சைவத் திருத்தலங்கள் 274 – திருநணா

தல வரலாறு(சுருக்கம்) /  சிறப்புகள் – திருநணா

  • இறைவன் சுயம்பு மூர்த்தி
  • சோமாஸ்கந்த வடிவம் கொண்ட திருக்கோயில்
  • நாககிரி, சங்ககிரி, மங்களகிரி, வேதகிரி என்ற நான்கு மலைகளுக்கு நடுவில் பத்மகிரி மலையில் அமைந்துள்ள திருத்தலம்.
  • தேவர்களும், அசுரர்களும் திருமாலின் உதவியோடு பாற்கடலைக் கடைந்து இறுதியில் அமுதம் எடுத்தப் பின் பராசர முனிவர்  நாராயணனிடமிருந்து சிறிது அமுதத்தைப் பெற்று வரும்போது,  வழியில் அசுர்கள் அந்த அமுத்தை அவரிடமிருந்து பறிக்க முற்படுகையில் பவானி கூடுதுறையில் காயத்ரி தீர்த்தம் என்று ஒரு தீர்த்த கட்டத்தில் அமுதம் கொண்ட கலசத்தைப் புதைத்து வைத்துவிட்டதால், அந்த  அமுதமே பின்பு  காயத்ரி லிங்கம் என்று லிங்க உருவாக மாறி இருக்கிறது.
  • திருஞானசம்பந்தர் இத் திருதலத்திற்கு வருகை தந்த போது அவருடைய அடியார்களை ஜுரநோய் பீடிக்க, இங்குள்ள மூன்று கால்கள், மூன்று கைகள், மூன்று தலைகளுடன் கூடிய ஜ்வரஹரேஸ்வரரை வழிபட்டு அவர்கள் நோய் நீங்கப் பெற்றத் திருத்தலம்.
  • பள்ளியறையில் தந்தந்தினாலான ஊஞ்சலில் அம்மை
  • வேதங்களுக்கு தலைவியாக விளங்குவதாலும், நான்கு வேதங்களால் பூஜை செய்யப்பட்டதாலும் வேதவல்லி எனும் திருநாமத்துடன் அம்பாள்
  • பவானி ஆறு, கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி காவிரி இவைகள் சேருமிடத்தில் இத்தலம்அமைந்துள்ளதால் இத்தலம் தென்திரிவேணி சங்கமம்
  • விஸ்வாமித்திர முனிவரால் காயத்ரி மந்திரம் சொல்லி பிரதிஷ்டை செய்யப்பட்டதால் காயத்ரி லிங்கேஸ்வரர்
  • வழிபடுவோருக்கு யாதொரு தீங்கும் நிகழா வண்ணம் காக்கும் (நண்ணுதல் – கிட்டுதல்) பதி என்பதால் நணா.
  • மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றால் ஆகியவற்றால் அழைக்கப்படும் திருத்தலம்.(பவானி)
  • குபேரன், பல திருத் தலங்களை தரிசித்தப்பின் இங்கு வந்த போது அனைத்து உயிர்களும் எவ்வித பேதமும் இல்லாமல் ஒன்றாக இருப்பது கண்டு தவம் செய்து சிவன், திருமால் ஆகியோரால் தரிசனம் கிடைக்கப்பெற்று ‘ பக்தர்களுக்கு வேண்டிய வரம் அருள வேண்டும்’ என வேண்டிப் பெற்றத் திருத்தலம். (தட்சண அளகை)
  • இராவணன் வழிபாடு செய்தது சகஸ்ரலிங்கம்
  • வேணு கோபாலர் சன்னதிக்குப் பின் ஒரு உடல், இரு தலைகளுடன் பசுக் காட்சி
  • வில்லியம் காரோ என்ற ஆங்கிலேயர் கலெக்டராக இருந்த போது (1802ம் ஆண்டு) அம்பிகையை காணும் தீராத ஆவலால் அம்பிகை சந்நதிக்கு நேரே இருந்த மதிலில் மூன்று துவாரங்கள் செய்து அத்துவாரங்கள் வழியே அலங்கரிக்கப்பட்ட அம்பிகையை தரிசித்ததன் பலனாக தன் இருப்பிடத்தில் தனியாக உறங்கிக் கொண்டிருந்த போது கூரை இடிந்து விழும் முன் அவர் கனவில் அம்பிகை வேதநாயகியைப் போலத் தோற்றம் கொண்டிருந்த ஒரு பெண் தோன்றி, ‘பங்களாவைவிட்டு உடனே வெளியேறு’ என்று ஆணையிட்டு காப்பாற்றிய பெருமை கொண்ட தலம். ( நன்றி காணிக்கை – தந்தத்தினால் ஆன கட்டில்)
  • சைவ வைணவ ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்கட்டாக ஆதிகேசவப் பெருமாள், சௌந்திரவல்லி தாயார் ஆகியோருக்கு தனி சந்நிதிகள்
  • மாசி மாதம் மூன்றாவது நாளில் சங்கமேஸ்வரர், வேதநாயகி, சுப்பிரமணியர் ஆகிய மூவருக்கும் சூரிய வழிபாடு நடைபெறும் திருத்தலம்.
  • ஆறு காலப் பூஜைகள் நடைபெறும் திருக்கோயில்
  • நூல்கள்
  1. கூடற்புறான வசனம் – புலவர் கு.குமாரசாமிப் பிள்ளை
  2. பவானிப் பதிற்றுப்பத்தந்தாதி – புலவர் கு.குமாரசாமிப் பிள்ளை
  3. பவானி வேதநாயகி அம்மன் பிள்ளைத்தமிழ் – திருமுகவூர் மு.ரா. கந்தசாமிக்கவிராயர்
  4. கலம்பகம்
  5. உலா
  • ஓலைச்சுவடி
  1. வேதநாயகி அம்மன் சதகம்

