அமுதமொழி – விகாரி – ஐப்பசி – 21 (2019)


பாடல்

பூதமும் கரணம் பொறிகள்ஐம் புலனும்
     பொருந்திய குணங்கள்ஒர் மூன்றும்
நாதமும் கடந்த வெளியிலே நீயும்
     நானுமாய் நிற்கும்நாள் உளதோ
வாதமும் சமய பேதமும் கடந்த
     மனோலய இன்பசா கரமே
ஏதும்ஒன்று அறியேன் யாதுநின் செயலோ
     இறைவனே ஏகநா யகனே

பட்டினத்தார்

கருத்துபுறக்கருவிகள் செயல் அற்று ஈசனுடம் தனித்திருக்கும் நிலை வேண்டும் எனும் பாடல்.

பதவுரை

இறைவனாகவும், எல்லாம் கடந்த ஒன்றாகவும் இருக்கும் நாயகனே, காற்றினை குறிக்கும் நாடிகளில் ஒன்றான வாதமும், நிலையை காட்ட வழி செய்யும் சமயத்தில் பாகுபாடு கொள்ளாமல் மன ஒடுக்கம் கொண்டு  இருக்கும் இன்பக் கடலே! மண், நீர், அனல், வளி, வான். புலன் ஆன பூதமும்,   மனம், புத்தி, சித்தம், அகங்காரம் எனும் அந்தக்கரணங்கள் நான்கும், மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய பொறிகள் ஐந்தும் இவற்றுடன் பொருந்திய மனம், புத்தி, சித்தம், அகங்காரம் எனும் அந்தக்கரணங்கள் நான்கும், சாத்விகம், இராஜசம், தாமசம்  எனும் முக்குணங்களும், ஈசனின் நவபேதமூர்த்தங்களுள் ஒன்றான நாதமும் கடந்த வெளியிலே நீயும் நானும் மட்டும் தனித்திருக்கும் நாள் உளதோ? எதுவும் யான் அறியவில்லை.  இவை அனைத்தும் உனது செயல்களே.

விளக்க உரை

  • நாதம் – சத்தம், வாத்திய ஓசை, இசைப்பாட்டு, அரைவட்டமான மந்திரலிபி, சிவபிரானது நவபேத மூர்த்தங்களுள் ஒன்று, நாதக்குமிழிலுள்ள குமிழ், சோணிதம், தலைவனையுடைமை. வீடு நாதமற்றுக் கிடக்கிறது.

 

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆடி – 29 (2019)


பாடல்

அட்டாங்க யோகமும் ஆதாரம் ஆறும் அவத்தை ஐந்தும்
விட்டேறிப் போன வெளிதனிலே வியப் பொன்று கண்டேன்
வட்டாகிச் செம்மதிப் பாலூறல் உண்டு மகிழ்ந் திருக்க
எட்டாத பேரின்பம் என்னை விழுங்கி இருக்கின்றதே

பட்டினத்தார்

கருத்து – பட்டினத்தார் தான் பெற்ற அனுபவங்களை கூறும் பாடல்.

பதவுரை

சித்தத் தன்மை அடைந்தவர்களால் அடையப் பெறுவதும், இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாகாரம், தாரணை, தியானம், சமாதி ஆகிய படிநிலைகள் கொண்ட எட்டினை தருவதும் ஆன அட்டாங்க யோகம் அடைந்து, மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாஹதம், விசுத்தி , ஆக்ஞை  ஆகிய ஆறு ஆதாரங்கள் கடந்து, உயிர் செயல்படும் நிலையைக் கூறுவதாகிய காரிய அவத்தையானது, புருவ மத்தியில் இருந்து செயல்படுவதாகிய நனவு, கண்டத்திலிருந்து செயல்படுவதாகிய கனவு, இருதயத்திலிருந்து செயல்படுவதாகிய உறக்கம், உந்தியிலிருந்து செயல்படுவதாகிய  பேருறக்கம், மூலாதாரத்திலிருந்து செயல்படுவதாகிய உயிர்ப்படக்கம் ஆகிய அவத்தைகள் ஐந்தும் கடந்து நிற்பதும் வெட்ட வெளி, சிற்றம்பலம், நடன சபை என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்பெறும் அண்ட உச்சிதனில் பெரிய வியத்தலுக்கு உரிய நிகழ்வினைக் கண்டேன்; வட்டமானதும் சந்திரனில் இருந்து விழும் துளியினை ஒத்ததாகிய பாலூறல் எனும் அமுதம் உண்டு மகிழ்ந்திருக்கும் போது உலகால் அறியப்படாது தன்னால் மட்டுமே அறியப்பட தக்கதான பேரின்பம் என்னை விழுங்கி இருக்கின்றது.

