அமுதமொழி – விகாரி – ஆனி – 22 (2019)


பாடல்

எவ்வடி வுகளும் தானாம் எழிற்பரை வடிவ தாகிக்
கவ்விய மலத்தான் மாவைக் கருதியே ஒடுக்கி ஆக்கிப்
பவ்வமீண் டகலப் பண்ணிப் பாரிப்பான் ஒருவ னென்றே
செவ்வையே உயிருட் காண்டல் சிவரூப மாகு மன்றே

திருநெறி 13 –  உண்மைநெறிவிளக்கம் – சீகாழி தத்துவநாதர்

கருத்து – அனைத்திலும் நீக்கமற நிறைந்து உயிர்க்குயிராய்த் நின்று இருக்கும் உயிர்களை  சிவரூபமா காணுதலை கூறும் பாடல்.

பதவுரை

சிவம் சத்தி நாதம் விந்து சதாசிவன் மயேசுரன் ருத்திரன் விஷ்ணு பிரமா மற்றுமுள்ள வடிவுகள் எல்லாம் தானே ஆகின்ற சிறந்த சிவசக்தி வடிவே தன்னுடைய வடிவாகி, வேலை கொள்வானிடத்தில் வேலை செய்பவன் நடு நடுவே இளைப்பு கண்டு இளைபாறுதல் போல் இந்த புவனியிலே அனுபவிக்க தக்க அளவில் இருக்கும் வினையின் ஒரு பகுதியை அனுபவிக்கச் செய்து மலத்தில் இருந்து துயரம் தீரும் அளவில் மாயையின் காரியத்தை ஒடுக்கி, பின் உண்டாக்கி, அந்த வழியில் நின்று கன்மங்களை தொலைப்பிக்கச் செய்து அதன் கடுமையைக் குறைத்து காப்பவனும், ஆணவ மாயை கண்ம மலங்களைப் பிடித்துக் கிடக்கும் ஆன்மாக்களையும் அந்த ஆன்மாக்கள் கொண்டிருக்கும் சஞ்சீதம், பிராப்தம் மற்றும் ஆகாமிய  வினைகளையும் அறிந்து அதனை அறிய காரணமாண  மாயா காரியமாகிய உடலும் தத்துவங்களும் கொண்டு அவைகளை அனுபவிக்கச் செய்வதான பரமேசுரனின் வடிவு பரையாகும்; இவ்வாறு உயிர்க்குயிராய்த் திருவடி ஞானமாய் நின்று அறிவிப்பதைத் திருவருளைக் காணுதல் சிவரூபமாகும்.

விளக்க உரை

  • பரை – பூட்டியின் பூட்டி, ஆறாம் தலைமுறை மூத்தப் பெண், சிவசத்தி, ஒரு அலகு
  • பாரித்தல் – பரவுதல், பருத்தல் (பேச்சு வழக்கு), மிகுதியாதல், தோன்றுதல், ஆயத்தப்படுதல்

சமூக ஊடகங்கள்