உமை :
மனிதர்களில் சிலர் அழகு உள்ளவர்களாகவும், லட்சணங்களுடன் கூடிய அவயங்கள் உடையவர்களாகவும், பார்வைக்கு இனியவர்களாகவும் காணப்படுகின்றனர் அது ஏன்?
சிவன் :
எந்த மனிதர்கள் முன் ஜென்மங்களில் இனிமையாக பேசுபவர்களாகவும், அசைவ உணவுகளை விடுத்து தர்மத்திற்காக அலங்காரங்களையும் வஸ்திரங்களையும் தானம் செய்து கொண்டும், பூமியை சுத்தப்படுத்திக் கொண்டும் இருக்கிறார்களோ அவர்கள் மறு ஜென்மத்தில் ஆசைபடத்தக்க அழகுள்ளவர்களாக பிறக்கிறார்கள்.
உமை :
மனிதர்களில் சிலர் விகார ரூபமுள்ளவர்களாக இருக்கிறார்களே அது ஏன்?
சிவன் :
மனிதர்கள் முன் ஜென்மத்தில் அழகிய வடிவம் பெற்றிருந்து அதன் காரணமாக கர்வமும் தான் மேல் எனும் எண்ணமுடையவர்களாகவும், அழகில்லாதவர்களை நகைத்தும், அவர்களை மனம் வருந்தச் செய்தும், மாமிசங்களை விருப்பப்பட்டு உண்டும், பொறாமை அனாச்சாரம் முதலிய நடவடிக்கைகளோடு இருந்தவர்கள் தண்டிக்கப்பட்டு மானிட ஜென்மம் அடையும் போது விகாரமுள்ளவர்களாகி அழகில்லாமல் விகார ரூபமுள்ளவர்களாக பிறக்கிறார்கள்.
உமை :
சிலர் அழகும் ஐஸ்வர்யமும் இல்லாமல் இருந்தாலும் மனதை கவரும் தன்மை உடையவர்களாகவும் பெண்களால் விரும்பப்படுபவர்களாகவும் இருப்பது ஏன்?
சிவன் :
எவர்கள் முந்தைய ஜென்மங்களில் இனிய சுபாவம் உள்ளவர்களாகவும், தன் மனைவியிடத்தில் திருப்தி உள்ளவர்களாகவும், அவர்களை விட்டு விலகாததன் பொருட்டு மன உறுதி உள்ளவர்களாகவும், மற்றவர்கள் வேண்டியபோது பானம், அன்னம் போன்றவற்றை கொடுப்பவர்களாகவும் சிறந்த நடத்தையோடு இருப்பவர்களாகவும் இருக்கிறார்களோ அவர்கள் மறுஜென்மத்தில் அழகுடையவர்களாக பிறக்கிறார்கள்.
உமை :
மனிதர்களில் செல்வம் போன்றவற்றை பெற்றிருந்தும் இன்னாதவர்களாக இருக்கின்றனரே அது ஏன்?
சிவன் :
முன் ஜென்மத்தில் எண்ணம், சொல் மற்றும் செயல் ஆகியவற்றால் பிறரை துன்புறுத்தியும், யாரையும் காப்பாற்றாமலும் இருக்கிறார்களோ அவர்கள் செல்வம் போன்றவற்றை பெற்றிருந்தும் இன்னாதவர்களாக இருக்கின்றனர்.
உமை :
மானிடர்களில் சிலர் கல்வியும் ஆத்ம ஞானமும் புத்திக் கூர்மையும் பேசும் திறமை ஆகியவை பெற்றிருந்தும் ஒழுங்காக முயற்சி செய்தும் தரித்திர்களாக காணப்படுகின்றனரே அது ஏன்?
தொடரும்..