அமுதமொழி – சார்வரி – ஆடி – 1 (2020)


பாடல்

பார்ப்பதற்கு நீண்டதுவாம் குறுகி வட்டம்
     பரிதிமதி யுதயமெனப் பளிங்கா காசம்
தாப்பதற்கு மூன்றுசுழி பின்னாய் நிற்கும்
     சாக்கிரத்தி னடையாளந் தாக்கிப் பாரு;
சேர்ப்பதற்குச் சுழுமுனையென் றிதற்கு நாமம்;
     திரிகோணக் குண்டலியே சிவசொ ரூபம்;
காப்பதற்கு நடுநாடி யூடே சென்று
     கால்நிறுத்திப் பிடரிவழிக் கண்ணைப் பாரே

காகபுசுண்டர் உபநிடதம்

கருத்து – சுழுமுனை பற்றிக் கூறி அதைக் காணும் முறையைக் கூறும்  பாடல்.

பதவுரை

நனவு நிலை எனப்படுவதும், ஆன்மாவின் விழிப்பு நிலை ஆனதும்,  அவத்தை ஐந்தில் ஒன்றான முதல் நிலை ஆனதும்,  ஆன்மா புருவ நடுவில் நிற்கும் அனுபவமானதும், கலாதி சேர்ந்த சகலம் எனப்படுவதும் ஆன சாக்கிர நிலையின் அடையாளமாக இருந்து மூன்று கோணங்களை உடைய ஒன்று சேர்வதாகிய குண்டலினியே சிவ சொருபமானதும், நீண்ட துவாரம் உடையதாகவும், குறுகிய வட்டம் உடையதாகவும், சூரிய சந்திரன் சேர்ந்து உதயமாகும் பிரகாசம் உடைய ஆகாசம் போலவும் மூன்று சுழி உடையதாக பின்னல் கொண்டதாகவும் இருக்கும் சுழுமுனை என்ற நாமம் உடைய  இதனை காற்றினை கும்பகத்தில் நிறுத்தி பிடரி என்படும் அண்ணாக்கு வழியாக ஞானக் கண்ணால் காண்பாயாக.

விளக்க உரை

  • கால் – மூச்சு

சித்தர் பாடல் என்பதாலும், யோக முறையில் உணரப்பட வேண்டியவை என்பதாலும், மானிடப்பிறப்பு சார்ந்ததாலும் பதவுரையில் பிழை இருக்கலாம். நிறை எனில் குருவருள்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – புரட்டாசி – 23 (2019)


பாடல்

குறியென்ற உலகத்தில் குருக்கள் தானும்
     கொடிய மறை வேதம் எலாம் கூர்ந்துபார்த்து
அறியாமல் பிரமத்தைப் பாராமல்தான்
     அகந்தையாய்ப் பெரியோரை அழும்புபேசி
விரிவான வேடம் இட்டுக் காவிபூண்டு
     வெறும் பிலுக்காய் அலைந்திடுவான் நாயைப் போலே;
பரியாச மாகவும் தான் தண்டும் ஏந்திப்
     பார்தனிலே குறடு இட்டு நடப்பான் பாரே

சித்தர் பாடல்கள் – காகபுசுண்டர்

கருத்து – போலி குருவின் தோற்றத்தினையும் அவர்களின் குண நலன்களையும் கூறி அவ்வாறான குருவினை தேர்ந்தெடுப்பதில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை கூறும் பாடல்.

