பாடல்
மூலம்
தினகர ரக்கர தங்கெடுத் தார்குரு தேசிகர்செந்
தினகர ரக்கர மாறுடை யார்தெய்வ வாரணத்தந்
தினகர ரக்கர சத்தியின் றாகிலத் தேவர்நண்ப
தினகர ரக்கர தந்தீர்வ ரீர்வர் செகமெங்குமே
சொல் பிரிவு
தினகரர் அக்க ரதம் கெடுத்தார் குரு தேசிகர்
(செந்) தி நகரர் அக்கரம் ஆறுடையார் தெய்வ ஆரண
(தந்) தி நகரர் அர கர சத்தி இன்றாகில் அத் தேவர்
(நண்ப) தி ந கர ரக்கர் அதம் தீர்வர் ஈர்வர் செகமெங்குமே
கந்தர் அந்தாதி – அருணகிரிநாதர்
பதவுரை
பன்னிரு மாதமும், சைவர்களால் ‘சிவாதித்யர்கள்’ என அழைக்கப்படும் பன்னிரு கதிர்களின் பெயர்களுடன் விளங்கும் வைகர்த்தன், விவச்சுதன், பகன், மார்த்தாண்டன், பாஸ்கரன், ரவி, லோகப்பிரகாசன், லோகசாக்ஷி, திருவிக்ரமன், ஆதித்தன், திவாகரன், அங்கிசமாலி ஆகிய சூரியனின் நேத்திரத்தையும், பல்லையும் அழித்த ஈசனுக்கு உபதேசம் செய்த ஞான ஆச்சாரியனும், செந்தூர் பதியில் இருப்பவரும், ஆறு அக்ஷரங்கள் கொண்டு அதன் ஷடாக்ஷரப் பொருளாய் இருப்பவரும், தெய்வீகமானதும், வேதங்கள் பூஜித்ததும், சர்ப்பம் போல் வடிவமுடைய திருச்செங்கோடு மலையை ஆள்பவரும் ஆகிய கந்த பிரானின், அரத்தைப் போன்ற கூர்மையான வேலாயுதம் இல்லை என்றால் தேவர்களின் சிறந்ததான அமராவதி நகரம் இல்லாமல் போயிருக்கும்;வஞ்சனையை உடைய அசுரர்கள் இறப்பைத் தவிர்த்திருந்து உலகம் முழுவதையும் நிர்மூலமாக்கி இருப்பார்கள்.
விளக்க உரை
- வேலாயுதத்தின் பெருமை கூறும் பாடல்
- வெவ்வேறு இடங்களில் குறிக்கப்படும் சூரியர்கள்
- தாத்ரு, சக்கரன், அரியமான், மித்திரன், வருணன், அம்சுமான், இரணியன், பகவான், விவச்சுவான், பூஷன், கவித்துரு, துவஷ்டன்.
- அஞ்சன், தாதா, இந்திரன், சவிதா, விச்சுவான், பகன், பருச்சனி, தோஷ்டா, மித்திரன், தோஷா, விஷ்ணு, பூஷா.
- விசுவான், அரியமா, பூஷா, துவஷா, சவிதா, பகன், தாதா, விதாதா, வருணன், மித்திரன், சுக்கிரன், உருக்கிரமன்.