Category: பசி
மோனத்துவம்
நிகழ்விருத்தல்
காற்று தனித்திருந்தது
காற்று தனித்திருந்தது
அவ்வேளையில் ஆதியில்
சில பறவைகள்
பறந்து கொண்டிருந்தன.
மாயையின் சாரம் கொண்டிருந்த
இரு பறவைகள் தரையிரங்கின.
உதிர்ந்த ஒற்றை கிளை கொண்டு
கூடு எழுப்பின.
உறவுகளுடன் தாளமிட்டன,
சப்தமிட்டன, நீர் அருந்தின,
மாயப் பிரபஞ்சம் தனக்கானது
என்றும் கொண்டாடின.
வானில் பறந்த பிறிதொரு நாளில்
மரித்துப் போயின.
நகர விரிவாக்கத்தில்
கூடுகளும் கரைந்தன.
காற்று தனித்திருந்தது
எவ்வித தடயங்களும் இன்றி.
முடிவற்றவைகள்
நெருப்பினை சுமத்தல்
பெருங்குரலுடன் முழுவதுமான
கரு நெருப்பினை சுமந்து ஒருவன்.
என்னை அவனிடத்திலிருந்து விலகச் சொன்னான்.
‘பேசினால் மற்றவர்களையும்
அது பற்றும் என்றும்’ சொன்னான்
பிறந்தது முதல்
நெருப்பினை சுமந்திருப்படதாகச் சொன்னான்.
பிறந்த நாளில் அதன் நிறம் மஞ்சளாக
இருந்தாகவும் ,
நாள்களின் வளர்ச்சியில்
பல நெருப்புகள் சேர்ந்ததாகவும்
அது சிகப்புடன் கூடிய நீலமாகவும்
தற்போது ஒளி குறைந்து
கருமையானது என்றும் உரைத்தான்.
உரைத்த பொருள் உணர்வதற்குள்
பரவியது என்மேலும் என்னுள்ளும்.
யானை காடு திரும்பிய கதை
அடர்ந்த பெருங்காட்டிலிந்து
கனத்த சரீரத்துடன்
பெரும் யானை ஒன்று
பிளிரி ஓடிவந்தது.
ஓட்டத்திற்காண காரணம் கேட்டேன்.
‘காட்டில் உணவு இல்லை’ என்றும்
‘வற்றிய நீர் நிலைகளும்
தனக்கானவை அல்ல’ என்றும் கூறியது.
பெரு நிலத்தில்
வேளா வேளைக்கு உணவு என்றும்,
தன் குளியளுக்கு பிற ஆள் எனவும்,
வித விதமான மனிதர்கள் தினமும் எனவும்,
வாழ்க்கை வசீகரமானது எனவும்
பகன்றது.
காலத்தின் சுழற்சிதனில்
அதன் கடைநாளில்
சந்திக்கும் வாய்ப்பு நிகழ்ந்தது.
மனிதத் தேவையில்
விலங்குகளின் தேவைகள்
வெகுதூரம் என்று கூறி
காட்டை நோக்கிப் புறப்பட்டது.
தாடகை
‘எங்கு சென்றாய் என்னை
தவிர்த்தும் தன்னித்தும் விட்டு’
என்கிறேன்.
தவிர்த்தல் உன்நிலை அன்றி
எனதில்லை என்கிறாய்.
வார்த்தைகள் ரசவாதம் கொள்கின்றன.
உதடுகள் முணுமுணுக் தொடங்குகின்றன
அங்கம் ஹரே:புனகபூஷன
மாச்ரயந்தீ *
எங்கிருந்தோ வருகிறது
நெருப்பின் கங்குகள்
‘செட்டியார் கடைக்குப் போய்
நோட்ல எழுதிட்டு
சேமியா வாங்கிகிட்டு வர சொல்லு உங்கபன’.