தல வரலாறு(சுருக்கம்) / சிறப்புகள் – திருவெஞ்சமாக்கூடல்
- மூலவர் சந்நிதி வாயிற்கதவுகளில் கொங்கு நாட்டிலுள்ள ஏழு தேவாரத் தலங்களின் மூல வடிவங்களும் வடிவமைக்கப்பட்டுள்ள தலம்.
- வெஞ்சமன் என்ற வேடர்குல மன்னன் அரசாண்ட தலம்
- இந்திரன் அகலிகை சாபநிவர்த்திக்காக வழிபட்டு அருள்பெற்ற தலம்
- குடகனாற்று வெள்ளப்பெருக்கால் பழைய கோயில் சிதிலமானதால் தற்போதைய நிர்மாணிக்கப்பட்டுள்ளது புதிய கோயில்
- சுந்தரரின் தேவாரப் பாடலுக்கு மகிழ்ந்து சிவபெருமான் கிழவராகவந்து, தன் இரு குமாரர்களை ஒரு மூதாட்டியிடம் ( பார்வதி தேவியே) ஈடு காட்டிப் பொன் பெற்று சுந்தரருக்கு பரிசு வழங்கியத் தலம். ( குறிப்பு – கொங்கு மண்டலச்சதகச் செய்யுள் )
- முருகப்பெருமான், ஆறு திருமுகங்களுடன் பன்னிரு திருக்கரங்களும் கொண்டு வள்ளி தெய்வானையுடன் மயில் மீது கால் வைத்தது அமர்ந்து கிழக்கு நோக்கி காட்சி
- அருகில் கருவூர் ஆனிலை தேவாரத்தலம்.
தலம் | திருவெஞ்சமாக்கூடல் |
பிற பெயர்கள் | வெஞ்சமாங்கூடலூர் |
இறைவன் | கல்யாண விகிர்தீஸ்வரர், விகிர்த நாதேஸ்வரர் |
இறைவி | பண்ணேர் மொழியம்மை, மதுரபாஷிணி, விகிர்த நாயகி) |
தல விருட்சம் | வில்வமரம் |
தீர்த்தம் | குடகனாறு, விகிர்த தீர்த்தம் |
விழாக்கள் | மாசிமகத்தில் 1௦ நாட்கள் பிரம்மோற்சவம், மார்கழி திருவாதிரை , ஐப்பசி அன்னாபிஷேகம் , திருக்கார்த்திகை , மகா சிவராத்திரி |
மாவட்டம் | கரூர் |
திறந்திருக்கும் நேரம் / முகவரி | காலை ௦7:௦௦ முதல் 12:0௦ வரை மாலை ௦4:௦௦ முதல் ௦7:3௦ வரைஅருள்மிகு விகிர்த நாதேஸ்வரர் திருக்கோவில் வெஞ்சமாங்கூடலூர் அஞ்சல் வழி மூலப்பாடி, அரவக்குறிச்சி வட்டம் கரூர் மாவட்டம். PIN – 639109 04320-238442, 04324-238442, 99435-27792, 9443362321, 9894791878 |
வழிபட்டவர்கள் | இந்திரன் |
பாடியவர்கள் | சுந்தரர் 1 பதிகம், அருணகிரிநாதர் – 1 பதிகம் |
நிர்வாகம் | |
இருப்பிடம் | கரூர் – அரவக்குறிச்சி சாலையில் 13 கிமீ தொலைவில் உள்ள சீத்தப்பட்டி சாலையில் சுமார் 8 கிமீ தூரம். மற்றைய வழிகள் – கரூர் – ஆற்றுமேடு சாலை வழி , கரூர் – திண்டுக்கல் சாலை வழி
கரூரில் இருந்து சுமார் 16 கிமீ தொலைவு |
இதர குறிப்புகள் | கொங்குநாட்டுத்தலங்களில் 7 வதுதலம். |
பண்ணேர் மொழியம்மை உடனாகிய கல்யாண விகிர்தீஸ்வரர்
பாடியவர் சுந்தரர்
திருமுறை 7
பதிக எண் 42
திருமுறை எண் 4
பாடல்
பண்ணேர்மொழி யாளையொர் பங்குடையாய்
படுகாட்டகத் தென்றுமோர் பற்றொழியாய்
தண்ணார்அகி லுந்நல சாமரையும்
அலைத்தெற்றுசிற் றாறதன் கீழ்க்கரைமேல்
மண்ணார்முழ வுங்குழ லும்மியம்ப
மடவார்நட மாடு மணியரங்கில்
விண்ணார்மதி தோய்வெஞ்ச மாக்கூடல்
விகிர்தாஅடி யேனையும் வேண்டுதியே
பொருள்
இசையின் அடிப்படை வழிவங்களில் ஒன்றான பண் போன்ற மொழியினை உடைய உமாதேவியை ஒருபாகத்தில் உடையவனே, அனைவருக்கும் இளைப்பாறுதலையும், ஒடுக்கத்தையும் தரும் சுடுகாட்டினிடத்தில் உள்ள ஒரு பற்றினை என்றும் நீங்காதவனே, குளிர்ச்சியினையும் இன்பத்தைத் தரும் அகிலையும், நல்ல கவரியையும் கொண்டு வந்து கரையில் மோதுகின்ற சிற்றாற்றின் கீழ்க்கரைமேல் உள்ளதும், மண்பொருந்திய மத்தளமும், முழவும், குழலும் ஒலிக்க, மாதர்கள் நடனம் ஆடுகின்ற அழகிய அரங்கின்மேல், வானத்தில் இருக்கும் சந்திரன் பொருந்துமாறு உடைய திருமுடியை கொண்டு திரு வெஞ்சமாக்கூடலில் எழுந்தருளியிருக்கின்ற வேறுபட்ட இயல்பினை யுடையவனே, அடியேனையும் உன் அடியாருள் ஒருவனாக விரும்பி வைத்து அருள்.
பாடியவர் சுந்தரர்
திருமுறை 7
பதிக எண் 42
திருமுறை எண் 7
பாடல்
கரிகாடிட மாஅனல் வீசிநின்று
நடமாடவல் லாய்நரை யேறுகந்தாய்
நல்லாய்நறுங் கொன்றை நயந்தவனே
படமாயிர மாம்பருத் துத்திப்பைங்கண்
பகுவாய்எயிற் றோடழ லேயுமிழும்
விடவார்அர வாவெஞ்ச மாக்கூடல்
விகிர்தாஅடி யேனையும் வேண்டுதியே
பொருள்
உடல்கள் எரிக்கப்படுவதால் கருமை நிறம் படிந்த சுடுகாட்டை இடமாக கொண்டு நெருப்பை வீசி நின்று நடனமாட வல்லவனே, ரிஷபத்தின் மீது விரும்பி ஏறி வருபவனே, இயல்பாய் பிற உயிர்களுக்கு நன்மை செய்பவனே, மணம் உடைய கொன்றை மலரை மகிழ்ந்து அணிந்தவனே, ஆயிரம் புள்ளிகளை உடைய படங்கள் பொருந்தியதும், பருத்ததும், நெருப்பு போன்ற கண்களை உடைய, பிளந்த வாயில் பற்களோடு நெருப்பை உமிழ்கின்றதும் ஆன நஞ்சினையுடைய அரிய பாம்பை அணிந்தவனே, திருவெஞ்சமாக் கூடலில் எழுந்து அருளியிருக்கின்ற இயல்பையுடையவனே, அடியேனையும் உன் சீரடியாருள் ஒருவனாக வைத்து விரும்பியருள்.
(இத் திருத்தலம் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)