தல வரலாறு(சுருக்கம் )/ சிறப்புகள் – திருஆமாத்தூர்
- மூலவர், சற்று இடப்புறம் சாய்ந்து காணப்படும் சுயம்பு மூர்த்தி
- ஆதி காலத்தில் பசுக்கள் கொம்பு இல்லாமல் படைக்கப்பட்டதால் தெய்வப் பசுவாகிய காமதேனுவும் மற்ற ஆனிரைகளும் தங்களை அழிக்க வரும் மிருகங்களிடம் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள கொம்புகள் வேண்டும் என்று நந்திதேவரிடம் முறையிட, அவர் வன்னி வனத்தில் சுயம்பு மூர்த்தியாக இருக்கும் அபிராமேஸ்வரர் என்ற பெயருடன் விளங்கும் சிவபெருமானை வணங்கி வழிபடும்படி கூறியபடி பசுக்கள் பல நாள் தவம் செய்து கொம்புகள் பெற்றத் தலம். (திரு+ஆ+மத்தூர்)
- பசு பூஜை செய்ததின் அடையாளமாக சுயம்பு லிங்கத்தின் மேல் சந்திர பிறை போல் வளைந்த பசுவின் கால் குளம்பின் அமைப்புடம் கூடிய சுவடு
- அகழி அமைப்பு கொண்ட கருவறை
- பூதம் தாங்குவது போன்ற அமைப்புள்ள கோமுகம்
- அன்னையவள் அபயகரம் ஒன்றும், தொடைமீது வைத்த மற்றொரு கரமுமாக மற்ற இரண்டில் தாமரையும் நீலோற்பலமுங் கொண்டு நான்கு கரங்களுடன் கூடிய திருக் காட்சி
- அன்னையின் சாபத்தால் பிருங்கி முனிவர் வன்னிமர தலவிருட்சமாக ஆனத் தலம்
- அண்ணன் தனது தம்பியை ஏமாற்றி சொத்து அபகரித்து பொய் சத்தியம் செய்து கர்வ மேலிட்டால் அன்னையை பற்றி தவறாக பேச கரும்பாம்பு கடித்து இறந்த சம்பவம் முன்னிட்டு அம்பாளின் மார்பில் பாம்பின் வால் சிற்பம்
- இராமாயணத்தில் வாலியைக் கொல்வதற்கு முன் இராமபிரானும், சுக்ரீவனும் அனுமன் சான்றாக நட்பு கொண்டபோது, இந்த வட்டப் பாறை முன் உடன்பாடு செய்துகொண்ட வட்டப் பாறை அம்மன் சன்னதி.
- சீதையைத் தேடி வந்த ராமன் வழியில் அகத்திய முனிவரைச் சந்தித்த போது அவரது வழிகாட்டுதலின் படி ஈஸ்வரனை வழிபட்டு ராவணனை வென்று சீதையை மீட்டு சீதையுடன் திரும்பியபோது, மீண்டும் இங்கு வந்து, தனது அம்பினால் ‘தண்ட தீர்த்த’த்தை உருவாக்கி அபிஷேக ஆராதனை செய்த தலம்
- தல விநாயகர் – மால் துயர் தீர்த்த விநாயகர்
- விநாயகர், பூசை செய்யும் அமைப்பில் கையில் மலருடன் சந்நிதியில் திருக்காட்சி
- தற்கால நிகழ்வு – நான்கு திருக்கரங்களுடன் கூடிய வலம்புரி விநாயகர் சிலை, தனது இடக் கை ஒன்றில் அமிர்தக் கலசம் தாங்கி தாமரை மலரில் அமர்ந்த நிலையில் காட்சி அமைப்பு
- முருகன் சூரபதுமனை அழிக்கும்முன் ஈசனையும், அம்மையையும் வழிபட்ட தலம்
- தீர்த்தம் – மதங்க முனிவரால் உருவாக்கப் பெற்றது
- ஊருக்கு வெளியே ஓடிக் கொண்டிருந்த பம்பை நதி, இரட்டைப் புலவர்கள் கலம்பகம் பாடியதால், நதி திசை மாறி ஊருக்குள் வந்து திருக்கோயிலைச் சுற்றி ஓடும் அமைப்பு
- ‘நிலாவு புகழ் திருவோத்தூர் திரு ஆமாத்தூர் நிறைநீர்..‘ என்று திருவேகம்பர் திருவந்தாதியில் பட்டினத்தடிகளால் குறிப்பிடப்பட்ட தலம்.
