இயல்பாய் இரத்தல்

புகைப்படம் : திரைப்பட இயக்குனர் திரு. ஐயப்ப மாதவன்

 

எவரும் அறியாமல்
என் கைகள் நீண்டும் குறுகியும் ஆகின.
யாரும் அற்ற ஒரு பொழுதினில்
யாசகம் வேண்டி நின்றேன் ஒருவனிடம்.
‘உனக்கு மட்டும் ஏன் கைகள் இப்படி ஆகின்றன?’
என்றான் அவன்.
யாசித்தல் இயல்பு ஆன பொழுதுகளில்
இடம் சென்று பெறுதல் அரிதானதால்
இவ்வாறானது என்று உரைத்தேன்.
எப்பொழுது இது மறையும் என்றான்?
இயல்பாய் ஒருவன்
இடும்போது மறையும் என்றேன்.
எவரும் அறியா விஷ்யங்களை
இனம் கண்டு கொண்டது எங்கனம் என்றேன்?
இயல் புன்னகை பூத்து
கைகளில் இடுகிறான்.
புவனம் கனகம் ஆகிறது
காலம் உறைகிறது.

சமூக ஊடகங்கள்

சுணங்கன்

புகைப்படம் : இயக்குனர் திரு. ஐயப்ப மாதவன் அவர்கள்

​ஆதி நாளில் நீ தனித்திருந்தாய்;
கூடி வந்த காலமதில்
நாம் தனித்து இருந்தோம்;
அகிலின் வாசம்
அறையை நிரப்புகிறது.
பெரும் தீயாகி என்னை​​
உன்மடியினில் கிடத்துகிறாய்.
மோனத்தீயாகி
முத்தமொன்றை இடுகிறாய்
கண்களில் இருந்து விழிநீர் அருவியாகி
வழிந்தோடுகிறது.
புறவெளியில்
மாய உலகில் காற்றினை உரசி
வார்தைகள் தோன்றி மறைகின்றன.
‘இரத்தம் இருந்தப்ப ஆடின,
சுண்டினப்பின் கண்ணீர் விட்டு
என்ன புண்ணியம்’

 

*சுணங்கன் – நாய் போலத் திரிபவன்

சமூக ஊடகங்கள்

மௌன மரம்

மௌன_மரம்_Iyyapa_Madhavan

புகைப்படம் : திரு. ஐயப்ப மாதவன், திரைப்பட இயக்குனர்

நாளொன்றின் இறுதியில்
வானம் பார்த்திருக்கையில்
தனித்தனி பறவை இனங்கள்
தனித்தனி மரங்கள் அடைந்தன.
அடைந்தப்பின் பறவைகள் மறைந்து
மரங்கள் தனித்து இருந்தன.
கரைந்த காலங்களில்
மாறாது இருந்தது இந்நிகழ்வு.
சந்தி இரவொன்றில்
அறிந்திரா புதிய மரமொன்று எதிர்ப்பட்டது
‘மௌன மரம்’ என்று தன்னிலை விளக்கம் சொன்னது.
தேகம் இளைத்தவர்கள், யாசிப்பவர்கள்
பெரும் பயண வழி அற்றவர்கள்,
மனிதர்களால் கைவிடப்பட்டவர்கள் எங்களில் இலக்கு;
அவர்களை யாம் சென்றடைவோம் என்றது.
இன்னும் பல பகுப்புகள் உண்டு.
இருந்தாலும் இதை மட்டும் உரைத்தோம்
என்றும் உரைத்தது.
பிறிதொரு நாளில் என்னில்
சுடர் எனக்கரைந்திருந்தது
மௌன மரமும்.

சமூக ஊடகங்கள்

இயல்பானவன்

இயல்பானவன்_IyaapaMadhavan

புகைப்படம் : திரைப்பட இயக்குனர்  திரு. ஐயப்ப மாதவன்

புகைவண்டி பயணத்தில்
இயல்பில்லாதவனை
எளிதில் கண்டறியக்கூடும்.

ஜன்னலுக்கு வெளியே
யாருமற்ற புல்வெளியில்
வானம் பார்த்து
ஒருவன் உறங்கிக் கொண்டிருக்கலாம்
கடந்து செல்.

