அமுதமொழி – பிலவ – புரட்டாசி – 24 (2021)


பாடல்

அத்திமதிசூடும் ஆனந்தப் பேரொளிதான்
சத்திசிவம் என்றறிந்தே – என் ஆத்தாளே
சச்சுபலங் கொண்டான்டி

அருளிய சித்தர் : அழுகணிச் சித்தர்

பதவுரை

திருநீற்றையும், வெண்மதி எனும் சந்திரனையும் சூடி ஆனந்த பேரொளி வடிவமாக இருப்பதே சக்தி சிவன் எனும் நிலையே. இவ்வாறான பூரண நிலையை முழுமையா அறியாவிட்டாலும்  சிறுமைகண்டும் எனக்கு அன்னை அருள் செய்தாள்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆனி – 12 (2019)


பாடல்

கொல்லன் உலைபோலக் கொதிக்குதடி யென்வயிறு
நில்லென்று சொன்னால் நிலைநிறுத்தக் கூடுதில்லை
நில்லென்று சொல்லியல்லோ நிலைநிறுத்த வல்லார்க்குக்
கொல்லென்று வந்தநமன் என் கண்ணம்மா!
குடியோடிப் போகானோ!

அழகணிச் சித்தர்

*கருத்துமெய்யறிவு நிலை கண்டவர்களை நமன் அணுகான் எனும் பொருள் பற்றிய பாடல்.*

பதவுரை

அடிவயிறு எனப்படுவதாகியதும், கணபதியின் இருப்பிடமானதும்  ஆன மூலாதாரத்தில் இருக்கும் குண்டலினி எனும் சக்தியானது  கொல்லனின் உலை போன்ற வெப்பமுடன் அங்கே சிறிய நாகமாக சுருண்ட நிலையில் அமைந்துள்ளது.   அந்த சக்தியை எழுப்பி அதை மற்ற ஐந்து நிலைகளான மணிபூரகம், சுவாதிஷ்டானம், அனாகதம், விசுக்தி மற்றும் ஆக்ஞா வழியாக சகஸ்ராரத்திற்குக் கொண்டு சேர்ப்பதையே பிறப்பின் நோக்கமாகக் குறிப்பிடுவர்.  இதையே சித்தர்கள் பரிபாஷையில் சாகாக் கல்வி, வாசி யோகம், தனையறிதல் எனப் பல்வேறு வகைகளில் உணர்த்துவர்.  அவ்வாறு குண்டலினி சக்தியை எழுப்பி அதை சகஸ்ராரத்தில்  நிலை நிறுத்த வல்லவர்களுக்கு மரணம் என்பது கிடையாது. இதைப் பூடகமாக  இவர்களை மாய்ப்பதற்காக அணுகும் எமன் அவர்களின் மெய்யறிவு நிலை கண்டு அந்த முயற்சியை கைவிட்டு அவ்விடத்தினின்று அகலுவான் என்று அழகணி சித்தர் விளக்குகிறார்.

விளக்க உரை

  • சித்தர்கள் பரிபாஷையில் வயிறு என்பதை அடிவயிறு என்றும் கருதலாம். இதையொட்டி மூலாதாரம் என பொருளில்  விளக்கப்பட்டுள்ளது.

விளக்க உரை எழுத உதவி செய்த மதனா அண்ணா அவர்களுக்கு நன்றி.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 18 (2018)

பாடல்

அந்தரத்தை வில்லாக்கி ஐந்தெழுத்தை யம்பாக்கி
மந்திரத்தே ரேறியல்லோ மான்வேட்டை யாடுதற்குச்
சந்திரரும் சூரியரும் தாம்போந்த காவனத்தே
வந்துவிளை யாடியல்லோ என் கண்ணம்மா!
மனமகிழ்ந்து பார்ப்பதென்றோ!

அழுகணிச் சித்தர்

பதவுரை

என் கண்ணம்மா, மனம் மகிழ்ந்து (உள்முகமாக) நோக்குவதால் அந்தரம் எனப்படும் உள்வெளியாகிய புருவத்தை வில்லாக்கி, பஞ்சாட்சரமான ஐந்து எழுத்து மந்திரத்தை அம்பாக்கி, உச்சாடனம் செய்யும் வேகத்தினை தேராக்கி, மனமாகிய மானை காவனத்தில் வேட்டையாட, சந்திர சூரிய நாடிகள் வந்து விளையாடியதால் தானே நிகழ்ந்தது.

