அமுதமொழி – ஹேவிளம்பி – பங்குனி – 23 (2018)

அறிவதற்கு அரியவராய், அனைத்திலும் நிறைந்தவராய், கருணை உருவானவராய்,  கணப் பொழுதும் சிந்தையில் சிவம் பிறழா நிலைப்பவராய் ஆன என் குரு நாதரின் உத்தரவின் பேரில் இன்று முதல் ‘அமுதமொழி ‘ என்ற தலைப்பில் இனி இப்பணி தொடரும்.

அமைப்பில் இருக்கும் மாறுதல்களும் குருநாதரின் கருணையின் அடிப்படையில் அருளப்பட்டவை.

எப்பொழுதும் போல் தொடர என் குருநாதரின் அன்பினையும் ஆசிகளையும் வேண்டி தொடங்குகிறேன்.

———————————————————————————————————————————–

பாடல்

ஒத்தடங் குங்கம லத்திடை ஆயிழை
அத்தகை செய்கின்ற ஆய பெரும்பதி
மத்தடை கின்ற மனோன்மனி மங்கலி
சித்தடைக் கும்வழி தேர்ந்துண ரார்களே.

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

தன்னிடத்தில் அன்பு வைத்த அன்பர்களிடத்தில் ஒன்றி அவர்களுடன் இசைந்து, அவர்களது உள்ளத் தாமரையிலே நிற்கின்றவளும்,  அவ்வாறு நிற்கும் தன்மையில் உயர்ந்தவனும், பெரிய தலைவனாகவும் ஆன சிவனிடத்தில் நிறைந்து நிற்பவளும், மனோன்மனி தாயாகவும், என்றும் மங்களமானவளும் ஆகிய திரிபுரை நாயகி பல வகைச் சித்துக்களையும் உயிர்களிடத்தில் எவ்வாறு புரிந்து  நிற்கின்றாள் என்ற முறையை உலகர் ஆராய்ந்து அறியவில்லை.

விளக்க உரை
மத்து – நிறைவை உணர்த்தும் வடசொல்.
சித்து – அதிசயச் செயல்கள்
வழி – சிவத்தொடு நின்றே செய்தல்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – மைஞான்ற

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  மைஞான்ற

பொருள்

  • கரிய நிறம் வழிவது போலத் தங்கும்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாம் காதல்
சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன் – நிறந்திகழும்
மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே
எஞ்ஞான்று தீர்ப்ப திடர்.

பதினோராம் திருமுறை – அற்புதத் திருவந்தாதி – காரைக்காலம்மையார்

கருத்து உரை

கருமை நிறம் பொருந்திய கண்டத்தினை உடைய பெருமானாக நிற்கும் நீ, வானோர்கள் வணங்கிய உடனே அவர்களுக்கு அருள் செய்தாய்; யான் இவ்வுலகில் பிறந்து (அறியத் தக்கவற்றை அளிக்கும்) மொழியினை பயின்று பின் உன் திருவடிப் பேற்றில் அன்பு மிகுந்து நின் சேவடியே சேர்ந்தேன். என் பிறவித் துன்பத்தை எப்போது தீர்க்கப் போகிறாய்?

விளக்க உரை

  • பயின்ற பின் – பயின்று நன்கு உணர்ந்த பிறபட்டக் காலம்
  • சேர்ந்தேன் – தமது ஞானத்தின் இயல்பாக இறை அருளினால் துணையாக அடைந்தேன்
  • எஞ்ஞான்று தீர்ப்பது – அதனை அறியவில்லை எனும் பொருளில். அதாவது, `இப்பிறப்பிலோ, இனி வரும் பிறப்பிலோ` என்னும் பொருள் பற்றி

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

இறைவனின் எண்குணங்கள் யாவை?
1. தன் வயம் உடைமை, 2. தூய உடம்பு உடைமை, 3. இயற்கை உணர்வு உடைமை, 4. முற்றுணர்வு உடைமை, 5. இயல்பாகவே பாசமின்மை, 6. பேரருள் உடைமை, 7. முடிவில் ஆற்றல் உடைமை, 8. வரம்பில் இன்பம் உடைமை.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – கஞ்சம்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  கஞ்சம்

பொருள்

  • ஒருவகை அப்பம்
  • கஞ்சா
  • துளசி
  • வெண்கலம்
  • கைத்தாளம்
  • பாண்டம்
  • தாமரை
  • நீர்
  • வஞ்சனை

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

அஞ்சு முகத்தி நவ முகத்தி
   ஆறு முகத்தி சதுர் முகத்தி
அலையில் துயிலும் மால் முகத்தி
   அருண முகத்தி அம்பரத்தி
பஞ்சா ஷரத்தி பரிபுரத்தி
   பாசாங்குசத்தி நடுவனத்தி
பதுமா சனத்தி சிவபுரத்தி
   பாரத்தனத்தி திரிகுணத்தி
கஞ்ச முகத்தி கற்பகத்தி
   கருணாகரத்தி தவகுணத்தி
கயிலாசனத்தி நவகுணத்தி
   காந்தள் மலர்போல் சதுர்கரத்தி
மஞ்சு நிறத்திபரம்பரத்தி
   மதுர சிவந்தி மங்களத்தி
மயிலாபுரியில் வளரீசன்
   வாழ்வே அபயாம்பிகை தாயே!

அவயாம்பிகை சதகம் – நலத்துக்குடி கிருஷ்ண ஐயர்

கருத்து உரை

சிவனைப்போல ஐந்து முகமும், ஒன்பது சக்திகளின் முகமும், கௌமாரி நிலையில் ஆறு திருமுகமும், ப்ராமி நிலையில் நான்கு முகமும், கடலில் தூங்கும் திருமாலை ஒத்த முகமும், மகேஸ்வர நிலையில் சிவந்த முகமும், ஆகாயமே வடிவாகவும், பஞ்சாட்சரத்தை இடமாகவும், கையிலே பாசமும் ,அங்குசமும், பூமிக்கு நடுவில் இருக்கும் விந்திய அடவியில் இருக்கின்றவளும்,  தாமரையில் வீற்றிருப்பவளும்,. சிவபுரத்தை ஆட்சி செய்வவளும், கருணை மிகுந்த மார்பகங்களை கொண்டவளும், படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று தொழிலையும் செய்பவளும், தாமரை முகம் கொண்டவளும், கற்பக மரத்திற்கும் சக்தி கொடுப்பவளும், கருணை கொண்டவளும், திருக்கயிலை மலையில் ஈசனின் கூட இருப்பவளும். நவரச குணங்கள் கொண்டவளும், காந்தள் மலர் போன்ற நான்கு கரங்கள் கொண்டவளும். மேகம் போன்ற நிறம் உடையவளும், சிவந்த உதடுகள் உடையவளும் ஆன அழகான அபயாம்பிகைத்தாய் மயிலாடுதுறையில் வாழ்கின்றாள்.

விளக்க உரை

துக்கடா

சைவ சித்தாந்தம் வினா விடை

சித்தாந்தம்முடிந்த முடிவு

Loading

சமூக ஊடகங்கள்
error: Content is protected !!