பாடல்
விளம்பிய உள்ளத்து மெய்வாய் கண்மூக்கு
அளந்தறிந்து அறியா, ஆங்கவை போலத்
தாம்தம் உணர்வின் தமி யருள்
காந்தம் கண்ட பசாசத் தவையே
சிவஞானபோதம் – மெய்கண்டார்
பதவுரை
சடப் பொருட்கள் என்றும்,ஞானேந்திரியங்கள் என்றும் ஐம்பொறிகள் என்றும் அறிகருவிகள் என்றும் வழங்கப்பெறும் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவற்றில் உடல் உணர்வை உணரும்; வாய் சுவையை உணரும்; கண் புறக் காட்சியைக் காணும்; மூக்கு வாசனையை அறியும்; செவி ஓசையை அறியும். அவ்வாறு ஐம்பொறிகள் இவைகளை அறிந்தாலும், அறிகின்ற தம்மை அறியமாட்டா. உயிர் உடனிருந்து திருவருள் காந்தம் போன்று இயங்கினால் உயிர்கள் இரும்பினைப் போல் இயங்கி அவை செயல்படும்.
விளக்க உரை
- இறைவன் திருவருள் என்பது சைவசித்தாந்த மரபில் மறைப்பாற்றலையே (திரோதான சத்தி) குறிக்கும். உயிர் அனுபவித்துத்தான் மலக் குற்றங்களை நீக்க முடியும். எனவே உயிர்கள் மாயை செய்த கன்மங்களின் வழியே வினையாற்ற வேண்டியுள்ளதால், நன்மை தீமைகளை அறியாதவாறு உலகியல் அனுபங்களில் ஈடுபடச் செய்ய திருவருள் துணை செய்யும்.
- ஐம்பொறிகள் உயிரால் செலுத்தப் படுவதால் வினைகளை நுகர்கின்றன. உயிர் தன் வினையினால் தன்பொருட்டாகவே நுகர்கின்றது. அவ்வுயிரைச் செலுத்துகின்ற இறைவன் முன்னிலையில் உலக நிகழ்வுகள் செயல்படுகின்றன.
- தமி – ஒப்பற்ற முதல்வன்
- பசாசம் – இரும்பு