 

தலம் திருநணா
பிற பெயர்கள் பவானி, பவானி கூடல், பவானி முக்கூடல், தென்திரிவேணி சங்கமம், வதரிகாசிரமம், பதரிவனம், தட்சிண பிரயாகை, பூவானி நாடு, சங்கமக்ஷேத்ரம், பராசரக்ஷேத்ரம், வக்கிரபுரம், வீரபுரம், விஜயாபுரி
இறைவன் சங்கமேஸ்வரர், அளகேசன், சங்கமநாதர், மருத்துவ லிங்கம், வாணிலிங்கேஸ்வரர், வக்கிரேஸ்வரன், நட்டாற்றீஸ்வரன், திருநண்ணாவுடையார், சங்கமுகநாதேஸ்வரர், காயத்ரி லிங்கேஸ்வரர்
இறைவி வேதாம்பிகை, வேதநாயகி, பவானி, சங்கமேஸ்வரி, பண்ணார் மொழியம்மை, பந்தார் விரலம்மை, வக்கிரேஸ்வரி, மருத்துவ நாயகி
தல விருட்சம் இலந்தை
தீர்த்தம் பவானி மற்றும் காவிரி ஆறுகள் சங்கமம், காயத்ரி தீர்த்தம், சாவித்திரி தீர்த்தம், தேவ தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், சக்கர தீர்த்தம், சூரிய தீர்த்தம்
விழாக்கள் ஆடிப்பெருக்கு, சித்ரா பௌர்ணமி, ரத சப்தமி, ஆடி அமாவாசை, தை அமாவாசை, கிரகண காலங்கள்
மாவட்டம் ஈரோடு
திறந்திருக்கும் நேரம் / முகவரி காலை 6:00 மணி முதல் – 01:00 மணி வரை
மாலை 4:00 மணி முதல் – 08:30 மணி வரைஅருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோவில்
பவானி, ஈரோடு மாவட்டம் – 638301
04256 – 230192, 09843248588.
வழிபட்டவர்கள் திருமால், குபேரன், விஸ்வாமித்திரர், பராசரர்
பாடியவர்கள் அருணகிரிநாதர், திருஞானசம்பந்தர் 1 பதிகம்
நிர்வாகம்
இருப்பிடம் சேலத்தில் இருந்து 56 கிமீ தொலைவு, ஈரோட்டில் இருந்து சுமார் 15 கிமீ தொலைவு
இதர குறிப்புகள் தேவாரத் தலங்களில் 207 வது தலம்
கொங்கு நாட்டுத் தலங்களில் வது தலம்.

