தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருக்கூடலையாற்றூர்
- இறைவன் சுயம்பு மூர்த்தி
- பிரமனுக்கு நர்த்தனம் செய்து காட்டியவராதலின் இறைவன் நர்த்தன வல்லபேஸ்வரர்
- அகத்தியர் தான் கற்று அறிந்த வித்தைகள் அனைத்தும் மறக்காமல் இருக்க வழிபட்ட தலம்
- மணிமுத்தாறும் வெள்ளாறும் கூடும் இடத்தில் உள்ள ஊராதலின் இருப்பதால் கூடலையாற்றூர்
- சுந்தரர் இத்தலத்தை வணங்காமல் திருமுதுகுன்றம் சென்றபோது இறைவன் அந்தணராக வந்து ‘கூடலையாற்றூருக்கு வழி இஃது’ ன்று கூறி வழிகாட்டியத் தலம்
- நூற்றாண்டுகளுக்கு முன்னர் வெள்ளப்பெருக்கில் இக்கோயில் அழிந்த பிறகு, அங்கிருந்த கற்களைக் கொண்டு வந்து கட்டப்பட்ட கோயில்
- இரு அம்பாள் சந்நிதி – பராசக்தி அம்பாள் சந்நிதியில் திருநீறு, ஞானசக்தி அம்பாள் சந்நிதியில் குங்குமம் பிரசாதம்
- வெளிப்புறத்தில் அகத்தியர் சிற்பம் கொண்ட மதில்
- ஆகமத்தில் இருப்பது போல் இல்லாமல் கொடிமரம், பலிபீடம் அற்ற தலம்
- உற்சவ மூர்த்தங்களில் பிற்காலச்சேர்க்கையான சித்திரகுப்தர் (ஒரு கையில் எழுத்தாணியுடன் மறுகையில் ஏடும் கொண்ட வடிவம்)
- நவக்கிரக சந்நிதி அற்ற திருக்கோயில்
- சித்திரை முதல் மூன்று நாட்கள் மூலவரின் மேல் சூரிய ஒளி பட்டு சூரிய பூஜை
தலம் | திருக்கூடலையாற்றூர் |
பிற பெயர்கள் | தட்சிணப்பிரயாகை |
இறைவன் | நர்த்தனவல்லபேஸ்வரர் ( நெறிக்காட்டுநாதர் ) |
இறைவி | பராசக்தி , ஞானசக்தி (புரிகுழல்நாயகி) (இரு அம்பாள் சந்நிதிகள்) |
தல விருட்சம் | கல்லாலமரம் |
தீர்த்தம் | சங்கமத்தீர்த்தம் ( வெள்ளாறும் , மணிமுத்தாறும் கூடும் இடம் ) மற்றும் பிரம்ம , அகத்திய , கார்த்தியாயனர் தீர்த்தங்கள் |
விழாக்கள் | மாசி 13 நாள் பிரம்மோற்சவம் |
மாவட்டம் | கடலூர் |
திறந்திருக்கும் நேரம் / முகவரி | காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரைஅருள்மிகு நர்த்தன வல்லபேஸ்வரர் திருக்கோவில் திருக்கூடலையாற்றூர் காவலாகுடி அஞ்சல் காட்டுமன்னார் கோவில் வட்டம் கடலூர் மாவட்டம் PIN – 608702 04144-208704 , 99422-49938 |
வழிபட்டவர்கள் | |
பாடியவர்கள் | சுந்தரர் 1 பதிகம், அருணகிரிநாதர் – திருப்புகழ் 1 பாடல் |
நிர்வாகம் | |
இருப்பிடம் | சேத்தியாதோப்பு – கும்பகோணம் பாதையில், ஸ்ரீ முஷ்ணம் போகும் பாதையில் ‘காவாலகுடி’யை அடைந்து, அடுத்துள்ள கூடலையாற்றூரை அடையலாம். |
இதர குறிப்புகள் | தேவாரத் தலங்களில் 193 வதுத் தலம்
நடு நாட்டுத் தலங்களில் 3 வதுத் தலம். |
நர்த்தனவல்லபேஸ்வரர்
பராசக்தி
பாடியவர் சுந்தரர்
திருமுறை 7
பதிக எண் 85
திருமுறை எண் 8
பாடல்
மறைமுதல் வானவரும் மாலயன் இந்திரனும்
பிறைநுதல் மங்கையொடும் பேய்க்கண முஞ்சூழக்
குறள்படை யதனோடுங் கூடலை யாற்றூரில்
அறவன்இவ் வழிபோந்த அதிசயம் அறியேனே
பொருள்
வேதத்திற் சொல்லப்பட்ட தலைமைகளையுடைய பலராகிய தேவரும், அத்தேவர்க்கெல்லாம் தலைவனாகிய இந்திரனும், பேய்க்கூட்டமும் சூழ்ந்திருக்க , பிறைபோலும் நெற்றியை யுடைய உமாதேவியோடும், பூதப் படையோடும், திருக்கூடலை யாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற புண்ணியனாகிய பெருமான், இவ்வழியிடை என்முன் வந்த வியத்தகு செயலை அடியேன் அறியாது ஒழிந்தேன் என் அறியாமை!
பாடியவர் சுந்தரர்
திருமுறை 7
பதிக எண் 85
திருமுறை எண் 9
பாடல்
வேலையின் நஞ்சுண்டு விடையது தான்ஏறிப்
பாலன மென்மொழியாள் பாவையொ டும்முடனே
கோலம துருவாகிக் கூடலை யாற்றூரில்
ஆலன்இவ் வழிபோந்த அதிசயம் அறியேனே
பொருள்
திருப்பாற்கடலினை கடைந்த பொழுது அதில் இருந்து உண்டான எழுந்த நஞ்சினை உண்டவனும், விடையை ஊர்ந்து செல்பவனும், பால்போலும் இனிய மொழியை உடையவளாகிய உமா தேவியோடும் உடனாய கோலமே தனது உருவமாகக் கொண்டு திருக் கூடலையாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற ஆல்நிழற்பெருமான், இவ் வழியிடை என்முன் வந்த வியத்தகு செயலை அடியேன் அறியாது ஒழிந்தேன் என் அறியாமை!
(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)