சைவத் திருத்தலங்கள் 274 – திருச்சோபுரம்

274

  • அகத்திய மாமுனியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கம்(லிங்கம் அகத்தியர் அமைத்த கைத்தடத்துடன்). (அகத்தியர் தாங்கமுடியாத வயிற்று வலியால் அவதிப்பட்டு தனது வேதனையை எம்பெருமானிடம் சொல்லியபடியே கடற்கரை மணலில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்ய முயற்சித்து, அமைக்க முடியாமல் பின் மூலிகைச் செடிகளைப் பறித்து வந்து சாறு எடுத்து அதை மணலோடு சேர்த்து உதிராத சிவலிங்கத்தை உருவாக்கி அதற்குப் பூஜைகள் செய்து வழிபட்ட ஈசன்)
  • மூலவர் சதுர ஆவுடையார். சற்று நீட்டுவாக்கில் அமைந்த சுற்றளவு குறைந்த பாணம்
  • ஈசனும் பார்வதியும் ஒன்றாக இருப்பதால் சிவனுக்கு, மஞ்சளும் குங்குமமும் வைத்து வழிபாடு
  • திரிபுவன சக்கரவர்த்தியின் மனைவி தியாகவல்லி திருப்பணி செய்த தலம்
  • ஒரு காலத்தில் மணல் மேடாக இருந்த இப்பகுதி, ‘மதுரை இராமலிங்க சிவயோகி’ யால் மணலில் புதைந்திருந்த விமான கலசமும் பின் கோயிலும் கண்டறியப்பட்ட தலம்.
  • ஸ்வர மூர்த்தி – தட்சிணாமூர்த்தி. தட்சிணாமூர்த்தி விக்ரகத்தைத் தட்டினால் சப்த ஸ்வரங்களின் ஓசைகள். வழக்கத்திற்கு மாறாக இடது கையில் நாகம், வலது கையில் அக்னியும் ஏந்தியவாறு திருக்காட்சி.

 

தலம் திருச்சோபுரம்
பிற பெயர்கள் தியாகவல்லி, தம்பிரான் கோயில்
இறைவன் சோபுரநாதர் ( மங்களபுரீஸ்வரர் )
இறைவி தியாகவல்லியம்மை ( சத்யதாக்ஷி , வேல்நெடுங்கண்ணி )
தல விருட்சம் கொன்றை
தீர்த்தம் சோபுரதீர்த்தம் , கிணற்றுத்தீர்த்தம்
விழாக்கள் மகாசிவராத்திரி , திருக்கார்த்திகை தீபம் , ஐப்பசி அன்னாபிஷேகம் , பங்குனி உத்திரம்
மாவட்டம் கடலூர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி காலை 8.30 மணி முதல் 11.00 மணி வரை,
மாலை 5.30 மணி முதல் இரவு 8.00 மணி வரைஅருள்மிகு மங்களபுரீஸ்வரர் திருக்கோவில்
திருச்சோபுரம்
தியாகவல்லி அஞ்சல், கடலூர் வட்டம்
கடலூர் மாவட்டம்
PIN – 608801.
98436-70518 , 94425-85845, 94429-36922
வழிபட்டவர்கள் அகத்தியர், காகபுஜண்டர்
பாடியவர்கள் திருஞானசம்பந்தர், சுந்தரர் *
நிர்வாகம்
இருப்பிடம் கடலூர் – சிதம்பரம் சாலையில் கடலூரில் இருந்து சுமார் 15 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஆலப்பாக்கம் அடைந்து, அங்கிருந்து திருச்சோபுரம் செல்லும் கிளைச்சாலையில் இருந்து சுமார் 2 கிமீ
இதர குறிப்புகள் தேவாரத் தலங்களில் 195 வது தலம்

நடு நாட்டுத் தலங்களில்  6  வது தலம்.

 

*சுந்தரரின் ‘திருவிடையாறு’ தலப்பதிகத்தில் – ஊர்த்தொகையில் இத்தலம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

சோபுரநாதர்

சோபுரநாதர்

 

சத்யதாக்ஷி

சத்யதாக்ஷி

 

புகைப்படம் : தினமலர்

பாடியவர்          திருஞானசம்பந்தர்
திருமுறை        1
பதிக எண்          51
திருமுறை எண் 8      

 

பாடல்

விலங்கலொன்று வெஞ்சிலையாக் கொண்டுவிற லரக்கர்
குலங்கள்வாழு மூரெரித்த கொள்கையிதென் னைகொலாம்
இலங்கைமன்னு வாளவுணர் கோனையெழில் விரலால்
துலங்கவூன்றி வைத்துகந்தாய் சோபுரமே யவனே.
பொருள்

இலங்கையில் நிலைபெற்று வாழும், வாட்போரில் வல்ல அவுணர் தலைவனாகிய இராவணனைத் தனது அழகிய கால் விரலால் நடுங்குமாறு ஊன்றிப் பின் அவன் வேண்ட மகிழ்ந்து அருள்புரிந்தவனே! திருச்சோபுரம் மேவிய இறைவனே! மேரு மலையைக் கொடியதொரு வில்லாகக் கொண்டு வலிமை பொருந்திய அரக்கர் குலங்கள் வாழ்கின்ற திரிபுரங்களாகிய ஊர்களை எரித்து அழித்தற்குக் காரணம் என்னவோ?.

கருத்து

விலங்கல் – மேருமலை.
அரக்கர் – திரிபுராதிகள்.
ஆணவம் கொண்டு தன் தவற்றை உணர்ந்து பின் அவனை மன்னித்தல் என்றவாறு

 

பாடியவர்          திருஞானசம்பந்தர்
திருமுறை        1
பதிக எண்          51
திருமுறை எண் 9      

         

பாடல்

விடங்கொணாக மால்வரையைச் சுற்றிவிரி திரைநீர்
கடைந்தநஞ்சை யுண்டுகந்த காரணமென் னைகொலாம்
இடந்துமண்ணை யுண்டமாலு மின்மலர்மே லயனும்
தொடர்ந்துமுன்னங் காணமாட்டாச் சோபுரமே யவனே.

பொருள்

மண்ணுலகை அகழ்ந்து உண்ட திருமாலும், இனிய தாமரை மலர்மேல் விளங்கும் பிரமனும், முற்காலத்தே உன்னைத் தொடர்ந்து அடிமுடி காணமாட்டாராய் நின்றொழியத் திருச்சோபுரத்தில் மேவி விளங்கும் இறைவனே! தேவர்கள் விடத்தையுடைய வாசுகி என்னும் பாம்பை மந்தரம் என்னும் பெரிய மலையைச் சுற்றிக் கட்டி, விரிந்த அலைகளையுடைய கடல்நீரைக் கடைந்தபோது, அதனிடை எழுந்த நஞ்சை உண்டு மகிழ்தற்குக் காரணம் என்னையோ?

 

கருத்து

நாகம் – வாசுகி என்னும் பாம்பு.
மால் வரை – மந்தரமலை.
நஞ்சை உண்டு உகந்த – தேவர்கள் அஞ்சிய நஞ்சைத் தாம் உண்டு அவர்களைக் காத்தும்,
சாவாமைக்கு ஏதுவாகிய அமுதத்தை அவர்களுக்குக் கொடுத்து அளித்தும் மகிழ்ந்த.
இடந்து – தோண்டி

 

(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)

சமூக ஊடகங்கள்