 

 

 

பாடியவர்           திருஞானசம்பந்தர்
திருமுறை         2
பதிக எண்           72
திருமுறை எண்  2

 

பாடல்

நாட்டம் பொலிந்திலங்கு நெற்றியினான் மற்றொருகை வீணையேந்தி
ஈட்டுந் துயரறுக்கு மெம்மா னிடம்போலும் இலைசூழ்கானில்
ஓட்டந் தருமருவி வீழும் விசைகாட்ட முந்தூழோசைச்
சேட்டார் மணிக ளணியுந் திரைசேர்க்குந் திருநணாவே

பொருள்

அழகிய கண்ணான நெற்றிக்கண் பொலிந்து விளங்கும் நெற்றியினை உடையவரும், ஒருகையில் வீணை ஏந்தியவரும், ஆகாமியகன்மம் முதல் சஞ்சிதம்  பிராரப்தம் வரையிலான  பழைய வினைத் தொகுப்பினைத் தீர்த்து அருள்பவரும் ஆகிய எம் இறைவன் உறையும் இடம், இலைகள் அடர்ந்த காட்டில் வேகமானதும், இசை போல் ஒலிப்பதுமான அருவிகளுடன் கூடியதும், மூங்கில்கள் உராய்ந்து ஓசை எழுப்புவதும்,  கரைபுரளும் அலைகள் வழியே சேர்க்கும் திருநணாவாகும்.

 

 

 

 

பாடியவர்           திருஞானசம்பந்தர்
திருமுறை         2
பதிக எண்           72
திருமுறை எண்  8

 

பாடல்

மன்னீ ரிலங்கையர்தங் கோமான் வலிதொலைய விரலாலூன்றி
முந்நீர்க் கடனஞ்சை யுண்டார்க் கிடம்போலு முனைசேர்சீயம்
அன்னீர் மைகுன்றி யழலால் விழிகுறைய வழியுமுன்றிற்
செந்நீர் பரப்பச் சிறந்து கரியொளிக்குந் திருநணாவே

பொருள்

மன்நீர் எனப்படும் பெருகிய கடல் நீரால் சூழப்பட்ட இலங்கை மன்னன் இராவணனின் வலிமை அழியுமாறு கால் விரலை ஊன்றி அவனை வருந்தச் செய்தவரும், கடலிடையே தோன்றிய நஞ்சினை உண்டவருமாகிய சிவபெருமானுக்குரிய இடம், பகை கொண்டும், கோபம் கொண்டும் மலைக்குகையில் வாழும் சிங்கம் தன் தன்மைகுன்றி அதனோடு போரிட்டு முற்றத்தில் படிந்த அதனது குருதியைக் கண்டு தன் வலிமையில் பெருமை பெற்ற யானை சென்று மறையும் திருநணாவாகும்.

 

(இத் திருத்தலம் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

2 thoughts on “சைவத் திருத்தலங்கள் 274 – திருநணா”

  1. மிகவும் மகிழ்ச்சியான பதிவு 👍

    1. மிக்க மகிழ்ச்சி, தொடர்ந்து வாசிக்கவும்.

Leave a Reply to அரிஷ்டநேமி Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!