பாடல்
வண்டாடு பூங்குழலாள் பாகன் கண்டாய்
மறைக்காட் டுறையு மணாளன் கண்டாய்
பண்டாடு பழவினைநோய் தீர்ப்பான் கண்டாய்
பரலோக நெறிகாட்டும் பரமன் கண்டாய்
செண்டாடி அவுணர்புரஞ் செற்றான் கண்டாய்
திருவாரூர்த் திருமூலட் டானன் கண்டாய்
கொண்டாடும் அடியவர்தம் மனத்தான் கண்டாய்
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் தானே
ஆறாம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்
கருத்து – அன்னையினை பாகம் கொண்டு எழுந்து அருளும் திருக்கோடிகா திருத்தலம் பற்றி உரைக்கும் பாடல்
பதவுரை
திருக்கோடிகாவில் விரும்பி உறையும் அழகனானவன் வண்டுகள் மொய்க்கும் பூக்கள் அணிந்த குழலையுடைய உமாதேவியின் பாகனாயும், திருமறைக் காட்டில் வாழும் அழகு கொண்டவனாகவும் , பன் நெடுங்காலமாய் செய்த வினையான் வரும் பழைய வினையாகிய பிறவித் துன்பத்தைத் தீர்ப்பவனாயும், வீட்டுலக வழியை உணர்த்தும் பரமனாகவும், கூர்மை கொண்டு ஆடும் ஆட்டம் போல இயல்பாக எவ்வகை வருத்தமுமின்றிப் பகைவர் புரங்களை அழித்தவனாகவும், திருவாரூர் மூலட்டானத்தினனாய் விளங்குபனாகவும் ஆவான்.
விளக்க உரை
- மணாளன் – அழகன்
- பண்டு ஆடு – முற்பிறப்பில் செய்த பழவினை
- பரலோகம் – எல்லா உலகங்களினும் மேலாய உலகம், வீட்டுலகம்; இறைவனது திருவருள்
- பரமன் – யாவர்க்கும் மேலானவன்
- பரலோக நெறி காட்டும் பரமன் – பரலோகத்தை அடையும் பொழுது உடம்பும் இல்லாது அருளே வடிவாகிய சிவபிரானை உணரும் உணர்வே கொண்டவனாகவும் , அவ்வுணர்வும் அவன் தந்தால் மட்டுமெ பெற முடியும் என்பதும் பெறப்படும்
- செண்டாடி – செண்டாடுதல்போல உழற்றி
- கொண்டாடும் – பாராட்டுகின்ற