அன்றைய செய்தித் தாளினை
எவரும் படிக்க இயலாமல்
எட்டாய் மடித்து
ஒருவன் வாசித்துக் கொண்டிருக்கலாம்
கடந்து செல்

யாசிக்கும் மனிதனின்
கண்ணீர் தாண்டி
மறுதலிக்கும் மனம் அறிந்து
கடந்து செல்.

நடை பாதை ஒன்றில்
‘இறைவனிடம் கை ஏந்துங்கள்’
எனும் பாடலை
சுருதி மாறாமல் பாடும்
பாடலை கேட்டு கடந்து செல்.

உன் நிலை கண்டும்
மற்றொருவன்
கவிதை எழுதக் கூடும்,
அப்போது நீ
இயல்பானவனாக மாறி இருப்பாய்

சமூக ஊடகங்கள்

மரபணு மாற்றம் – மயானம் நோக்கிய பயணம் – 4

மரபணு மாற்றம்_R.S.S.K Clicks

கவலைகள் – சூழலியல் சார்ந்து

மரபணு மாற்றப்பட்ட விதை / கலப்பின விதை – வேறுபாடு

தக்காளியின் மரபணுவுடன் பிராய்லர் கோழியின் மரபணுவை சேர்த்து ‘’சதைப்பற்றான’ தக்காளியை உருவாக்குவது மரபணு மாற்றம்.
சிவப்பான தக்காளி வகையுடன் சதைப்பற்றான தக்காளி வகையைச் சேர்த்து சிவப்பான, சதைப்பற்றான தக்காளி இனத்தை உருவாக்குவது கலப்பினம்.
இவை இரண்டுமே செயற்கையாக உருவாக்கப்படுபவை.

சார், நீங்க  ஒரு கஸ்டமர் பாக்க போறிங்க, நல்ல  பாண்ட், முழு கை  சட்டை போட்டுக்கோங்கோ, ஷு  முக்கியம். எதுல போறிங்க, வண்டில தானே  போயிட்டு வாங்க . உங்க அப்பாயிண்ட்மெண்ட்  டைம் மதியம்  2.15 மணி.

மரபணு மாற்றம்  சூழலுக்கு  எவ்வாறு முரணானது என்பதன் உதாரணமே இது

உதாரணமாக தென்னையை எடுத்துக் கொள்வோம் . சில பத்தாண்டுகளுக்கு முன் தென்னை காய்க்க 10 வருடத்திற்கு மேல் எடுத்துக் கொண்டது .அடுத்த தலைமுறை தென்னை குட்டை ஆக 5 வருடங்களில் காய்த்தது. இப்போது உள்ள தென்னை மரங்கள் 1 வருடங்களில் காய்க்க துவங்கி விடுகின்றன

கருவாழகரை (மயிலாடுதுறை) கத்திரிக்காய் சிதம்பரம் கொஸ்து – வேறு என்ன சொல்ல

இப்படிப்பட்ட மண்ணின் ஆதாரங்களை குலைப்பதே மரபணு மாற்றங்களின் அடிப்படை

இவ்வாறான பயிர்கள் விளைச்சல் பெறும்போது அந்த மண் தன் தன்மையை இழந்து அது சார்ந்த உயிர்களையும் அழித்து விடுகிறது.

உதாரணமாக மரபணு மாற்றம் செய்யப்படட நிலங்கள் தோராயமாக 25 ஆண்டுகளுக்கு பின் நீர் ஆதாரங்களை சேமித்து வைக்கவும் அதை பயன்பாடு கொள்ளவும் இயலாத விலை(ளை ) நிலங்களாக மாற்றி விடுகின்றன

மரபணு மாற்றம் கீழ் கண்டவற்றை குறித்து பேசுவது இல்லை

  • மண்ணின் தன்மைகள் குறுகிய காலங்களுக்கு மாறாமல் பாதுகாக்கப்படும் என்பதற்கான உத்திரவாதம்
  • மண்ணின் தன்மைகள் நீண்ட காலங்களுக்கு மாறாமல் பாதுகாக்கப்படும் என்பதற்கான உத்திரவாதம்
  • மண் மலடாகாமல் பாதுகாக்கப்படும் என்பதற்கான உத்திரவாதம்
  • ஒருவேளை மண் மலடானால் அதை மீண்டும் உயிர்ப்பிக்கும் முறைகளும் அதற்கான உத்திரவாதம்
  • மண் சார்ந்த உயிரியல் சுழற்சியில் அனைத்து உயிர்களும் பாதுகாக்கப்படும் என்பதற்கான உத்திரவாதம்
  • வாழ்வு ஆதாரங்களான நீர், நிலம்  மற்றும்  காற்று போன்றவை  அதன் தன்மை இழக்காதிருக்கும் நிலை

