
பாடல்
கானலைமான் நீரெனவே கண்டு செல்லல்போல்
காசினிவாழ் வினைமூடர் கண்டு களிப்பார்
மேனிலைகண் டார்கள் வீணாய் வீம்பு பேசிடார்
மெய்யன்பதம் நாடுவாரென் றாடாய் பாம்பே
பாம்பாட்டிச் சித்தர்
கருத்து – நிலை இல்லா வாழ்வினை கண்டு வீண் பேச்சு பேசாமல் இருந்து இறைவனை நினைக்கும் நிலையை உரைத்தது.
பதவுரை
கானல் நீரைக் கண்டு மான் ஏமார்ந்து செல்வது போல, மூடர்கள், நிலை இல்லாத இந்த உலக வாழ்வினை கண்டு மகிழ்ந்து அதில் களித்து இருப்பார்கள். மெய்யான மேனிலையைக் கண்டவர்கள் வீணாக வீம்பாக பேசாமல் நிலைபெற்றதும், உண்மையானதுமான இறைவன் திருவடிகளை நாடுவார்கள் என்று ஆடுபாம்பே.