நீண்ட நாட்களுக்குப் பின்
கடவுளுடன் நெருக்கம்.
வாழ்விற்கான மாறுதலுக்கு வழி என்ன என்றேன்.
மறுதலித்தலே வாழ்வினை மாற்றும் என்றார்.
மனைவியிடம் தொடங்கலாமா என்றேன்.
‘விதி வசப்பட்டவர்கள் மாந்தர்கள்,
நீயும் விலக்கல்ல’
என்று கூறி அவ்விடம் அகன்றார்.
உருவேறத் திருவேறும்
ஆதியில், மனிதர்கள் அற்ற இடத்தினில்
ஒரு மரம் இருந்தது.
வளரத்துவங்குகையில்
அது பேசத்தொடங்கியது.
அதன் பாஷைகள்
புரியாதனவாக இருந்தன.
ஒரு குழந்தையை அழைத்து
தன் மேல் கல் எறியச் சொன்னது.
புரிந்த குழந்தை கல் எறிந்து சிரித்தது.
‘அங்க ஒரு மரம் இருக்குடா,
கல் எறிந்தால் பேசும்டா’ என்றது தனது நண்பர்களிடம்.
குழந்தைகளின் வருகையினால்
தலைகீழ் மாற்றம் அவ்விடத்தில்.
கால மாற்றத்தில்
பயணத்திற்கு இடையூராக இருப்பதாக
பயணம் செய்பவன் ஒரு நாள் சொன்னான்.
விழுதுகள் வேரிலிந்து அறுக்கப்பட்டன.
பல காலம் கடந்த பிறகு
சில குழந்தைகள் பேசிக்கொண்டன.
‘எங்க முப்பாட்டன் காலத்துல
அங்க ஒரு மரம் இருந்தது.
எங்க அப்பன் அதை அழிச்சிட்டான்டா ‘
விருந்து ஒன்றில்
உன்னை விலகி நின்று
சந்திக்கும் வாய்ப்பு வாய்த்தது.
நீண்ட நெடும் கூந்தல்.
வில்லினை ஒத்த புருவம்.
தெறிக்கும் கண்ணின் பார்வைகள்.
மோனப் புன்னகைக்கு
முத்தாய்ப்பாய் மூக்குத்தி
பரவசம் ஏற்படுத்தும் பச்சை ஆடை.
என்னடா இப்படி பார்க்கிறாய்
என்றான் நண்பன்.
வாவி எல்லாம் தீர்த்தம்,
பூசுவது வெண்ணீரு எனும்
அவனுக்கான காலமும் வரும்.
உடல் நீங்கிய உயிர்.
வேடிக்கைகள் எளிதாக்கி
காட்சிகள் என்னுள்ளே.
பகுப்பாய்வுகள் பலவிதமாய்.
பாத அழுக்குகள்
பலதூரம் நடந்திருபதை காட்டுகின்றன
என்றான் ஒரு மாணவன்.
கைகள் அழுக்கானவைகள்.
அதனால் அவன் உழைப்பாளி
என்றான் மற்றொருவன்.
குடித்திருப்பதை குடல் காட்டுகிறது
என்றான் மற்றொருவன்.
இதயத்திலிருந்து வரும் வேர்கள்
கவிஞனாய் காட்டுகின்றன
என்றான் மற்றொருவன்.
எனக்கு உறவானவன் அவன் என்கிறாய் நீ.
உதிர்த்துவிட்ட சொல்லின் முடிவில்
உயிர் பெறுகிறது
உறைந்துவிட்ட ஒரு இதயம்.
அலைகள் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தன.
விஷம் தடவி
வாளினால் தாக்கும்
பெரும் போரளியியை விட
வார்த்தைகளில் லாவகம் உனக்கு.
இரவினில் பாதி உறக்கத்திலிக்கும்
புல்லினமாய் நான்.
போரின் முடிவினில்,
மரணத்திற்குப் பின்வரும்
மற்றொரு வாழ்வினைப் பற்றி
பேசுகிறாய்.
நான் அற்ற இடத்தில்
எனக்கான எச்சங்கள்
இருந்தால் என்ன, இறந்தாலென்ன என்றேன்.
அப்பொழுதும்
அலைகள் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தன.
வண்ணம் தீட்ட
துவங்கிய தருணத்தில்
வரிசையாக மனிதர்கள்.
சிகையை சீர் படுத்த சொன்னான் ஒருவன்.
முகத்தை சீர் படுத்த சொன்னான் ஒருவன்.
கண்கள் கலக்கமுற்றிருப்பதாக
சீர் படுத்த சொன்னான் ஒருவன்.
ஆடையை சீர் படுத்த சொன்னான் ஒருவன்.
நடையை சீர் படுத்த சொன்னான் ஒருவன்.
மற்றவர்களுக்கா வரைந்து
முடித்த ஓவியத்தில்
முழுமை பெறாமல் ஓவியமும்
ஓவியனின் கனவுகளும்.