வெளிப்படை  தன்மை  நிரூபிக்க  படாத வரையில் அனைத்தும் பாதுகாப்பு அற்றதே

சமூக ஊடகங்கள்

பற்றிய மௌனம்

பற்றிய மௌனம்_IyyapaMadhavan

நிழலும் நிஜமும் : திரைப்பட இயக்குனர் திரு. ஐயப்ப மாதவன்

யாரும் அறியா கணமொன்றில்
உடல் பிரிந்து உயிர் தனியானது.
காணப்படுபவைகளை காட்சியாக்கி கண்டது.
தன்னிலை அறிந்து தான் மீண்டும் கூடு அடைந்தது.
பெறத் துடிக்கும் ஒன்றை
பெற்றதாய் கொண்டது மனம் ஒன்று.
அடைய முடியா புவனங்கள்
அண்டத்தில் இல்லை
என்று கூறி பெரு நடை ஒன்றை பயின்றான்
பித்தனொருவன்.
கருமை நிறம் கொண்டவனுடன் வந்த
கருமை நிற நாய் ஒன்று
வேகமாக தாவியது அவன் மேல்.
உடலுக்குள் உயிர் ஒடுங்கியது.
‘கூத்தனின் நாடகத்தில் குறை உண்டோ’
எனக் கூறி அவ்விடம் அகன்றான்
கருமை மனிதன்
பிறிதொரு நாளில்
உடலும் உயிரும் தனித்த பொழுதுகளில்
மௌனம் பொருந்தி
காலம் இயல்பு இழந்திருந்தது.

சமூக ஊடகங்கள்

முதுகாடு

முதுகாடு_IyaapaMadhavan

புகைப்படம் : திரு. ஐயப்ப மாதவன், திரைப்பட இயக்குனர்.

வினாடிகள்
வினாடியாகத் தான் சேர்ந்து மறைகின்றன.
ஒன்றின் தொடர்ச்சி போல் இல்லாமல்
ஒவ்வொன்றும்.
ஆனாலும்
கடந்த யுகமுடிவில் பட்ட அதே பிம்பத்தில்
இந்த உடலும் அதே நினைவுகளும்.

 

முதுகாடு - இடுகாடு, சுடுகாடு

சமூக ஊடகங்கள்

சொரூப நீட்சி

சொரூப நீட்சி_Iyyappa Madhavan

 

புகைப்படம் : ஐயப்ப மாதவன், திரைப்பட இயக்குனர்

 

அஞ்சன இரவொன்றில்
யாருமற்ற தனிமையில்
தலையணையை ஈரமாக்கும்
விழித் துளிகள் வீசிச் செல்கின்றன
இழப்பதற்கு என்று
எதுவும் இல்லை
இளமையும், வறுமையும் தவிர.

சமூக ஊடகங்கள்

அமலம்

அமலம்_KP

புகைப்படம் : Karthik Pasupathy

பிரபஞ்சத்தின் நீட்சியில்
காலபரிமாணம் அற்று
வான்முட்டி கூட்டமாக பறந்தன
சில பறவைகள்.
அறியாத பொழுதொன்றில்
மரித்து தரை சேர்ந்தது
பறவை உடல் ஒன்று.
கத்தின, கூக்குரலிட்டன, கரைந்தன.
உருவம் அழிவதாய் ஒலித்தன
உயிர் கொண்ட பறவைகளின் குரல்கள்.
பின்னொரு பொழுதுகளில்
விரும்பி வானம் கொண்டன.
சலனப்பட்டு இருந்தது காற்று
சலனம் அற்று இருந்தது வானம்.

*அமலம் – மாசு அற்றது

சமூக ஊடகங்கள்

பாடி காவல்

பாடி காவல்_LakshmiVenkat

புகைப்படம் : Lakshmi Venkataraman

மரணம் கரைந்திருக்கும் வினாடி தேடி
பயணிக்கிறது வாழ்வு;
மரணித்தல் இயல்பாகும் வரை
வாழ்வு தொடரும்;
பின்னொரு பொழுதுகளில்
ஞானத்தின் வாழ்வு தன்னை ஞானம் கவ்வும்
மறுபடியும் ஞானமே வெல்லும்.

