பஞ்ச பூதக் கவிதைகள் – பெண் தெய்வங்கள் முன்வைத்து – நெருப்பு
மனிதர்களால் விலக்கப்பட்டு
தனித்த பாதையொன்றில் தென் திசை
நோக்கிப் பயணிக்கிறேன்.
தடம் பதிக்கும் அடிமுன்னே
அனைத்து திசைகளும் பற்றி எரிகின்றன.
விழிநீரும் வெப்பத்தில் உலர்கின்றது..
எதிர்கொண்டு அழைக்கிறது அஞ்சன சுடரொன்று.
‘யார் நீ ‘ என்கிறேன்.
அறு நெருப்பை தோற்றுவித்தவள்,
நெருப்பாகி, நெருப்பால் அறுப்பவளும் நானே
என்கிறது அச்சுடர்
பயணச் சுமைகளால் கீழே விழ
எத்தனிக்கிறேன்.
நிலமென தாங்கிப் பிடித்து
மடியினில் இருத்துகின்றது அச்சுடர்.
பின்னொரு பொழுதுகளில்
பொன் நிறமாய் மாறுகின்றது அச்சுடர்
அப்போது
புற உலகங்கள் மட்டும்
எரிந்து கொண்டு இருக்கின்றன.