ஓவியம் : இணையம்
உமை
சில மனிதர்கள் வீடு , மனைவி மற்றும் குழந்தைகளோடும், ஆடை ஆபரணங்களோடும், சிறந்த புத்தியோடும், அதிகாரங்களோடும், அழகு ஆரோக்கியம் போன்றவைகளோடும் மனதிற்கு இனிய போகங்கள் நிரம்பியவர்களாக வியாதி இல்லாமல் சுற்றத்தாருடன் இடையூறு இல்லாமல் தினம் தோறும் மகிழ்ந்திருக்கின்றனரே, அது எந்த கர்மத்தின் பலன்?
சிவன்
முன் ஜென்மத்தில் செல்வம் உள்ளவர்களாக இருந்தும் கல்வியும் நல்ல ஒழுக்கம் உள்ளவர்களாகவும், தானத்திலும் கல்வியில் விருப்பம் உள்ளவர்களாகவும், எப்பொழுதும் பிறருக்கு விருப்பமானதை அறிந்து அதை தருபவர்களாகவும், சத்தியத்தையும், பொறுமையையும் விடாதவர்களாகவும், பொருளாசை, பெண்ணாசை இல்லாதவர்களாகவும், சரியானவர்களுக்கு முறையாக தானம் செய்பவர்களாகவும், விரதங்களை செய்பவர்களாகவும் பிறர் துன்பத்தை தன் துன்பம் போல் நினைத்து அதனை விலக்க நினைப்பவர்களாகவும், இனிய ஒழுக்கம் உள்ளவர்களாகவும், தேவர்களை எக்காலத்திலும் பூஜிப்பவர்களாகவும் இருப்பவர்கள் மறு ஜென்மத்தில் அப்புண்ணீயங்களை அனுபவிக்க மேற்கூறியவாறு பிறக்கிறார்கள். அழகு, பொருள், தைரியம், ஆயுள், சுகம் அதிகாரம், தேகபலம் மற்றும் கல்வி அனைத்தும் ஆகிய எல்லா நலங்களும் தானத்தால் உண்டாகும். எல்லாம் தவத்தாலும் தானத்தாலும் உண்டாகும் என்பதை நீ அறிந்து கொள்.
உமை
மனிதர்களில் சிலர் செல்வம் அற்றவர்களாகவும், மிகத் துயரம் உள்ளவர்களாகவும், கொடுப்பதை அனுபவிக்க இயலாதவர்களாகவும், ஆதி ஆத்மிகம், ஆதி பௌதீகம், ஆதிதெய்வீகம் ஆகிய பயம் உள்ளவர்களாகவும், பிணியாலும் பசியாலும் வருந்துபவர்களாகவும், கெட்ட மனைவியால் அவமதிக்கப்படுபவர்களாகவும். எப்பொழுதும் இடையூற்றை அனுபவிப்பர்களாகவும் காணப்படுகின்றனரே அது ஏன்?
சிவன்
மனிதர்களில் சிலர் செல்வம் அற்றவர்களாகவும், மிகத் துயரம் உள்ளவர்களாகவும், கொடுப்பதை அனுபவிக்க இயலாதவர்களாகவும், ஆதிஆத்மிகம் (மற்ற உயிர்களால் நாம் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள்), ஆதிபௌதீகம் இயற்கையினால் நான் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் (நீர், நிலம், காற்று, ஆகாயம் தீ), ஆதிதெய்வீகம் (நாம் செய்த வினைகளை இறையின் துணை கொண்டு அதை அனுபவித்தல்) ஆகிய பயம் உள்ளவர்களாகவும், பிணியாலும் பசியாலும் வருந்துபவர்களாகவும், கெட்ட மனைவியால் அவமதிக்கப்படுபவர்களாகவும். எப்பொழுதும் இடையூற்றை அனுபவிப்பர்களாகவும் காணப்படுகின்றனர். தாம் செய்த நல்வினையும் தீவினையும் முறையே சுகம் துக்கம் முதலியவற்றை உண்டாக்குகின்றன.
உமை
பிறவிக் குருடரும், பிறந்தபின் கண் போனவரும் உலகின் காணப்படுகின்றனரே அது ஏன்?
சிவன்
எந்த மனிதர்கள் காமத்தினால் பிறர் வீடுகளில் அலைந்து கொண்டும், பிறர் மனைவிகளை கெட்ட எண்ணங்களுடன் பார்த்துக் கொண்டும், கோபமும் ஆசையும் கொண்டவர்களாக மற்ற மனிதர்களின் கண்களை கெடுத்தும், பொருள்கள் பற்றி நன்கு அறிந்தும் அது மற்றி மாற்றுக் கருத்து உரைப்பவர்களாக இருக்கும் மனிதர்கள் இறந்தபின் யமனால் தண்டிக்கப்பட்டு வெகு காலம் நரகத்தில் இருந்து மானிட ஜென்மத்தை அடையும் போது பிறவிக் குருடர்களாகவும், பிறந்தபின் கண் கெட்டவர்களாகவும் கண் நோய் உடையவர்களாகவும் பிறக்கின்றனர். அதில் சந்தேகமில்லை.
உமை
சில மனிதர்கள் பிறந்தது முதல் மற்றும் சிலர் பிறந்த பின்னர் ஏதோ ஒரு காரணத்தால் பல், கழுத்து கன்னம் ஆகியவற்றில் நோயுள்ளவர்களாகவும் முகத்தில் அதிக வியாதி உடையவர்களாகவும் காணப்படுகின்றனரே அது ஏன்?
தொடரும்…