 

 
*பாடி காவல் – குற்றம் செய்தவருக்கு அரசன் தரும் தண்டனை

கோடிக் காவனைக் கூறாத நாள் எலாம்
பாடி காவலில் பட்டுக் கழியுமே

சமூக ஊடகங்கள்

மாகேஸ்வர பூசை

%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%af%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0_%e0%ae%aa%e0%af%82%e0%ae%9a%e0%af%88_ramn

 

புகைப்படம் : ராம்

காட்சி – 1

ராமாபுரம் சிக்னலில் இருக்கும் ஒரு போலீஸ்காரர் எனது நண்பர். அவருடன் பேசிக் கொண்டிருந்தேன்.

என்னவோ சார், என்னன்னு தெரியாமாக எங்க பொழப்பு ஓடுது. சார், எனக்கு சுகர், அங்க கூட்டத்த கன்ட்ரோல் பண்ணிகிட்டு இருக்கறப்ப திடீர்ன்னு சுகர் சூட் அப் ஆயிடும். என்ன செய்யிறதுன்னு தெரியாது. மயக்கம் வரும். அப்பத்தான் இங்க வந்து பன்னுல பாதி கடிச்சிட்டு (சொல்லுகையில் குரல் உடைந்திருந்தது – பசி அனுபவித்தவர்கள் கண்களில் அது பற்றி சொல்லும் போது எப்பொழுதும் எழும் பிறர் அறியா கண்ணீர்) மீதிய இங்கயே போட்டு போய்டுவன். பாக்றவன் என்னா சொல்வான்னா ‘ வேலை பாக்ற நேரத்தில திங்கிறான் அப்படீம்பான்’ என்னா செய்றது சார். நம்ம பொழப்பு அப்படி. ஆனா ஒன்னு சார், நம்ம நிலம எதிரிக்கு கூட வரக்கூடாது.

காட்சி – 2

மெஸ் -பொத்தேரி

டேய், டேய் இங்க வாடா (கடைக்கார அம்மா ஒரு ஆட்டோ டிரைவர் பையனை அழைக்கிறார்)

இல்ல வந்து…

டேய், வாடா வந்து 4 இட்லி திண்ட்டு போடா

இல்ல வேண்டாம்.

என் பக்கம் பார்வை திரும்பியது.

சார், இந்த பய நான் பார்த்து வளர்ந்தவன். சாப்பிட காசு இல்லேன்னு திரும்பி போறான். கேட்டா உனக்கு செலவுன்றான், இவனுக்கு நாஸ்டா குடுத்தாவா நான் கொறஞ்சிடப் போறேன்.

காட்சி – 3

பிறந்து ஒரு வாரமே ஆன 2 நாய் குட்டிக்கள் மற்றும் ஒரு ஆடு.

இரு நாய் குட்டிகளும் ஆட்டுக்குட்டியிடம் பால் அருந்த முற்படுகின்றன. ஆடு வேகமாக விலகிச் செல்கிறது.

இடம் : பால் இல்லாமல்அழுத ஞான சம்பந்தருக்கு அம்மை பால் கொடுத்த சீகாழி திருக்குளம்  அருகே.

மாகேஸ்வர பூசை – ஒவ்வொரு உயிரிலும்  கலந்து இருக்கும் இறைவனுக்கு உணவுபடைத்தல்

சமூக ஊடகங்கள்

வழக்கு

%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81_nandansridharan_theniiswar
இறையால் இறைக்கப்பட்ட
வறுமைகள் பாதை வழி எங்கும்.
இருள் சூழ்ந்திருக்கும்
வாழ்வை விலக்க முற்படுகிறேன்.
யாருமற்ற தருணமொன்றில்
தலை கோதி பின்னலிடுகிறாய்.
தன்முனைப்பு அற்று முத்தமிட்டு
புன்னகை பூக்கிறாய்.
பெரு வாழ்வு கண்டபின்னும்
மீண்டும் ஒரு தலைப் பின்னலுக்காக
காத்திருக்கின்றன பல ஜன்மங்களும்.

