
பாடல்
மூலம்
புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா வுன்னடி யென்மனத்தே
வழுவா திருக்க வரந்தர வேண்டுமிவ் வையகத்தே
தொழுவார்க் கிரங்கி யிருந்தருள் செய்பா திரிப்புலியூர்ச்
செழுநீர்ப்புனற்கங்கை செஞ்சடைமேல்வைத்த தீவண்ணனே
பதப்பிரிப்பு
புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன்னடி என்மனத்தே
வழுவா திருக்க வரந்தர வேண்டும் இவ் வையகத்தே
தொழுவார்க்கு இரங்கி யிருந்தருள் செய்பா திரிப்புலியூர்ச்
செழுநீர்ப் புனற் கங்கை செஞ்சடை மேல் வைத்த தீவண்ணனே
தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்
கருத்து – புழுவாகப் பிறக்க நேர்ந்தாலும் உன் திருவடிகள் அடியேன் மனத்தை விட்டு என்றும் நீங்காதிருக்குமாறு அடியேனுக்கு அருள் செய்ய வேண்டும் என விளிம்பும் பாடல்.
பதவுரை
இந்த வையகம் ஆகிய பூவுலகிலே அடியவர்கள் மேல் இரக்கப்பட்டு அவர்களுக்கு அருள் செய்கின்றவனும், திருப்புலியூர் எனும் திருப்பாதிரிப்புலியூரில் உறைபவனும், செழுமையான கங்கைநீரைச் செஞ்சடையில் தேக்கி வைத்திருப்பவனும், தீப்போன்ற செந்நிறத்துப் பெருமானே! அடியேன் வினைகளுக்கு உட்பட்டு மறுபிறவியில் மிகழும் இழிவான பிறவியாகிய புழுவாகப் பிறக்க நேர்ந்தாலும் புண்ணியமே வடிவெடுத்த உன் திருவடிகள் அடியேன் மனத்தை விட்டு என்றும் நீங்காதிருக்குமாறு அடியேனுக்கு அருள் செய்ய வேண்டும்.