பாடல்
தெளிந்தார் கலங்கினும் நீ கலங்காதே
அளித்து ஆங்கு அடைவது எம் ஆதிப் பிரானை
விளிந்தான் அது தக்கன் வேள்வியை வீயச்
சுளிந்தாங்கு அருள் செய்த தூய் மொழியானே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
பதவுரை
சிவபெருமானை இகழ்ந்தமையால், அப்பொழுதே இறந்தவனாகிய தக்கனது வேள்வியை அழியுமாறு செய்தும், பின் இறைவனால் தடுத்து ஆட்கொள்ளப்பட்டு, அழிந்த அனைவரையும் மீண்டு எழுமாறு வாழ்த்தியும் அருளிச் செய்த வாய்மையை உடைய எங்கள் உமாதேவியே, யார் தங்கள் மனத் துணிவை இழந்து, நிலைகலங்கி, பிறரைச் சார்ந்து இருந்த போதிலும், நீ உன்னுடைய நிலை கலங்காமலே நின்று அன்போடு அணைவது எங்கள் சிவபெருமானையே அன்றோ!
விளக்க உரை
- இறை அருளோடு செய்யப்படும் வேள்வியின் தத்துவம் மற்றும் அவற்றின் பலன் குறித்தது இப்பாடல்.
- அளிந்து – குழைந்து
- சுளிந்து – வெகுண்டு
- தூய் மொழியாள் : உமை.
- தக்கன் வேள்வி, உமை அம்மை அறிவுரை, வீர பத்திரர் தோற்றம் போன்றவற்றை கந்த புராணம் மூலம் அறிக.