*வழக்கு – ஈகை

புகைப்பட உதவி : நந்தன் ஸ்ரீதரன் மற்றும் தேனி ஈஸ்வர்

சமூக ஊடகங்கள்

ஆதாளிக்காரன்

%e0%ae%86%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d_vv

புகைப்படம் : Vinod V

விதியின் வழி அடைந்து
செல்வம் கூடி பெற்று வருகிறது பெரு உடல்.
என் எதிர்ப்பட்டு
காலத்தால் முதுமையாக்கப்பட்ட ஒருவன்
வயிற்றின் பெருந்தீக்காக
பொருள் ஒன்றை யாசிக்கிறான்
மின்னலென வருகிறது கோபச் சொற்கள் என்னில்.
புன்னகைத்து விலகுகிறான்.
வினாடிக்குள் மாறுகிறது எனது
இளமையின் புறத் தோற்றமும்

*ஆதாளிக்காரன் - பெரும் பேச்சு உடையவன்

சமூக ஊடகங்கள்

கூத்துப்பட்டறை

%e0%ae%95%e0%af%82%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b1%e0%af%88_sl

புகைப்படம் :  SL Kumar

வான்வெளிச் செல்லும் தனிப்பறவை
விதைத்து செல்கிறது தன் பிம்பங்களை
எல்லா திசைகளிலும்.
அவ்வாறே உணர்ந்திருக்குமா
பிரதிபிம்பங்களை?

சமூக ஊடகங்கள்

சப்த ஜாலம்

%e0%ae%9a%e0%ae%aa%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%9c%e0%ae%be%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-kp

புகைப்படம் :  Karthik Pasupathy

உன்கென்ன ‘ஆசை அறு’ என்று
சொல்லி சென்றுவிட்டாய்.
நானல்லவோ பீடிக் காசிற்கு அலைகிறேன்.

சமூக ஊடகங்கள்

மலிதல்

%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d

 

யாசித்துப் பெற்ற நாணயங்களைக் கூட்டி
தேனீர் அருந்துகையில் வந்தமைகின்றது
செம்மை நிற நாய்களின் கூட்டமொன்று.

*மலிதல் – மகிழ்தல்

புகைப்படம் : காமேஷ் சிவம்

சமூக ஊடகங்கள்

மரபணு மாற்றம் – மயானம் நோக்கிய பயணம் – 3

மரபணு மாற்றம்_R.S.S.K Clicks

 

கவலைகள் – உடல் நலம் சார்ந்து

 

மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள்/உணவுகள் அவைகளின் பரிசோதனைக்கு தகுந்த அளவில் பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன. (குறுகிய கால அளவு பக்க விளைவுகள் மற்றும் நீண்ட கால பக்க விளைவுகள்)

உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் ‘ஏம்பா அந்த 19வது குரோமேசோமை எடுத்து நமக்கு தகுந்த மாதிரி மாத்தி சேமித்துவிடு, எதுவும் ஆகாது’ . அதாவது. It is only unit testing.  It is not complete testing.

மாற்றப்பட்ட பதிவுகள் உடைய டி என் ஏ மூலக்கூறுகள், பயிர்கள்/உயிர்கள் ஆகியவற்றில் நிலையற்ற தன்மை உடையனவாக இருக்கின்றன. இந்த நிலையற்ற தன்மை அது செல்லும் இடம் எங்கும் சென்று அதன் தொடர்ச்சியாக தோற்றுவிக்கப்படும் டி என் ஏவிலும் நிலையற்ற தன்மையை உண்டாக்குகிறது.

இவ்வாறு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை உட்கொள்ளும் விலங்குகள் பெரும்பாலும் உடல் உறுப்புகள், இரைப்பை மற்றும் நோய் எதிர்ப்பு அமைப்பு, விரைவாக முதுமை தன்மை அடைதல், மற்றும் மலட்டுத்தன்மை அடைதல்  போன்றவைகளால் பாதிக்கப்படுன்றன.

Allergies ஒவ்வாமைக்களுக்கு (Allergies) அடிப்படையான காரணம்

இவ்வாறு மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள்/உணவுகள் மிக அதிக அளவில் உடலில் எதிர்பாரா பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட சோயாவின் DNA மூலக்கூறுகள் நம் உடலில் தங்கி அதன் சுவடுகள் கர்ப்பிணி பெண்ணில் கருவரை வரையில் நீள்கின்றன.

