தல வரலாறு(சுருக்கம்) / சிறப்புகள் – திருச்செங்கோடு
- அர்த்தநாரீஸ்வராக விளங்கும் தலம்
- வெள்ளை பாஷாணத்தால் ஆன அர்த்தநாரீஸ்வரர் மூலவர். திருவடிவம் நின்ற கோலத்தில் மேற்கு நோக்கி திருக்காட்சி. (இலிங்க வடிவமில்லை) பாதி புடவை – பாதி வேஷ்டி அலங்காரம்; இந்த கோலத்திலேயே (மூலவர்) காட்சி முழு வடிவமும் வெள்ளைப் பாஷாணத்தால் ஆனது.
- அர்த்தநாரீஸ்வரர் பாதத்தின் அடியில் தேவ தீர்த்தம் எனப்படும் நீர் சுரந்தவாறு உள்ள அமைப்பு
- ஆண் பாகமான வலக்கையில் தண்டம் ஏந்தியும், பெண் பாகமான இடக்கையை இடுப்பிலும் வைத்தவாறும் கால்களிலும் ஒருபுறம் சிலம்பும் , மறுபுறம் கழலும் அணிந்தவாறு திருக்காட்சி கொண்ட அர்த்தநாரீஸ்வரர் உற்சவ திருமேனி
- வெள்ளைபாஷாணத்தால் செய்யப்பட்ட திருவடிவம் ஆன செங்கோட்டு வேலவர் வலக்கையில் வேல் ஏந்தி , இடக்கையை இடுப்பில் வைத்தவாறு நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி திருக்காட்சி; அடியில் உள்ள பீடம் சதுர வடிவிலானது
- கேதாரகௌரியம்மை மரகதலிங்கத்தை வழிபாட்டு சிவனாரின் இடப்பாகத்தை பெற்ற தலம்
- கிழக்கு நோக்கிய ஸ்ரீதேவி மற்றும் பூதேவியருடன் நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமாள் ஆதிகேசப்பெருமாள் சந்நிதி
- ஆமை வடிவத்தின் மேல் அமைந்த நந்தி மண்டபம்
- ஆதிசேஷனுக்கும், வாயுவிற்கும் நடந்த சண்டையில் சிதறிய மேருமலையின் சிகரங்களில் இத்தலமும் ஒன்று
- மேலமாடவீதியிலிருந்து பார்ப்பதற்கு நாகம் போன்று காட்சியளிப்பதால் நாகாசலம், நாககிரி.
- மலை சிவந்த நிறமாக காட்சியளிப்பதால் செங்கோடு
- விறன்மிண்ட நாயனார் பிறந்து, வாழ்ந்து, முக்திப்பெற்ற தலம்
- திருஞானசம்பந்தர், திருநீலகண்டப்பதிகம் பாடிய தலம்
- திருஞானசம்பந்தர், கொங்கு நாட்டுத் தல யாத்திரையின் போது, முதலில் இப்பதியை வணங்கி, பின்பு சில தலங்களுக்குச் சென்றுவிட்டு திரும்பவும் இங்கு வந்த போது, அவருடன் வந்த அடியார்களை ‘நளிர்சுரம்’ பற்றி வருத்த ‘அவ்வினைக் கிவ்வினை’ என்னும் பதிகம் பாடி, ‘தீவினைவந்தெம்மைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்’ என ஆணையிட்டு அந்நாடு முழுவதும் பிணிதீர்த்தார் என்பது பெரியபுராண வரலாறு.