விளக்க உரை

  • யோக மரபில் கண்டத்தில் இருந்து மேலே சென்று புருவ மத்தியாகிய ஆக்கினையில் பூசித்தல் மனித நிலையில் இருந்து விலக்கி தேவர்கள், முனிவர்கள் போன்ற மேல் நிலைக்கு நம்மை அழைத்துச் செல்லும் என்பதுவும் கருத்து. மேல் விபரங்களை குரு மூலமாக அறிக.
இன்று பட்டினத்தார் குருபூசை

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆடி – 10 (2018)

பாடல்

வாதுற்ற திண்புயர் அண்ணாமலையர் மலர்ப் பதத்தைப்
போதுற்ற எப்போதும் புகலுநெஞ் சே! இந்தப் பூதலத்தில்
தீதுற்ற செல்வமென்? தேடிப் புதைத்த திரவியமென்?
காதற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே!

பட்டினத்தார்

பதவுரை

இந்த உலகினில் துன்பங்களைத் தரும் செல்வத்தினாலும், பொருள் ஈட்டி அதை யாரும் அறியாமல் மறைத்து வைக்க பயன்பாடு உடையதும், தருக்கநூல்களில் கூறப்படும் பிருத்வி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம், காலம், திக்கு, ஆன்மா, மனம் ஆகிய மூலப்பொருள்கள் ஆன இந்த உடலாலும் எந்த விதத்திலும் பயன் இல்லை. இவ்வாறான நிலை இல்லா பொருள்களான செல்வமும், உடலும் நீங்கும் போது ‘உடைந்த முனை உடைய ஊசியும்’ பயன் தராது. (ஆதலினால்)  வலிமையான தோள்களை உடைய அண்ணாமலையார் மலர் பாதத்தை எப்பொழுதும் போற்றி புகழ்ந்து கொண்டிருப்பாய் நெஞ்சமே.

விளக்க உரை

  • திரவியம் என்பதற்கு பொருள், சொத்து, பொன் எனும் பொருள்கள் இருந்தாலும், ‘தீதுற்ற செல்வமென்’ என முன் வரியில் இருப்பதாலும் திரவியத்திற்கு பொருள் எனும் கருத்து விலக்கப்பட்டுள் உடல் எனும் கருத்தில் பொருள் விளக்கப்பட்டுள்ளது.
  • 27-Jul-2018 – ஆடி – உத்திராடம் – பட்டினத்தார் குரு பூஜை

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – புகல்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  புகல்

பொருள்

  • புகுகை
  • இருப்பிடம்
  • துணை
  • பற்றுக்கோடு
  • தஞ்சம்
  • உடம்பு
  • தானியக்குதிர்
  • வழிவகை
  • போக்கு
  • சொல்
  • விருப்பம்
  • கொண்டாடுகை
  • பாடும்முறை
  • வெற்றி
  • புகழ்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

கல்லார் சிவகதை நல்லார் தமக்குக் கனவிலுமெய்
சொல்லார் பசித்தவர்க் கன்னங் கொடார் குருசொன்னபடி
நில்லார்அறத்தை நினையார்நின்னாமம் நினைவிற்சற்றும்
இல்லார் இருந்தென் இறந்தென் புகல் கச்சி ஏகம்பனே

பட்டினத்தார்

கருத்து உரை

கச்சி ஏகம்பனே, சிவனாகிய உன்னைப் பற்றிய கதைகளை கற்க மாட்டார்கள்; நல்லவர்களாக இருப்பவர்களுக்கு கனவிலும் உண்மையைச் சொல்ல மாட்டார்கள்; பசித்து வருபவர்களுக்கு அன்னம் இடமாட்டார்கள்; குரு சொன்ன சொல்படி நிற்கமாட்டார்கள்; அறவழியினை பின்பற்ற மாட்டார்கள்; பெருமைக்கு உரித்தான உனது திருநாமங்களை நினைவில் கொள்ள மாட்டார்;  இப்படிபட்ட இவர்கள் இருந்தாலும், இறந்தாலும் என்ன என சொல்வாயாக

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

நவந்தரு பேதங்களுள் உருவத்திருமேனி எது?
மகேஸ்வரன், உருத்திரன், மால், அயன்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – குலாமர்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  குலாமர்

பொருள்

  • பணத்திற்கு அடிமையானவர்கள் – உலோபிகள்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

பிறக்கும் பொழுது கொடுவந்ததில்லை; பிறந்து மண்மேல்
இறக்கும் பொழுது கொடுபோவதில்லை; இடை நடுவில்
குறிக்கும் இச்செல்வம் சிவன் தந்ததென்று கொடுக்கறியாது
இறக்கும் குலாமருக்கு என் சொல்வேன் கச்சி ஏகம்பனே!

பட்டினத்தார்

கருத்து உரை

கச்சி ஏகப்பனே!  செல்வமானது, பிறக்கும் போது கொண்டு வந்தது இல்லை. இந்தப் பூவுலகில் பிறந்து மண்ணில் இறக்கும் போது கொண்டு போவதில்லைலை. மனித வாழ்வில் இடையில் செல்வம் எனக் குறிக்கப்படும் இது சிவன் தந்தது என பிறருக்கு கொடுக்க அறியாது இறக்கும் உலோபிகளுக்கு என்ன சொல்வேன்?

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

அழித்தல் தொழில் என்பது என்ன?
தனு முதலியவற்றை மாயையில் ஒடுக்குதல்

Loading

சமூக ஊடகங்கள்