இவ்வாறான பயிர்களை உட்கொள்ளும் சோதனை விலங்குகள் புற்று நோயால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.

அமெரிக்காவில் 1996 ஆண்டு கணக்குப்படி மரபணு மாற்றம் காரணமாக மூளைக் குறைபாடுகள், இனப்பெருக்க குறைபாடுகள், உணவு செரிமானக் கோளாறுகள் போன்றவைகள் 7% இருந்து 13% ஆக உயர்ந்திருக்கிறது.

இது உணவு சுழற்சி மற்றும் உணவு சங்கிலி தொடரில் பாதிப்பதால் அனைத்து உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் என்பது கண்கூடு.

இங்கு குறிப்பிடபட்டுள்ள செய்திகளை உவமையில் கூறவேண்டும் எனில் கடலில் இருந்து எடுக்கப்பட்ட  கூஜா  நீர் அளவு மட்டுமே.

புகைப்படம் : R.s.s.K Clicks

சமூக ஊடகங்கள்

மரபணு மாற்றம் – மயானம் நோக்கிய பயணம் – 2

மரபணு மாற்றம்_R.S.S.K Clicks
பயன்படுத்தப்படும் வழி முறைகள்
“சொரம் அடிக்குது ஒரு கோரசனை மாத்திர சாப்பிடு” எனும் பாட்டியின் நாட்கள் மலையேறி விட்டன. நீடித்திருக்கும் கால அளவுகளுக்கு ஏற்ப Continuous fever, Remittent fever, Pel Ebstein fever, Intermittent fever, Septic fever என ஜுரத்தின் பெயர்கள் மாறுகின்றன.
சார், உங்களுக்கு  spinal cord  பிராபளம். ஒன்னும் கவலைப்படாதீங்க, ஒரு சின்ன ஆப்பரேஷன். L1,L2, L5 இதுல எல்லாம் கைய வைக்க மாட்டோம். Just ஒரு சின்ன கீறல். L3, L4 மட்டும் modify பண்ணிடலாம். அவ்வளவுதான்.
சார், நான் Type A ஜுரம் மட்டும் தான் பார்ப்பேன், Type B ன்னா நீங்க வேற டாக்டர பாருங்க என்பது போன்றது தான் இந்த மரபணு மாற்ற ஆராய்ச்சிகள்.
உதாரணத்திற்கு கத்திரியினை எடுத்துக் கொள்ளலாம். குருத்து மற்றும் காய்த்துளைப்பான், தண்டு துளைப்பான், ஹட்டா / புள்ளி வண்டு, சாம்பல் கூன் வண்டு, பழுப்புத் தத்துப் பூச்சி, கண்ணாடி இறக்கைப் பூச்சி போன்ற பல்வேறு பூச்சி தாக்குதல்கள் நடக்கலாம்.
நாங்க சோதனை செய்யறது காய்த்துளைப்பான் மட்டும் தான். மத்த பூச்சி தாக்குதல்கள் பற்றி எங்ககிட்ட கேட்காதீங்க. இப்படியாகத்தான் இருக்கிறது ஆராய்ச்சிகள்.
Polymerase Chain Reaction (PCR) Analysis
A single copy or a few copies of a piece of DNA across several orders of magnitude, generating thousands to millions of copies of a particular DNA sequence.


ஒரே ஒரு DNA ல் இருந்து லட்சக் கணக்கான அதே மாதிரியான DNA க்கள் பெருக்கம் செய்யப்படும்.
Restriction fragment length polymorphism (RFLP)

It analyzes the length of strands of DNA that include repeating base pairs.


ஆராய்ச்சியின் பொருட்டு ஒத்த அமைப்புடைய தொடர் DNA க்கள் எடுத்துக்கொள்ளப்படும். இழைகளாக இருக்கக் கூடிய அமைப்புகள் சார்ந்ததும் அவைகளின் மீட்சி ஆக்கமும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுதல்

Short Tandem Repeat (STR) analysis.
 

