
பாடல்
காடாடு பல்கணம் சூழக் கேழற்
கடும்பின் நெடும்பகல் கான்நடந்த
வேடா மகேந்திர வெற்பா என்னும்
வினையேன் மடந்தைவிம் மாவெருவும்
சேடா என் னும் செல்வர்மூவாயிரர்
செழுஞ்சோதிஅந்தணர் செங்கைதொழும்
கோடா என் னும் குணக் குன்றே என்னும்
குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே
ஒன்பதாம் திருமுறை – திருவிசைபா – திருப்பல்லாண்டு – திருமாளிகைத் தேவர்
கருத்து – ஈசனின் பெருமைகளைப் போற்றி பாடும் பாடல்.
பதவுரை
பருவம் அடையாத பெண் துன்பமும் பித்தமும் கொண்டு அதனால் விம்முதலும், வெருவதலும் கொண்டு “சுடுகாட்டிலே கூத்தாடும் பல பூதங்களும் உருமாறிச் சூழ்ந்து வர அங்கு கூத்து நிகழ்த்துபவனே, நீண்ட பகற் பொழுது முழுவதும் விரைந்து ஓடிச் சென்ற பன்றியினை விரட்டி காட்டில் பின் தொடர்ந்த வேடனே, மகேந்திர மலைக்குத் தலைவனே, உன் திருவடிகளை ஏத்தியதால் சிறந்த ஞானப்பிரகாசம் அடைந்த மூவாயிர அந்தணர்கள் கைகளால் தொழப்படும் கூத்தனே, மனதை மயக்கும் குணக்குன்றே!” என்று மகிழ்ச்சியினை தருகின்ற தில்லை அம்பலக் கூத்தனைப் பலவாறாக விளிக்கின்றாள்.
விளக்க உரை
- வாமி – பார்வதி, துர்க்கை
- ஆச்சி – அம்மா, அக்கா, பாட்டி, ஆசானின் மனைவி
- காடுஆடு பல்கணம் – சுடுகாட்டில் உடன் ஆடுகின்ற பல பூதக் கூட்டங்கள்
- கேழற் கடும் பின் – பன்றியினது கடிதாகிய பின்னிடத்தில்
- கான் – காடு
- சேடன் – பெருமை உடையவன்
- செல்வராகிய செழுஞ்சோதி அந்தணர்கள் – சோதி வேள்வித் தீ; அதை போற்றியதால் செழுஞ் சோதி