அமுதமொழி – விகாரி – மார்கழி – 24 (2020)


பாடல்

சாவாது இருந்திடப் பால்கற – சிரம்
தன்னில் இருந்திடும் பால்கற
வேவாது இருந்திடப் பால்கற – வெறு
வெட்ட வெளிக்குள்ளே பால்கற

இடைக்காடர்

கருத்து – இறவாமல் இருத்தலில் பொருட்டு அமுததாரிணை எனும் பால் கறத்தல் வேண்டும் என்பதை உரைக்கும் பாடல்.

பதவுரை

இறப்பு கொள்ளுதல் எனும் மரணம் நிகழாமல் இருத்தலில் பொருட்டு சிரத்தில் இருந்து வெட்டவெளி என்றும் ஆகாயம் என்றும் நடனசபை என்றும் அழைக்கப்படும் அழைக்கப்படும் இடமாகிய அண்ணாக்கில் இருந்து பால் கறத்தல் எனும் அமுததாரிணையைப் பெற வேண்டும்.

விளக்க உரை

  • அமுததாரணை – உணவின்றி நிட்டையிலிருக்கும் மௌனயோகிக்கு ஆதரவாகத் தலையினுள்ளிருந்து பெறும் அமிர்த ஒழுக்கு
  • பால்கறத்தல் – அமுததாரணை. உயிர்கள் பசு என்பதாலும் ஞானம் அவர்களிடத்தில் மறைந்திருக்கும் என்பதாலும், பசுக்கள் தன் இயல்பாய் பால் கறத்தல் செய்ய இயல்பு அற்றவை என்பதாலும் பதி அருள்கொண்டு முயற்சியினால் அது சித்திக்கும் என்பதாலும் இவ்வாறு உரைக்கப்படுகிறது.  

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 20 (2018)

பாடல்

மும்மலம் நீக்கிட முப்பொறிக்கு எட்டாத
முப்பாழ் கிடந்ததாம் அப்பாழைச்
செம்மறி யோட்டிய வேலை மையத்தும்
சிந்தையில் வைப்பீரே கோனாரே!

இடைக்காடர்

பதவுரை

பிறவிகள் தோறும் தொடர்வதும், தீமை செய்யத் தூண்டுவதும்,  இறையை காணச் செய்யாமல் செய்வதும், நரகத்தில் கொண்டு சேர்ப்பதும், மும்மலம் னப்படுவதுமான ஆணவம், கன்மம், மாயை இவைகளை நீக்கி, மனம், வாக்கு, காயம் என்னும் மூன்று பொறிகளாகிய முப்பொறிக்கு எட்டாததும் காரணப்பாழ், காரியப்பாழ், அறிவுப்பாழ் என்றும் மாயப்பாழ், சீவப்பாழ், அருள் வெளிப்பாழ் என்றும் கூறப்படும் முப்பாழும் கடந்து, உருவம் அற்ற இடத்தில் இருக்கும் முப்பாழும் கடந்ததை புறச் செயல்கள் செய்யும் காலத்திலும்  அக சிந்தையில் வைப்பீர் கோனாரே!

விளக்க உரை

  • செம்மறி யோட்டிய வேலை – புறச் செயல் செய்கையில் அக வழிபாட்டு முறை பற்றியது இப்பாடல்
  • கோனாரே – குலத்தினை குறிப்பிடாமல் பசுக் கூட்டத்தை மேய்ப்பவன் எனும் பொருள் பற்றியது.
  • ஒப்பு நோக்க :

அருளான சத்தி அனல்வெம்மை போலப்
பொருள்அவ னாகத்தான் போதம் புணரும்
இருள்ஒளி யாய்ஈண்டும் மும்மலம் ஆகும்
தருவரு ளாநந்தி செம்பொருள் ஆகுமே

எனும் திருமந்திரப் பாடலுடனும்

வளைந்தது வில்லு விளைந்தது பூசல்
உளைந்தன முப்புரம் உந்தீபற
ஒருங்குடன் வெந்தவாறு உந்தீபற
மும்மலம் அகற்றுவான் அடிசேர, உந்திப்பற

எனும் திருவுந்தியார் பாடலுடனும் ஒப்பு நோக்கி மும்மலம் என்பதை சிந்திக்க.

சித்தர் பாடல் என்பதாலும், மானுடப் பிறவி சார்ந்து விளக்கம் அளிப்பதாலும் பதவுரையில் சில பொருள் மாற்றங்களும், பிழைகளும் இருக்கலாம். நிறை எனில் குருவருள்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 22 (2018)

 

பாடல்

தொல்லைப் பிறவியின் தொந்தமுற்ற அறவே
சோம்பலற்றுத் தவஞ் செய்யாக்கால்
எல்லையில் கடவுள் எய்தும் பலம் உமக்கு
இல்லையென்று எண்ணுவீர் கோனாரே

இடைக்காடர்

பதவுரை

உயிர்களுக்கு மூலகன்மம் எனப்படும் நுண்வினையாகவும், அதன் காரணமாகவும் தொடர்ச்சியாகவும்  ஏனைய  சஞ்சீதம் எனப்படும் பழைய வினைகளையும், பிராப்தம் ஆகிய நிகழ்கால வினைகளையும், ஆகாமியம் எனப்படும் இனிவரக் கூடிய வினைகளையும் கொண்டு ஏற்படும் பிறவி எடுத்ததால் அப்பிறவியுடன் இணைந்து வரும் மாயையாகிய மயக்கத்தில் (செயலிழக்கச் செயும் சோம்பலில்) மனத்தை இழக்காது மனமொருமைப் படுத்தி வந்த பொருள் அறியும் முயற்சியாகிய தவத்தில் ஈடுபடா விட்டால், இப்பிறவியின் முடிவில் (எல்லையில்) கடவுளாகிய மெய்ப்பொருளை அறிந்து உணர்ந்து அதனுடன் இணையும் திறன் நமக்கு கிடைக்காது என்ற உண்மையை உணர வேண்டும்.

விளக்க உரை

  • தொந்தம் – இரட்டை, புணர்ச்சி, தொடர்பு, பகை, மரபுவழிநோய், ஆயுதவகை, பழமை, நெருங்கிய பழக்கம்

 

மதனா அண்ணா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

Loading

சமூக ஊடகங்கள்