It can start with a much smaller sample of DNA. Scientists amplify this small sample through a process known as polymerase chain reaction, or PCR.
இதுவும் மேல் குறிப்பிட்டது போல் தான் என்றாலும், இம் முறை மிகச் சிறிய அளவிலான DNA மாதிரி வடிவங்களில் இருந்து பெறப்படும். ஈறை பேனாக்கி, பேனை பெருமாளாக்கி போன்ற முறை இது.
கீழ்கண்ட முறைகளும் உள்ளன. அவைகளின் முழு முறை செய்பாடுகள் இன்னும் சோதனை அளவிலே உள்ளன.
Mitochondrial DNA Analysis
Y-Chromosome Analysis
மருத்துவத்துறை உடலில் கத்தி வைக்கிறது. மரபணு மாற்றம் உலகில் கத்தி வைக்கிறது. சர்க்கரை நோயாளியின் ரணங்கள் போல மண்ணின் ரணங்கள் மட்டும் நாளுக்கு நாள் அதிகரிக்கவே செய்கின்றன.
புகைப்படம் : R.s.s.K Clicks
தொடரும்..

சமூக ஊடகங்கள்

சோளக்கொல்லை பொம்மை

சோளக்கொல்லை பொம்மை_KarthikPasupathy
காலத்தின் மாற்றத்தில்
சோளக்கொல்லை பொம்மையாகி
நிற்கும் வாய்ப்பு ஏற்பட்டது.
‘அழகாக உடுத்தி
வீதியின் நிற்றலே வேலை’ என்றார்கள்
கனவுகளுடன் காத்திருக்கையில்
பெரு வயல்வெளிதனில்
கருங்குருவி ஒன்று வந்தது.
விரட்ட எத்தனமானேன்.
‘காகங்களை விரட்டுதலே வேலை
கருங்குருவி விரட்டுதல் அல்ல’
என்றது தலைமை பொம்மை.
பார்வைகள் பதிருக்கும் காங்களில்
பாத்திகளின் மேல் காகங்கள் அமர்ந்தன.
விரட்ட எத்தனமானேன்.
‘பாத்திகள் இருவருக்கு உரித்தானவைகள்’
என்றது மற்றொரு பொம்மை
‘நம்மின் வேலை தொடர்வோம்’ என்றும் கூறின.
முதுகுக்கு பின் சில காகங்கள் வட்டமிட்டன.
விரட்ட எத்தனமாகிறேன்.
‘முன்னே பார்த்தல் மட்டுமே நம் வேலை
பின்னே பார்த்தல் மற்ற பொம்மையின் வேலை’ என்றது தலைமை பொம்மை.
கண் எதிரே சில அண்டங்காக்கைகளும்
சில வீட்டுக் காகங்களும் விளையாடின.
விரட்ட எத்தனமானேன்.
வீட்டுக்காகங்கள் மதிக்கப்பட வேண்டும்
அண்டங்காகங்களை மட்டும் விரட்டப்பட வேண்டும்’
என்றது மற்றுமொரு தலைமை பொம்மை
பிறிதொரு நாளில்
வேறு சில பொம்மைகள் வயல்களில்.
வார்தைகள் அற்று வினவுகிறேன்.
‘மற்ற பொம்மைகளின் படிச் செலவு
மாதம் விடுத்து தினமாகிறது’ என்றது தலைமை பொம்மை.
காலத்தின் மாற்றத்தில்
ஆடைகள் அற்றுக் கிடக்கிறது 
பொம்மை ஒன்று,
சில காகங்கள் மட்டும் சீண்டி விளையாடுகின்றன 
அப் பொம்மையை.