விளக்க உரை

  • அந்தரம் – திறந்தவெளி, ஆகாசம், வெளி, உள்வெளி, இருள், ஆகாசம், நடு, இடம், இடுப்பு, நடுவுநிலை, தேவலோகம், பேதம், விபரீதம், தேவாலயம், தீமை, கூட்டம், முடிவு
  • அந்தரம் என்பதற்கு ஆகாசம், வெளி போன்றவை இருப்பினும் சித்தர்கள் பெரும்பாலும் இருப்பை தன்னுள்ளே விளக்குவதால் உள்முகமாக நோக்குதல் எனும் பொருளில் விளக்கப்பட்டுள்ளது.
  • மனமகிழ்ந்து – ஆத்மார்த்தமாக உணர்தல்

 

சித்தர் பாடல் என்பதாலும், பக்தி நிலையில் இருந்து எழுதியதாலும், அவர்களின் உள் அனுபவங்களை மானுடப் பிறவி சார்ந்து விளக்கம் அளிப்பதால் பதவுரையில் சில பொருள் மாற்றங்களும், பிழைகளும் இருக்கலாம். நிறை எனில் குருவருள்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆவணி – 21 (2018)

பாடல்

வாழைப் பழந்தின்றால் வாய்நோகு மென்று சொல்லித்
தாழைப் பழந்தின்று சாவெனக்கு வந்ததடி
தாழைப் பழத்தைவிட்டுச் சாகாமற் சாகவல்லோ
வாழைப் பழந்தின்றால் என் கண்ணம்மா
வாழ்வெனக்கு வாராதோ

அழுகணிச் சித்தர்

பதவுரை

எனும் சக்தி எழுத்தினை முன்வைத்து வகாரமாகிய அருள் எனவும்வசியம் அருளுவதாகிய  ‘வயநமசி‘  என்று உச்சரிப்பினை முன் வைத்து உச்சரிப்பதையும் விடுத்து மற்றைய ஏனைய மந்திரங்களை கொண்டு உச்சரிக்கிற முறைமையை விட்டுப் பஞ்சாட்சரத்தினுடைய சொரூபத்தை அறியாமல் உச்சரித்ததால்  மரணம் எனக்கு ஏற்பட்டது. அவ்வாறான அருளப்படாத மந்திர உச்சரிப்புகளை விட்டு சாகாமல் சாதல் ஆகிய சமாதி நிலையை அருளும் வகார எழுத்தினை கொண்டு விட்டால் வாழ்வு எனக்கு வரமால் இருக்குமா?

விளக்க உரை

  • வாழை – முக்கனி, அசோகம், அசோணம், அற்பருத்தம், அம்பணம், கவர், சேகிலி, அரம்பை, கதலி, பனசம், கோள், வீரை, வான்பயிர், ஓசை, அரேசிகம், கதலம், காட்டிலம், சமி, தென்னி, நத்தம், மஞ்சிபலை, மிருத்தியுபலை, பானுபலை, பிச்சை, புட்பம், நீர்வாகை, நீர்வாழை, மட்டம், முண்டகம், மோசம், வங்காளி, வல்லம், வனலட்சுமி, விசாலம், விலாசம்

( சித்தர் பாடல் பொருள் விளக்கம் அத்தனை எளிதானது அல்ல என்பதாலும், மானிடப் பிறப்பு பிழை உடையது என்பதாலும் எழுத்துக்களில், கருத்துக்களில் பிழை நேரலாம். அது என் பிழை. நிறை எனில் அது குருவருள்)

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆவணி – 14 (2018)

இது 1201 பதிவு. (பதிவு செய்யப்பட்டவை மட்டும்)
மொத்த பார்வையாளர்கள் 2,06,000 த்திற்கும் மேல்.

வாசிப்பு மிகப் பெரிய அனுபவமாக இருக்கிறது. மிகுந்த சிரமங்களுக்கு இடையில் பாடலைப் படித்து கருத்துக்களை உள்வாங்கி, அதை பதம் பிரித்து எழுதுவது என்பது பகிர முடியா அனுபவமாகவே இருக்கிறது.

ஒவ்வொரு தேடலும் மிகப் பெரிய அனுபங்களை வழங்கிச் செல்கிறது. ‘இப்படிக் கூட யோசிக்க முடியுமா’ என்றும், ‘இத்தனை அழகாக நமக்காக ஏற்கனவே எழுதி இருக்கிறார்களே’ என்றும் பல பிரமிப்புகளை வழங்கிச் செல்கிறது. சில நாட்களுக்கு 5 மணி நேரங்களுக்கு மேல் தேவைப்பட்டிருக்கிறது.

உணரப்படவேண்டியவை என்பது எதிரே கடல் போலவும், நிஜத்திலே கடற்கரை ஓரத்தில் வேடிக்கை பார்ப்பவனுமான அனுபவமாகவே இருக்கிறது.

