பாடல்
பாச அறிவில் பசுஅறிவில் பற்றற்கரிய பரன் யாவன்
பாச அறிவும் பசுஅறிவும் பயிலப் பணிக்கும் அவன்யாவன்
பாச அறிவும் பசுஅறிவும் பற்றி மேலாம் அறிவான
தேசன் எவன் அக்கணபதியைத் திகழச் சரணம் அடைகின்றோம்
விநாயகர் அஷ்டகம் – கச்சியப்பர்
பதவுரை
பாசம் என்பதாகி உயிர்களை அடிமை செய்யும் பொருள்களானதும் போகப் பொருள்கள் என்பதுமான தளை ஆகிய பாசமாகவும், உயிரானது, உறைவதற்கு உண்டான உடலினைப் பெறும் முன்பு அறிவு, இச்சை, செயல் என்பது எதுவும் இன்றி அறியாமையில் மூழ்கி, பதி போன்ற தோற்றமும் அழிவுமில்லாதது ஆகி பசு போன்றும் தோற்றம் கொண்டு உயர்ந்தவனாகவும், கடவுள் ஆகவும், அன்னியப் பொருளாகவும் ஆகி இருப்பவன்; அவ்வாறான பாச அறிவினையும், பசு அறிவினையும் கூட்டுவித்து அதை பொருந்துமாறு செய்பவன்; அவ்வாறான பாச அறிவினையும், பசு அறிவினையும் பற்றி அவற்றுக்கு எல்லாம் மேலானவனாக இருக்கும் பெரியோனும், ஒளிமயமாய் ஆனவனும் ஆகி சிறப்புகள் எல்லாவற்றையும் உள்ளடக்கியவனாக இருக்கும் கணபதியின் பாதங்களை அடைக்கலம் அடைகின்றோம்.
விளக்க உரை
- பதி, பசு மற்றும் பாசம் கொண்டு சைவ சித்தாந்தக் கொள்கைகள் விளக்கப்பெறுகின்றன. எனவே ஈசனும், கணபதியும் வேறு வேறு அல்ல என்பது விளங்கும்.