- ‘…அன்னமலி வயல் தடங்கள் சூழ்ந்த திரு ஆமாத்தூர்‘ என்று சேக்கிழாரால் வர்ணிக்கப்பட்ட தலம்
- மேலக்கோபுரவாயில் கல்லில் செதுக்கப்பட்ட ஜேஷ்டாதேவி உருவம் (அழிந்த நிலையில்)
- இத் தலத்திற்கு அருகில் நின்ற நிலையில் கையில் தண்டூன்றிய கோலத்தோடு, தலை மாலையுடனும் கோவணத்தொடும் காட்சிதருகின்ற வண்ணச்சரபம் அருள்மிகு தண்டபாணி சுவாமிகளின் சமாதி
தலம் | திருஆமாத்தூர் |
பிற பெயர்கள் | திருவாமாத்தூர், கோமாதபுரம் |
இறைவன் | அபிராமேஸ்வரர், அழகியநாதர் |
இறைவி | முக்தாம்பிகை, அழகியநாயகி |
தல விருட்சம் | வன்னி, கொன்றை |
தீர்த்தம் | ஆம்பலம் பூம்பொய்கை ( குளம் ) , தண்ட தீர்த்தம் ( கிணறு ) , பம்பையாறு |
விழாக்கள் | பங்குனியில் பிரம்மோற்சவம், மகாசிவராத்திரி, நவராத்திரி |
மாவட்டம் | விழுப்புரம் |
திறந்திருக்கும் நேரம் / முகவரி | காலை 7.30 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரைஅருள்மிகு அபிராமேஸ்வரர் திருக்கோவில் திருவாமாத்தூர் அஞ்சல், விழுப்புரம் வட்டம் விழுப்புரம் மாவட்டம். PIN – 60540204146-223319, 04146-223379, 98430-66252 |
வழிபட்டவர்கள் | விநாயகர், பார்வதி, அனுமன், சீதை, லட்சுமணர், நாரதர், அகத்தியர், வசிஷ்டர், துர்வாசர், பிருங்கி முனிவர், பராசரர், விஸ்வாமித்திரர், வியாசர், ரோமரிஷி, மதங்கமுனிவர், அஷ்டவசுக்கள், கோடிமுனிவர், அருணகிரிநாதர் |
பாடியவர்கள் | • திருஞானசம்பந்தர் 2 பதிகங்கள் (2ம் திருமுறை – 44 வது பதிகம், 2ம் திருமுறை – 50 வது பதிகம்),
• திருஞானசம்பந்தர் 2 பதிகங்கள் (2ம் திருமுறை – 44 வது பதிகம், 2ம் திருமுறை – 50 வது பதிகம்), • திருநாவுக்கரசர் 2 பதிகங்கள் (5ம் திருமுறை – 44 வது பதிகம், 6ம் திருமுறை – 9 வது பதிகம்), • சுந்தரர் 1 பதிகம், • பட்டினத்தார் |
நிர்வாகம் | |
இருப்பிடம் | விழுப்புரத்தில் இருந்து சுமார் 8 கிமீ தொலைவு |
இதர குறிப்புகள் | தேவாரத் தலங்களில் 211 வது தலம் நடு நாட்டுத் தலங்களில் 21 வது தலம். |
பாடியவர் திருஞானசம்பந்தர்
திருமுறை 2
பதிக எண் 44
திருமுறை எண் 1
பாடல்
துன்னம்பெய் கோவணமுந் தோலு முடையாடை
பின்னஞ் சடைமேலோர் பிள்ளை மதிசூடி
அன்னஞ்சேர் தண்கான லாமாத்தூ ரம்மான்றன்
பொன்னங் கழல்பரவாப் பொக்கமும் பொக்கமே
பொருள்
தைத்த கோவணத்தையும், யானைத் தோலையும் ஆடையாக கொண்டு பின்னல் கொண்ட சடைமீது இளம் பிறையைச் சூடி, அன்னங்கள் வாழும் குளிர்ந்த சோலைகளைக் கொண்டுள்ள திருஆமாத்தூரில் விளங்கும் இறைவனின் பொன் போன்ற அழகிய திருவடிகளைப் பரவாதவர் பொலிவு பொலிவாகுமா?
பாடியவர் திருநாவுக்கரசர்
திருமுறை 5
பதிக எண் 44
திருமுறை எண் 1
பாடல்
சந்தி யானைச் சமாதிசெய் வார்தங்கள்
புந்தி யானைப்புத் தேளிர் தொழப்படும்
அந்தி யானை ஆமாத்தூ ரழகனைச்
சிந்தி யாதவர் தீவினை யாளரே
பொருள்
காலை மாலை ஆகிய சந்தி பொழுதுகளில் வணங்கப் படுவானும், யோகநெறி உட்பட்டு தலைப்படுவாருடைய மனதில் உறைபவனும், தேவர்களால் தொழப்படுவானும், அந்தி வானத்தைப்போன்ற செம்மேனி உடையவனும் (அழகிய தீயின் உருவினன்) ஆகிய ஆமாத்தூர் அழகனைச் சிந்திக்காதவர்கள் தீவினையாளர்களே ஆவார்கள்.
(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)