பதவுரை

போலி குருவாக இருப்பவர்கள் அறிய இயலாத மறை வேதம் எல்லாம் ஓதி அதன் உட்பொருளையும் மெய் ஞானத்தினையும் உணர்ந்த பின்னும் உண்மையான பிரமத்தை அறியாதவர்கள்; மேலும் தான் எனும் அகங்காரம் கொண்டு கற்றறிந்த பெரியோர்களை தாழ்மையாக பேசுபவர்களாக இருப்பார்கள்; குருவினை போன்று  காவி உடை, யோக தண்டம் மற்றும் பாத குறடு இவைகளைக் கொண்ட தோற்றம் உடையவர்களாகவும் பகட்டான தோற்றம் உடையவர்களாகவும்  நாயைப் போல் பொருளுக்கு அலைபவர்களாகவும் இருப்பார்கள்; இவர்கள் நோக்கம் யாவும் பணம் சம்பாதிப்பதிலே குறியாக இருக்கும்.

விளக்க உரை

  • பிலுக்குதல் – விமரிசை, பகட்டான தோற்றம்;பகட்டு, ஆடம்பரம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மாசி – 2 (2019)

பாடல்

தாமென்ற உலகத்தில் மனித ரோடே
   சஞ்சாரஞ் செய்யாமற் றனித்து நில்லே
ஓமென்ற ஊண் மிகுந்து உண்டி டாதே
   ஓரமாய் வழக்கதனை உரைத்தி டாதே
ஆமென்ற அட்சரத்தை மறந்தி டாதே
   ஆயாச மாகவுந்தான் திரிந்தி டாதே
காமப்பேய் கொண்டவனோ டிணங்கி டாதே
   காரணத்தைக் கண்டுவிளை யாடு வாயே

காகபுசுண்டர்

கருத்து – அகத்திலும், புறத்திலும் நெறிமுறைகளை வகுத்துக் கொண்டு அதன்படி நடக்கும்  முறையைப் பற்றியதை விளக்கும் பாடல்

பதவுரை

மும்மலங்களில் ஒன்றான  ‘தான்’ எனும் ஆணவம் கொண்டு  இந்த உலகில் சஞ்சாரம் செய்யும் மனிதர்களுடன் திரியாமல் தனித்து நிற்பாயாக; ஆன்ம அனுபவத்தை தருவதாகிய ‘ஓம்’ எனும் மந்திரத்தை குரு உபதேசித்தபடி, குரு உபதேசித்த அளவில் கொள்வாயாக; நியாயம் சார்ந்து இருப்பவனுக்கு எதிர் அணியில் இருந்து எதுவும் உரைத்திடாதே; நெற்றி உச்சியை குறிப்பதானதும், ‘ஔம்’ * என்றும் வழங்கப்படுவதுமான அட்சரத்தை மறந்துவிடாதே; களைப்பு, அலுப்பு, சோர்வு கொண்டு  உலகில் இலக்கு இல்லாமல் திரிந்திடாதே; பேய் போன்ற காமம்  கொண்டவர்களோடு இணைந்திடாதே; மண்ணைப் பானையாக மாற்ற குயவன் என்ற நிமித்த காரணமும், மண் எனும்  உபாதான காரணம் இருப்பதை அறிந்து கொண்டு விதிக்கப்பட்ட காலம் வரையில் இந்த உலகினில் இயங்கிக் கொண்டு இருப்பாயாக.

விளக்க உரை

  • ஊண் – உண்கை; உண்ணுதல், உணவு, ஆன்மாவின் சுகதுக்கானுபவம்
  • ஆயாசம் – களைப்பு, அலுப்பு, சோர்வு
  • ஆமென்ற அட்சரம் – ‘ஔம்’ என்று கொள்ளப் பெறும். (பல அட்சரங்கள் மந்திரத் தொடர்பு உடையவை என்பதால் குரு முகமாக பெறுக)

1.

மாரப்பா ஊ -எ -ஏ-ஐ-ஒ -என்று
மகிமையுள்ள ஔம் தனிலே முடித்துப்போடு
காரப்பா பீசமிவை பதினொன்றாகும்
கண்மணியே இதைக்கடந்து மெய்யை நோக்கே

– பிருகு முனிவர்

2.