- பாண்டிப்புலவரேறு என்ற புலவருடன் குணசீலர் என்ற புலவர் புலமையை நிருபிக்கும் போது “சமரமுகத் திருச்செங்கோடு சர்ப்பசயிலமெனில் அமரிற்படம் விரித்து ஆடாததென்னே” – என்று பாடி அதற்குமேல் எழுதமுடியாது திண்டாடிய போது, குணசீலர் என்ற அந்த புலவருக்காகச் செங்கோட்டுவேலர் மாடு மேய்கும் சிறுவனாக வந்து குணசீலரின் கடைமாணாக்கர் என்று தன்னைக் கூறிக்கொண்டு “அஃது குமரன் திருமால் முருகன் மயில்வாகனம் கொத்துமென்றே” என்று பாட்டினை முடித்து திரும்பிப் போகும்படிச் செய்தார்
- 1200 படிகள் மேல் திருக்கோயில் உள்ளது. பாம்பு உருவங்கள் கொண்ட படிக்கட்டுகள்; ஓரிடத்தில் நீளமான 20 அடி பாம்பு வடிவத்திலேயே ஏறும் வழி
- இத்தலம் பற்றிய குறிப்புக்கள் உள்ள நூல்கள் – சிலப்பதிகாரம், தேவாரம், கந்தர் அநுபூதி, கந்தர் அலங்காரம்
- கிழக்கு நோக்கிய ஸ்ரீதேவி மற்றும் பூதேவியருடன் நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமாள் ஆதிகேசப்பெருமாள் சந்நிதி
தலம் | திருக்கொடிமாடச் செங்குன்றூர் |
பிற பெயர்கள் | திருச்செங்கோடு, தெய்வத் திருமலை, நாகமலை, உரசகிரி, நாககிரி செம்மலை, மேருமலை, சிவமலை, நாகாசலம், பனிமலை, கோதைமலை, அரவகிரி, பிரம்மகிரி, வாயுமலை, கொங்குமலை, வந்திமலை, சித்தர்மலை, சோணகிரி மற்றும் கந்தகிரி |
இறைவன் | அர்த்தநாரீஸ்வரர் |
இறைவி | பாகம்பிரியாள் |
தல விருட்சம் | இலுப்பை, வன்னி |
தீர்த்தம் | தேவ தீர்த்தம் |
விழாக்கள் | சித்ரா பௌர்ணமி , வைகாசி விசாகம் , மாசிமகம் , பங்குனி உத்திரம் |
மாவட்டம் | நாமக்கல் |
திறந்திருக்கும் நேரம் / முகவரி | காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை
அருள்மிகு அர்த்தநாரீசுவரர் கோயில், திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம். :Pin. 637211. 04288-255925, 93620-23163, 93620-22900, 93642-29181 |
வழிபட்டவர்கள் | |
பாடியவர்கள் | திருஞானசம்பந்தர் 1 பதிகம் |
நிர்வாகம் | |
இருப்பிடம் | ஈரோட்டில் இருந்து சுமார் 18 கிமீ தொலைவு , நாமக்கல்லில் இருந்து சுமார் 32 கிமீ தொலைவு |
இதர குறிப்புகள் | தேவாரத் தலங்களில் வது தலம்
கொங்கு நாட்டுத் தலங்களில் 4 வது தலம். |
அர்த்தநாரீஸ்வரர்
புகைப்பட உதவி : arthanareeswarar.com
பாடியவர் திருஞானசம்பந்தர்
திருமுறை 1
பதிக எண் 107
திருமுறை எண் 2
பாடல்
அலைமலி தண்புனலோ டரவஞ் சடைக்கணிந் தாகம்
மலைமகள் கூறுடையான் மலையா ரிளவாழைக்
குலைமலி தண்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
தலைமக னைத்தொழுவார் தடுமாற் றறுப்பாரே
பொருள்
அலைகள் நிறைந்ததும், குளிர்ந்த கங்கை நதி, பாம்பு ஆகியவற்றை தனது திருச்சடையில் அணிந்து, தனது திருமேனியில் மலைமகளை ஓர் பாகமாகக் கொண்டுள்ளவனும், மலையில் வளரும் குலைகள் நிறைந்துள்ள இளவாழை மரங்களை உடையதும், குளிர்ந்த சோலைகள் சூழ்ந்து விளங்கும் கொடிமாடச் செங்குன்றூரில் எழுந்தருளிய தலைவனுமாகிய சிவபிரானைத் தொழுபவர்களது தடுமாற்றம் விலகும்.
பாடியவர் திருஞானசம்பந்தர்
திருமுறை 1
பதிக எண் 107
திருமுறை எண் 6
பாடல்
ஓங்கிய மூவிலைநற் சூல மொருகையன் சென்னி
தாங்கிய கங்கையொடு மதியஞ் சடைக்கணிந்து
கோங்கண வும்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் வாய்ந்த
பாங்கன தாள்தொழுவார் வினையாய பற்றறுமே
பொருள்
மேம்பட்டதான மூவிலை வடிவான நல்ல சூலத்தை ஒரு கையில் ஏந்தியவனாய், திருமுடியில் தடுத்த கங்கையோடு சந்திரப் பிறையையும் சடையில் அணிந்தும், கோங்க மரங்கள் நிறைந்தும், தேன் பொருந்திய சோலைகள் சூழ்ந்த கொடிமாடச் செங்குன்றூரில் பொருந்திய தோழனாய் விளங்கும் சிவபெருமானின் திருவடிகளைத் தொழுபவர்களின் வினைகள் அடியோடு நீங்கும்.
(இத் திருத்தலம் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)