புகைப்படம் : SL Kumar
முக நூலில் சொல்லாய்வு எனும் தளம் மிகச் சிறப்பாக இயங்கி வருகிறது.
https://www.facebook.com/groups/col.aayvu/?ref=group_header
பல்வேறு அறிஞர்கள் கருத்துக்கள் பகிர, சொல் பற்றி அறிய இருக்கும் மிகச் சிறந்த பக்கங்கள்/ தளம் இவற்றில் இது முக்கியமானது.
—————————————————————————————————-
Sundar Gopalakrishnan
‘தெய்வம்’ என்ற சொல் எந்த நூற்றாண்டில் இருந்து பயன்பாட்டில் இருக்கிறது?
மணி மணிவண்ணன்
தமிழில் அப்படிப்பட்ட ஆய்வுக்கு இடமில்லை. ஆவணங்களின் வழியேதான் அப்படிப்பட்ட காலக்கணக்கைச் செய்ய முடியும். ஆனால், தமிழில் எல்லாச் சொற்களுமே மொழி பிறந்த காலத்திலிருந்து அடிப்படை ஒலிகளிலிருந்து ஏரணத்துடன் பிறந்தன என்ற நம்பிக்கை உள்ளவர்கள் சொற்கள் தோன்றி வழக்கிழக்கும் என்பதை ஏற்க மறுப்பார்கள்.
Sundar Gopalakrishnan
மிக்க நன்றி. எனக்கான பதிலை நீங்கள் உரைத்து விட்டீர்கள். காரணம் பக்தி இலக்கியம் தொட்டு இச் சொல் பயன்பாட்டில் இருக்கிறது எனில் அதன் காலத்தை எளிதில் அறியலாம் என்பதே நோக்கம். சித்தர் இலக்கியம் எனில் கால நிர்ணயம் செய்ய இயலாது போன்ற முடிவுக்கு வரவே இக்கேள்வி
Chokan G
சங்க காலங்களிலேயே வழங்கி வந்திருக்கிறது. தெய்வந் தொழாஅள்….என்பது குறள்வரி.
Sundar Gopalakrishnan
சங்க காலம் என்பது திருவள்ளுவர் காலத்திற்கு முற்பட்டது என்பது என் துணிபு. ஆகவே இது திருக்குறளுக்கு முன்பு இச் சொல் பயன்பாட்டில் இருந்திருக்கிறதா என்பதை கூறுங்கள்.
Sivakumar
தீ – வழிபாடு – Theo – Greek , Dev – Stk, என்பது பாவாணர் கூற்று
Chokan G
அருமையான எடுத்துக்காட்டு ஆனால் நண்பா் காலத்தையல்லவா சொல்ல கேட்கிறார்.
Badri Seshadri
இணையத்தில் சங்க இலக்கியத் தரவகம் (corpus) ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் எனக்குத் தெரிந்து பல ஆய்வாளர்கள் சொந்தத்தில் இதனை வைத்திருக்கிறார்கள். தனித்தனியாகத் தேடவேண்டும். நற்றிணையில் மட்டும் வரும் “தெய்வம்” கீழே:
நற்றிணை 9:1-2, சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ
அழிவிலர் முயலும் ஆர்வ மாக்கள்
வழிபடு தெய்வம் கண் கண்டாஅங்கு
நற்றிணை 185:10, பெயர்-இல்லாதவர்
தேனுடை நெடு வரை தெய்வம் எழுதிய
நற்றிணை 201:5-6, பரணர்:
செவ் வேர்ப் பலவின் பயங் கெழு கொல்லித்
தெய்வம் காக்கும் தீது தீர் நெடுங் கோட்டு
நற்றிணை 315:1, அம்மூவனார்
ஈண்டு பெருந் தெய்வத்து யாண்டு பல கழிந்தென
நற்றிணை 351:4, மதுரைக் கண்ணத்தனார்
எவ்வ நெஞ்சமொடு தெய்வம் பேணி
நற்றிணை 398:1, உலோச்சனார்
உருகெழு தெய்வமும் கரந்து உறையின்றே
மணி மணிவண்ணன்
Sangam Concordance தளத்தில் தேடலாம்.
Badri Seshadri
அகநானூறு 110, போந்தைப் பசலையார்
கொடுஞ் சுழிப் புகாஅர்த் தெய்வம் நோக்கிக்
அகநானூறு 166, இடையன் நெடுங்கீரனார்
உயர் பலி பெறூஉம் உருகெழு தெய்வம்
அகநானூறு 309, கருவூர் கந்தப்பிள்ளைச் சாத்தனார்
அம்பு சேண்படுத்து வன்புலத்து உய்த்தெனத்
தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில்
அகநானூறு 360, மதுரைக் கண்ணத்தனார்
வெருவரு கடுந்திறல் இரு பெரும் தெய்வத்து
உருவுடன் இயைந்த தோற்றம் போல
மணி மணிவண்ணன்
http://tamilconcordance.in/
Badri Seshadri
நன்றி மணி. மணி சுட்டிய தளத்தில் தேடினால் கிடைத்த தகவல் இது. தொல்காப்பியத்தில் தெய்வ(ம்) என்பது 9 இடங்களில் வருகிறது. எட்டுத்தொகையிலும் பத்துப்பாட்டிலுமாகச் சேர்த்து 43 இடங்களில். திருக்குறளில் 6 இடங்களில்.
Adv Suguna Devi
“வழிபடு தெய்வம் நின்புறம் காப்பப்
பழிதீர் செல்வமொடு வழிவழிசிறந்து
பொலிமின் என்னும் புறநிலை வாழ்த்தே” ..தொல்காப்பியம்.
Chokan G
அருமையான எடுத்துக்காட்டு,நமக்கு கிடைத்திருக்கும் இலக்கண இலக்கிய நூல்களில் தொன்மையானது தொல்காப்பியமே.
Raveenthiran Venkatachalam
தெய்வம் என்ற சொல்லுக்கு தீண்டி வருத்துவது என்பதே பொருள். தெய்வங்களெல்லாம் ஆயுதங்களைத் தாங்கி இருந்ததால் அப்பெயர் வந்திருக்கலாம். மேலை நாட்டின் old testament ள் கூட கடவும் கோபக்காரராகவே சித்தரிக்கப்பட்டுள்ளார். தெய் என்ற உரிச்சொல்லுக்கு அழி என்பதே பொருள். தொல்காப்பியர் காலத்திலேயே கடவுள் தீண்டி வருத்தும் என்ற கருத்தாக்கம் இருந்ததை உணரமுடிகிறது.
சுகி உதயகுமார்
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும் !
Logan K Nathan
சமஸ்கிருத மொழியில் தெய்வ என்பது விதி(Fate), எதிர்பாராத, துரதிர்ஷ்டவசமாக என்பது தான் பிரதான பொருள்.
முருகன் நடராஜன்
அறுதியிட்டுக் கூற இயலாது. தொல்லியல் அகழாய்வுகளின் அடிப்படையிலே இன்று சங்க இலக்கியத்தின் காலமானது பொஆமு 5ஆம் நூற்றாண்டு வரை கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. இன்றைய நிலையில் தெய்வம் என்ற சொல்லானது அதிகபட்சமாக பொஆமு 5 ஆம் நூற்றாண்டிலிருந்தும் குறைந்தது பொஆமு 3 ஆம் நூற்றாண்டிலிருந்தும் வழக்கில் இருந்திருக்கலாம்.
Sundar Gopalakrishnan அனைவருக்கும் நன்றிகள்.