சௌம்முதல் அவ்வொடும் ஔவுடன் ஆம்கிரீம்
கௌவுமும் ஐமும் கலந்திரீம் சிரீம்என்
றொவ்வில் எழும்கிலீம் மந்திர பாதமாச்
செவ்வுள் எழுந்து சிவாயநம என்னவே.

திருமந்திரம்

முதலில் கூறியதான `ஸௌம்` என்பதோடு, `ஔம், ஆம், க்ரீம், கௌம், ஐம், ஹ்ரீம், ஸ்ரீரீம்` என்பவையும் சேர்த்துப்பின் `க்லீம்` என்பதை மந்திரத்தின் முடிவு எழுத்தாக வைத்து, ஒவ்வொரு முறையும், `சிவாய நம` என்று என்று சொன்னால்  நவாக்கரி சக்கர வழிபாடு கைவரும்.

சித்தர் பாடல் என்பதாலும், மானுடப் பிறவி சார்ந்து விளக்கம் அளிப்பதாலும் பதவுரையில் சில பொருள் மாற்றங்களும், பிழைகளும் இருக்கலாம். நிறை எனில் குருவருள்.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – அண்டவுச்சி

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  அண்டவுச்சி

பொருள்

  • கண்
  • புருவ மத்தி
  • துரியாதீதம்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

கேளப்பா கேசரமே அண்டவுச்சி
கெட்டியாய்க் கண்டவர்க்கே மவுனமாகும்
ஆளப்பா பரப்பிரம்ம யோகமேன்று
அடுக்கையிலே போதமுந்தான் உயரத்தூக்கும்
வாளப்பா கெவுனமணி விந்து நாதம்
வலுத்ததடா கெட்டியாய்த் திரண்டுபோகும்
நாளப்பா அண்டமெல்லாஞ் சுத்தியோடும்
நடனமிடும் சிலம்பொலியும் காணலாமே

காகபுசுண்டர் ஞானம்

கருத்து உரை

நமது தலைக்கு மேல் உள்ள அண்டஉச்சி எனப்படும் துரியாதீதம் கண்டு அதை மௌவுனமாகவும் உறுதியாகவும் பார்ப்பவர்களுக்கு, முத்தி பெறுவதற்குரிய வழிகளில் ஒன்றான சமாதி கூடும். பரப்பிரம யோகம் எனும் இவ்வழியினால் அண்டங்களை எல்லாம் நம் மனத்தால் சுற்றி வராலாம், நம் காதுகளில் சிலம்பொலி கேட்கும், பாரபரையின் நடனம் காணலாம். இவ்வாறு குண்டலியை சுழிமுனை நாடிவழியாக செலுத்தி பரபிரமத்துடன் இணைக்கும் செயலால் ஞானம் அல்லது பேரறிவு ஆகிய போதமும் மேன்மை பெறும். 

விளக்க உரை

  • விந்து நாதம்  வலுத்ததடா கெட்டியாய்த் திரண்டுபோகும்  –  ‘சுக்கிலம் கெட்டிப்படும்’ என்று பல இடங்களில் பதிவு இடப்பட்டிருக்கிறது. சுக்கிலம் கெட்டிப்படுதல் என்பது இடை நிலை என்பதாலும்,  யோக மரபில் இறுதி நிலை சமாதி என்பதாலும், சமாதி கண்டவர்களுக்கே இந்த அனுபவங்கள் வாய்க்கும் என்பதாலும் இங்கு சமாதி நிலை என்ற பொருளில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
  • அண்டவுச்சி என்பதற்கான பொருள் விளக்கம் அவரவர் குரு மூலமாக அறிக.

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

இறைவன் உயிரோடு கலந்த நிலைக்குப் பெயர் என்ன?
அபேதம் (பேதம் இல்லாதது)

 

(இச்சொல் சித்தர்கள் பரிபாஷைச் சொல் என்பதாலும், யோக மார்கத்துடன் சம்மந்தப்பட்டது என்பதாலும் அதை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்.)

Loading

சமூக ஊடகங்கள்