பாடல்
மூர்த்தி ஆகித் தலம் ஆகி முந்நீர் கங்கை முதலான
தீர்த்தம் ஆகி அறிந்தறியாத் திறத்தினாலும் உயிர்க்கு நலம்
ஆர்த்தி நாளும் அறியாமை அகற்றி அறிவிப்பான் எவன் அப்
போர்த்த கருணைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம்
விநாயகர் அஷ்டகம் – கச்சியப்பர்
பதவுரை
மூர்த்தி, தலம், கடல் போன்ற கங்கை (தீர்த்தம்) ஆகியவற்றால் ஆனவனாகவும், அவனை அறியாதவனாக இருப்பினும் உயிர்களுக்கு நித்தமும் நன்மையை அளிப்பவனாகவும், அறியாமையை அகற்றி (தன்னை) அறிப்பவனும் ஆகிய எவனோ அந்த கருணை கணபதியினை புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.
விளக்க உரை
- சைவ நெறியில் திருத்தலங்களைப் பற்றி சொல்லும் போது மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றால் சிறப்புடையது என்று கூறுவது வழக்கம். அவ்வண்ணமே கணபதி எல்லா வகையாலும் சிறப்புடையவன் என்பதை கூறவே ‘மூர்த்தி ஆகித் தலம் ஆகி முந்நீர் கங்கை முதலான தீர்த்தம்’ என்ற அமைப்பு.
- அறிந்தறியாத் திறத்தினாலும் – தன்னை முன்னிலைப்படுத்துகையில் அவனை அறியாவிட்டாலும் அருளுவான் எனவும், கணபதியை முன்னிலைப்படுத்துகையில் அவனை அறியாமல் இருப்பினும் அருளுவான் எனவும் பொருள்படும். ஆன்றோர் பெருமக்கள் அறிந்து உய்க.
- முந்நீர் – 1. அரலை, 2.. அரி, 3. அலை, 4. அழுவம், 5. அளம், அளக்கர், 6. ஆர்கலி, 7. ஆலந்தை, 8. ஆழி, 9. ஈண்டுநீர், 10. உரவுநீர், 11. உவர், உவரி, 12. உவா, 13. ஓதம், 14. ஓதவனம், 15. ஓலம், 16. கடல், 17. கயம், 18. கலி, 19. கார்கோள், 20. கிடங்கர், 21. குண்டுநீர், 22. குரவை, 23. சக்கரம், 24. சலதரம், சலநிதி, சலராசி, 25. சலதி, 26. சுழி, 27. தாழி, 28. திரை, 29. துறை, 30. தெண்டிரை, 31. தொடரல், 32. தொன்னீர், 33. தோழம், 34. நரலை, 35. நிலைநீர், 36. நீத்தம் நீந்து, 37. நீரகம், 38. நிரதி, 39. நீராழி, 40. நெடுநீர், 41. நெறிநீர், 42. பரப்பு, பரவை, பரு, 43. பாரி, 44. பாழி, 45. பானல், 46. பிரம்பு, 47. புணர்ப்பு, 48. புணரி, 49. பெருநீர், 50. பௌவம், 51. மழு, 52. வரி, 53. வலயம், 54. வளைநீர், 55. வாரி, வாரிதி, 56. வீரை, 57. வெண்டிரை, 58. வேலாழி, 59. வேலை