வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 27

உமை
உலகில் உள்ள பொருள்கள் அனைவருக்கும் பொதுவாக இருப்பினும், திரவிய தானம் செய்யும் மனிதன் புண்ணியம் அடைவது எவ்வாறு?

சிவன்

பஞ்ச பூதத்தினால் ஆன பொருள்கள் அனைவருக்கும் பொதுவானது. கொடுப்பவன், வாங்குபவன், கொடுக்கப்படும் பொருள், கொடுக்கும் வகை, காலம், இடம் ஆகிய எல்லாம் சேர்ந்தே தானம் எனப்படுகிறது. மனம், வாக்கு, காயம் இவற்றால் பரிசுத்தனாக இருந்து சத்தியமே கொண்டிருப்பவனும், கோபம், லோபம், பொறாமை ஆகிய இவைகள் இல்லாதவனும், சிரத்தையும், நம்பிக்கை உடையவனும் சிறப்புக்கு உரியவன் ஆகிறான், அவன் தானம் செய்யத் தக்கவன்.  பரிசுத்தமானவனும், புலன்களையும், கோபத்தையும் அடக்கியவனும், ஏழையானவனும், கல்வி, ஒழுக்கம் உள்ளவனும், பெரியதான குடும்பம் உள்ளவனும், பஞ்ச மகா யக்யங்கள் ஆகியவற்றை தவறாமல் செய்பவனும், அங்கங்களில் குறைபாடு இல்லாதவனும் ஆக இருத்தல் தானம் பெறுபவனுக்கான தர்மமாகும்.

பித்ரு காரியத்திலும், தேவ காரியத்திலும் அக்னி பூசையிலும் தானம் செய்வதில் பலன் அதிகம். எவன் எவன் எதற்கு தகுதி உடையவன் ஆகிறானோ அதற்கு அவன் பாத்திரமாகிறான். ஆபத்தில் இருப்பவனை ஆபத்தில் இருந்து விடுவிப்பதால் அவன் பாத்திரன் ஆகிறான். பசித்தவனுக்கு அன்னமிடல், தாகம் கொண்டனுக்கு நீர் அளித்தல் என ஒவ்வொருவரும் பாத்திரர்களாக ஆகின்றனர்.

கொடிய வஞ்சகத் தன்மை கொண்டவனும், திருட்டும், விபச்சாரம் செய்பவனும், ஆண் தன்மை அற்றவனும், பிற உயிர்களைக் கொல்பவனும், ஆசாரத்தை கெடுப்பவனும், உலகிற்கு கெடுதல் செய்பவனும் தானம் அளிப்பதில் இருந்து முற்றிலும் விலக்கத் தக்கவர்கள். பிறர் பொருளை திருடியும், தயை இல்லாதவன் இடத்தில் இருந்து வாங்கியும், சூதாட்டத்தில் ஈடுபட்டும், தீய செயல்களை செய்தும், பொருள் ஆசையினால் பெரும்பாலானவர்களுக்கு தீங்கு இழைத்தும் மனிதர்கள் பெறும் தனம் மிகவும் இழிவானது. அப்படிப்பட்ட தனத்தில் செய்யப்படும் தர்மம் வீண் என்று அறிவாயாக. ஆகவே புண்ணியத்தை விருப்புகிறவன் நியாமாக ஈட்டிய பொருளை தானம் செய்ய வேண்டும். எது எக்காலத்திலும் தனக்கு பிரியமானதாக இருக்கிறதோ அதைத் தானம் செய்ய வேண்டும்.

இனி தானம் செய்யும் முறையைக் கூறுகிறேன் கேள்.

தகுதி உடையவனை நாடிச் சென்று அவனிடம் வேண்டி அவன் சந்தோஷம் கொள்ளுமாறு தானம் செய்ய வேண்டும். இதுவே சிறந்த முறை.  கேட்டப்பின் அளிப்பது என்பது இரண்டாம் தரமுடைய தானம் ஆகும். தானம் அளிக்கும் போது  அன்பு, அக்கறை, ஈடுபாடு கொண்டு செய்யவேண்டும். யாசிப்பவர்களை சரியான காலத்திலும், இடத்திலும் அன்புடனும், மரியாதையுடனும் அழைத்து தானம் செய்ய வேண்டும்.

தன் சக்திற்கு மேற்பட்ட தானம் மிகவும் உத்தமானது. தன் சக்திற்கு உட்பட்ட தானம் இரண்டாம் நிலை ஆகும். தன் சக்திற்கு மிக மிகக் குறைவாக செய்யப்படும் தானம் இழிவான தானம் ஆகும். வாக்கினால் எவ்வாறு சொல்லப்பட்டதோ அவ்வாறு தானம் செய்ய வேண்டும். புண்ணியத் தலங்களிலும், புண்ணிய காலங்களிலும் செய்யப்படும் தானம் மிகச்சிறந்ததானது.

உமை
மிகப் புண்ணியமான தேசமும் காலமும் எவை என்பதை உரைக்கவேண்டும்?

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *