுக்கு இங்கு அருள் செய்வாயாக.
விளக்க உரை
- மருவுதல் – ஒன்றாதல்; இரண்டறக் கலத்தல். தழுவுதல்
- வளர்தல் – விளங்குதல்; வளர்ந்து – வளர்தலால்
- உள் உருக – உள்ளம் உருக
- படிவு ஆமாறு – மூழ்குதல் உண்டாகும்படி