‘என் செயல் யாதொன்றுமிலை எனப் பெற்றேன்’ என்பதே நிஜம். இத்தனையும் என் குரு நாதர் அருளினால் மட்டுமே நடக்கிறது என்பதும் நிஜம். அவர் இத் தேகத்தை கருவியாக ஆக்கவில்லை எனில் இந்த மொழி ஆக்கங்களும், வெளிப்பாடுகளும் நிகழ்ந்து இருக்கா.

வாசிக்கும் அனைவருக்கும் நன்றிகள். குரு அருளும், திருஅருளும் நம்மைக் காக்கட்டும்.

 

பாடல்

சம்பா அரிசியடி சாதம் சமைத்திருக்க!
உண்பாய் நீயென்று சொல்லி உழக்குழக்கு நெய்வார்த்து
முத்துப் போலன்னமிட்டு முப்பழமும் சர்க்கரையும்
தித்திக்குந் தேனாமிர்தம் என் கண்ணம்மா!
தின்றுகளைப் பாரேனோ!

அழுகணிச் சித்தர்

பதவுரை

அரிசி வகைகளில் மிக உயர்ந்த சம்பா அரிசியை நன்கு சமைத்து அதனுடன் நெய் சேர்த்து முத்து முத்தாக உண்ணுதற்கு வைப்பது போல் எண்பத்தி நான்காயிரம் யோனிப் பிறப்புகளில் உயர்ந்ததான மானுடப் பிறப்பை நல்ல சாதனைகள் சேர்த்து அர்ப்பணித்தலுக்கு தயாராக வைக்க அதை ஏற்று முப்பழத்துடன் சர்க்கரை சேர்த்துப் படைத்து மானிடர்களால்  தேனமிர்தம் என்றறியப் படுவதை மிகுந்த சுவையுடைய  சகஸ்ராரத்தினின்று வடிந்து அண்ணாக்கினால் சுவைக்கப் படும் அமிர்தத்தை சுவைத்து செயல்களொழித்து சும்மா இருக்கும் நிலை வேண்டுகிறார்.

விளக்க உரை

  • ஊட்டி வளர்க்கும் இவ்வுடல் ஓர் மாயை என்று உணர்ந்த சித்தர் பெருமக்கள் இவ்வூணெடுத்த காரணம் இதை சகஸ்ராரத்தில் சுடராய் விளங்கும் வாலையன்னைக்கு அர்ப்பணித்தலே என்ற உண்மையை தெளிவாக அறிந்திருந்தனர். இதில் அர்ப்பணிப்பு என்பது உடல் தன்னது என்ற மாயை விலக்குதலே ஆகும். இந்தக் கருத்தை ஒற்றியே அழகணி சித்தர் இப்பாடலை இயற்றியிருக்க வேண்டும்.
  • இதையே ஶ்ரீ ரமண மகரிஷி அவர்களும் சாப்பாடுனையே சார்ந்துணவாவேன் சாந்தமாய் போவென் அருணாசலா என்று பாடியுள்ளார்.

பாடல் எளிதாக தோன்றினாலும் அதன் உட்பொருளை உரைத்த மதனா அண்ணா அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 17 (2018)

பாடல்

காட்டானை மேலேறிக் கடைத்தெருவே போகையிலே
நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்ப்பதென்றோ
நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்த்தாலும்
காட்டானை மேலேறி என் கண்ணம்மா!
கண்குளிரக் காண்பேனோ

அழுகணிச் சித்தர்

பதவுரை

உலகியல் உருவமாகிய தூலத்தை மட்டும் காட்டுவது கண்கள், அவைகள் சூக்குமமாகிய இறைவன் தன்னைப்பற்றி காட்டுவது இல்லை. சிறப்புக்கள் பலவற்றை தன்னுள் கொண்ட இறைவனை உணர விரும்பி யோக மார்கத்தில் மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சக்தியை சகஸ்ராரத்தில் பிரம்மரந்திரத்தில் உள்ள சிவனுடன் இணைப்பதற்காக மேலே ஏற்றி தவம் இயற்றும் பொழுது உலகியலை எப்போதும் நாடும் நாட்டார் எனப்படும் மனம் புன்னகைத்து செய்து நம்மை திசை திருப்ப முயலும். அப்படிப்பட்டதான  ஆதி அந்தமான கண்ணாகிய ஆன்மா தன் இருப்பிடமான மேல் உச்சி தனை உள்ளிருந்து நோக்கும் போது, தன் உண்மை உருவை காட்டாதவனை கண்டு  மனம் நமைப் பார்த்து நகைத்தாலும், அதை அடக்கி கண்களை மேலேற்றி ஆன்மாவின் ஜோதி தரிசனத்தை கண்குளிரக் காண்பேனோ?

(சித்தர்கள் பாடல் என்பதால் இப் பாடலை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்.)

சமூக ஊடகங்கள்