வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 8

உமாமகேஸ்வரஸம்வாதம்

உமை 

மானிடர்களில் சிலர் கல்வியும் ஆத்ம ஞானமும் புத்திக் கூர்மையும் பேசும் திறமை ஆகியவை பெற்றிருந்தும் ஒழுங்காக முயற்சி செய்தும் தரித்திர்களாக காணப்படுகின்றனரே அது ஏன்?

சிவன்

எந்த மனிதர்கள் முன் ஜென்மங்களில் கல்வி அறிவு பெற்றிருந்தும் யாருக்கும் ஆதரவு தராமல் இருந்தும், அன்ன தானம் செய்யாமலும் தம் காரியங்களை மட்டும் பெரிதாக எண்ணி அதை பாராட்டிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் மறு ஜென்மங்களில் அறிவும் புத்திக் கூர்மையுடன் இருந்தும் வறியவராகவே இருக்கிறனர். விதையாதது முளையாது

உமை 

மிக்க செல்வம் உள்ள மனிதர்களும், உலகின் கல்வி அறிவும்,பகுத்தறிவும், புத்தி கூர்மையும், மன உறுதி இல்லாத வீணர்களாகவே காணப்படுகின்றனர், அது ஏன்?

சிவன்

முன் ஜென்மங்களில் கல்வி அறிவு அற்றவர்களாக இருந்தும், பகுத்தறிவு அற்றவர்களாக இருந்தும், ஏழைகளுக்கு உதவி செய்து  தானம் தருமங்களை செய்பவர்கள் அடுத்து வரும் பிறப்புகளில் அதை அப்படியே அனுபவிக்கின்றனர். மனிதன் கற்றவனாக இருந்தாலும், கல்லாதவனாக இருந்தாலும் தானத்தின் பலனை அடைகிறான்.தானமானது கல்வி அறிவு பார்ப்பது இல்லை. எப்படியும் அதன் பலனை தந்து விடும்.

உமை 

மனிதர்களில் சிலர் புத்தி கூர்மை உள்ளவர்களாகவும், கேட்டதை மறவாதவர்களாகவும், வார்த்தைகளை தெளிவாக உச்சரிப்பவர்களாகவும் இருக்கின்றனரே அது ஏன்?

சிவன்

ஞானத்திற்காக குருவிற்கு நன்றாக பணிவிடை செய்து அந்த குருவிடம் இருந்து முறைப்படி வித்தைகளை கற்றுக் கொண்டு பிறருக்கும் அம்முறை தவறாமல் அதை கற்பித்தும், தன்னுடைய ஞானத்தினால் கர்வப்படாமல் மனம், வாக்கு ஆகியவற்றால் அடக்கமுள்ளவர்களாகி  கலைகள் நிலை பெறும் முயற்சியை செய்து கொண்டு இருக்கிறார்களோ அவர்கள் மரணமடைந்து அடுத்துவரும் பிறப்புகளில் புத்தி கூர்மை உள்ளவர்களாகவும், கேட்டதை மறவாதவர்களாகவும், வார்த்தைகளை தெளிவாக உச்சரிப்பவர்களாகவும் இருக்கின்றனர்

உமை 

சில மனிதர்கள் பல வகையிலும் முயற்சி செய்தும் கேள்வியும், கல்வியும் புத்தி கூர்மையும் இல்லாதவர்களாக இருக்கின்றனரே, அது ஏன்?

சிவன்

எந்த மனிதர்கள் பூர்வ ஜென்மங்களில் கல்வியினால் கர்வம் கொண்டும், தற்புகழ்ச்சி செய்து கொண்டும், ஞானம் அடைந்ததால் தான் என்ற அகங்காரத்துடன் மதி கெட்டவர்களாகி எப்பொழுது பிறரை விட தனக்கு அதிகம் வித்தை தெரியும் என சொல்லிக் கொண்டும், பிறரை இகழ்ந்தும் அவர்கள் மேல் பொறாமை கொண்டும் அப்படிப்பட்டவர்கள் அநேக ஜன்மங்களுக்குப் பின் மானிட தேகம் எடுக்கும் போது பல வகையிலும் முயற்சி செய்தும் கேள்வியும், கல்வியும் புத்தி கூர்மையும் இல்லாதவர்களாக இருக்கின்றனர்

உமை 

சில மனிதர்கள் வீடு , மனைவி மற்றும் குழந்தைகளோடும், ஆடை ஆபரணங்களோடும், சிறந்த புத்தியோடும், அதிகாரங்களோடும், அழகு ஆரோக்கியம் போன்றவைகளோடும் மனதிற்கு இனிய போகங்கள் நிரம்பியவர்களாக வியாதி இல்லாமல் சுற்றத்தாருடன் இடையூறு இல்லாமல் தினம் தோறும் மகிழ்ந்திருக்கின்றனரே, அது எந்த கர்மத்தின் பலன்?

தொடரும்..

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *