அமுதமொழி – விளம்பி – ஆனி – 25 (2018)

பாடல்

அன்றுமுதல் ஆரேனும் ஆளாய் உடனாகிச்
சென்றவர்க்குள் இன்னதெனச் சென்றதிலை – இன்றிதனை
இவ்வா றிருந்ததென் றெவ்வண்ணஞ் சொல்லுகேன்
அவ்வா றிருந்த தது.

திருநெறி 6 – திருக்களிற்றுப்படியார் – திருக்கடவூர் உய்யவந்த தேவ நாயனார்

பதவுரை

அனாதி காலம் தொட்டு கர்த்தாவுக்கு ஆளாகி  திருவருளுடனே கூடிப் பின்பு அன்பு வழியுடன் பக்தி கொண்டு சென்றவர்களில் ஒருவரானாலும் சிவானுபவம் இப்படியிருந்ததென்று சொல்லக்கூடிய  உவமை  இதுவரையும் பொருந்தினதில்லை; ஆகையால் இப்போது இந்தச் சிவானுபத்தை இப்படியிருந்ததென்று எப்படிச் சொல்லப்போகிறேன் எனில் அந்தச் சிவானுபவம் போலவே இருந்தது.

விளக்க உரை

  • சிவானுபவத்துக்கு வேறோர் உவமை சொல்லக்கூடாது
  • சிவானுபவம் என்பது அனுபவிக்க முடியுமே அன்றி எவ்வாறு இருந்ததென்று அளவிட்டுக் கூறமுடியாததாகும்.  அதற்கு ஒப்புமை எதுவும் கூற இயலாது

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – சித்திரை – 30 (2018)

பாடல்

அனாதி சிவனுடைமை யால்எவையும் ஆங்கே
அனாதியெனப் பெற்ற அணுவை – அனாதியே
ஆர்த்த துயரகல அம்பிகையோ(டு) எவ்விடத்தும்
காத்தல் அவன்கடனே காண்

திருநெறி 6 – திருக்களிற்றுப்படியார் – திருக்கடவூர் உய்யவந்த தேவ நாயனார்

பதவுரை

எல்லா மும்மல ஆன்மாக்களும் அனாதி காலம் தொட்டு சிவனுக்கு உடைமை ஆகையால், சிவனைப்போல அனாதித்தன்மை பெற்ற அணுவான அந்த மும்மல ஆன்மாவை, அனாதி காலம் தொட்டுவரும் ஆணவம், மாயை, கன்மம் என்கிற துன்பங்கள் முற்றிலும் நீங்கும்படி அகலச் செய்து சிவசக்தி சொருபமாக இருந்து காத்தல் தொழில் செய்தல் சிவனுக்கு கடமை என்று அறிவாயாக.

விளக்க உரை

  • இருத்தலிலும், முத்தியிலும் ஆன்மாவுக்குச் செயலில்லை என்பது பெறப்படும்

சமூக ஊடகங்கள்