உமை :
தர்மம் செய்யப்பட்ட அளவையும் அதன் பலன்களையும் உரைக்க வேண்டும்.
மகேஸ்வரர் :
ஒரு கோடி தனமுள்ளவன் அதனைக் கொடுப்பதாலும், ஒரு படி தானியம் உள்ளவன் அதைக் கொடுப்பதாலும் பெரும் பலன்களை அடைகிறார்கள். இரண்டுக்கான பலனும் சமமானதே. தன் சக்திக்கு குறைவாகக் கொடுப்பது மத்தியம். மிகக் குறைவாகக் கொடுக்கப்படுவது அதமம் என்று உரைக்கப்படுகின்றது.
தான பலன் 5 வகைப்படும்
- ஆனந்த்யம் – கொடுக்க மனம் வராததை உத்தமருக்கு கொடுப்பது. இதனால் நீண்ட காலம் தேவலோகத்தில் வசித்தல் பலனாகும்.
- மகத்து – கொடுப்பவன், கொடுக்கப்படும் பொருள், வாங்குபவன், கொடுக்கும் வகை, இடம், காலம் ஆகிய ஆறு குணங்களும் பொருந்திய தானம். ஸ்வர்க்க லோகத்தில் வசித்தல் பலனாகும்.
- சமம் – வாங்குபவன் தகுதிக்கு தகுந்தபடி சிரத்தையுடன் செய்யப்படும் தானம். மானிட லோகத்தில் போகம் பெறுதல் பலனாகும்.
- ஹீனம் – ஆறு குணங்களில் சில குறைந்திருக்கும் தானம். மிலேச்ச தேசத்தில் பிறத்தல் பலனாகும்.
- பாதகம் – ஆறு குணங்களும் இல்லாத தானம். நரகம் அடைதல் பலனாகும்.
உமை :
பாதகமான தர்மத்திற்கும் நல்ல பலன் கிடைப்பது எப்படி?
மகேஷ்வரர் :
மன உண்மையோடும் தயையோடும் செய்யப்படும் தர்மம் சுத்தமான தர்மம் ஆகும். எந்த தானங்களையும் அன்புடன் கொடுப்பதால் அதன் பலன்களை அடையலாம். எல்லா தானங்களுக்கும் இதுவே சாரம் என்று அறிவாயாக.
தோட்டங்கள், தேவாலயங்கள் அமைத்தல் , தீர்த்தங்களில் துறைகள் அமைத்தல், கிணறு வெட்டுதல், பசுமடம் அமைத்தல், தடாகம் அமைத்தல், சபைகள் அமைத்தல், சன்னியாசிகள் தங்க இடம் அமைத்தல், நோயாளிக்கும் மருத்துவம் பார்த்தல், அநாதைகளைக் காப்பது, அநாதைப் பிணங்களை எரிப்பது, தன்னால் இயன்றவரை பிறரை துன்பத்தில் இருந்து காப்பது ஆகியவை சாதுக்களால் செய்யப்படும் மற்ற தர்ம காரியங்கள் ஆகும்.