புகைப்படம்: Karthik Pasupathy

சமூக ஊடகங்கள்

IT – தொடர்ந்து குறையும் வேலை வாய்ப்புகள் – 5

தொடர்ந்து குறையும் வேலை வாய்ப்புகள்_KP

2015 
ஆண்டு கணக்குப்படி ஆண்டு ஒன்றுக்கு 5.8 மில்லியன் பட்டதாரிகள் இருப்பில் உள்ளவர்களுடன் (வேறு எப்படி சொல்ல முடியும்சேர்க்கப்படுகிறார்கள்.
உலக சந்தையினை முன்வைத்து(அமெரிக்கா என்றே கொள்ளலாம்செலவுகள்  என்பது 3 – 4 மடங்கு வரை குறைவு
இதனால் தான், வெளிநாடுகளில் இயங்கிக் கொண்டிருக்கும் I.T நிறுவனங்கள் தாராளமயமாக்கலுக்கு பிறகு இங்கு தடம் பதித்தன. சராசரியாக 45% முதல் 50% வரையில் அனைத்து திட்டங்களையும் முடித்து விடமுடியும். மற்றவை லாபம் தான். லாபத்தில் குறையும் போது தான் நிறுவனங்கள் தாங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக சொல்லு ஜல்லியடிக்கின்றன.(நன்றி சுஜாதா சார்)
நாஸ்காம் வெளியிட்டுள்ள  மார்ச்2016 அறிக்கையின் படி தகவல் தொழில் நுட்பத் துறை எந்த வித ஏற்றம், இறக்கம் இல்லாமல் $118 பில்லியன் அளவிலே இருக்கும். வளர்ச்சி விகிதம் 11.5% – 12.0% மட்டுமே.இது எதிர்பார்க்கப்பட்ட 13% – 15% வளர்ச்சியைவிட குறைவு.
தெளிவான திட்டமும் நோக்கம் இல்லாமல் நடத்தப்படும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் வரவு செலவு திட்டம் ஆண்டு ஒன்றுக்கு 11.7%. உலக நாடுகள் இதற்கு 1% மட்டுமே செலவழிக்கின்றன.
மாறி வரும் நாணய மதிப்பு, நிலையற்ற அரசியல் நிகழ்வுகள் அனைத்தும் இத் துறையை மிக வேகமாக கீழ் நோக்கி இழுத்துக் கொண்டிருக்கின்றன. இதனால் நாஸ்காம் தனது 2016 – 2017 ஆண்டிற்கானஏறுமதி வளர்ச்சியினை 12% முதல் 14% இருந்து 10% முதல் 12% ஆக குறைத்துள்ளது.
வரும் 2017ம் ஆண்டு கணக்குப்படி இந் நிறுவனங்கள் 30% வரை  பாதுகாப்பு மற்றும் இணக்கம் (security and compliance) ஆபத்துக்கால வரவு செலவு திட்டதிற்காக செலவழிக்க இருக்கின்றன. 10% ஆட்கள் இந்த பாதுகாப்பு செய்பாடுகளுக்காக செயல்படுவார்கள். இது 2014ம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டினை விட மூன்று மடங்கு அதிகம்.
தன்னிடம் உள்ளவர்கள் இத்தனை பேர் இத்தனை விதமான சான்றிதழ்(certification)  பெற்றிருக்கிறார்கள் என்பது போன்று நிலைப்பாடுகள் கொண்ட நிறுவனங்களும் உண்டு. அவர்களுக்கு வேலை உண்டோ இல்லையே அவர்களுக்கு தரப்படும் விலை மிக அதிகம். இதை இங்கே குறிப்பிடக் காரணம் மிக மிக அதிகமாக அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம்.
இது இத்துறை சம்மந்தமான ஒரு பொதுவான பதிவு மட்டுமே. இங்கு யாரும் வேலை பார்க்கக் கூடாதா என்பவர்களுக்கு என் பதில்.
 
·   நீங்கள் சுமாராக 7 முதல் 10 வருடம் மட்டுமே இத்துறையில் வேலை பார்க்க முடியும். அதுபற்றி கவலை இல்லை எனில் இத்துறையையில் சேரலாம்.
·   மிகச் சிறந்த அறிவாளி, என்னால் எதையும் செய்து முடிக்க முடியும் என்ற எண்ணம் உள்ளவர்கள் சேரலாம்.
· வருங்காலத்தில் எத்தனை பெரிய வியாதி வந்தாலும் கவலை இல்லை, எனது குடும்பம் என்னை கவனித்துக் கொள்ளும் என்பவர்கள்  சேரலாம்.
·   இது எதுவும் சரியாக வராது, ஆனால், என்னால் மிக அதிகமாக சொம்பு தூக்க முடியும் என்பவர்கள் சர்வ நிச்சயமாக நீண்ட கால நோக்குடன் இத் துறையே தேர்ந்து எடுக்கலாம். ஏனெனில் மகுடம் உங்களுக்குத் தான் காத்திருக்கிறது.
முற்றும்.

புகைப்படம் : Karthik Pasupathy

சமூக ஊடகங்கள்