
பாடல்
ஒட்டாது சுழற்காற்றுத் தீயுங்கூடி
ஒளிகோடி மதிகோடி ரவிதான்கோடி
கொட்டேது யிடிமுழக்க மேகநாதங்
கூறுவலம் புரிநாத மணியினோசை
விட்டேது காதடைக்குங் கண்ணும்புக்கும்
மேலேற்றத் தெரியாது விழியுங்காணோம்
மட்டேது நடனவொலி சிலம்பினோசை
மாட்டியே வாங்குமப்போ மயக்கந்தானே
அகத்தியர் தீட்சாவிதி 200
கருத்து – தச தீட்சையில் பெறப்படும் தச நாதங்களின் தன்மைகளில் சிலவற்றை கூறியது.
பதவுரை
எதிலும் ஒட்டாமல் செல்லும் சுழற்காற்றும் தீயும் கூடியது போல் கோடி சூரியனும், கோடி சந்திரனும் கூடியது போல் கோடி இடி முழக்கங்கள் சேர்ந்து ஒலிப்பது போன்று வலம்புரி சங்கில் இருந்து மணியின் ஓசை போன்று காதில் ஒலிக்கும்; இருகண்களுக்கும் இடையில் புருவ மத்தியில் வாசி வழி மேல் ஏற்றத் தெரியாமல் விழிகளை காணாமல் இருப்பது போன்று விழி மூடிய நிலையில் நடனத்தில் ஒலிக்கக்கூடியதும் மயக்கம் தருவதும் ஆன சிலம்பின் ஓசை கேட்கும்.
விளக்க உரை
- வாசி மேலேறும் போது, சாதகன் , சாதனத்தில் அடங்கி இருக்கும் போது சுழிமுனை நாடியில் மேலேற மேலேற பத்து வித நாதங்கள் சாதகனுக்கு கேட்கும்.
தச நாதம் – 1. மணியோசை 2. கடல் அலையோசை 3. யானை பிளிறும் ஓசை 4. புல்லாங்குழலோசை 5. இடியோசை 6. வண்டின் ரீங்கார ஓசை 7. தும்பியின் முரலோசை 8. சங்கொலி 9. பேரிகை ஓசை 10. யாழிசை
மணிகடல் யானை வார்குழல் மேகம்
அணிவண்டு தும்பி வளைபேரி கையாழ்
தணிந்தெழு நாதங்கள் தாமிவை பத்தும்
பணிந்தவர்க் கல்லது பார்க்கஒண் ணாதே
எனும் திருமந்திரப்பாடலுடன் ஒப்பு நோக்கி உணர்க,
இது சித்தர் பாடல் என்பதாலும், தச தீட்சை என்பது ஆன்மீகத்தில் மிக உயர்ந்த நிலை அடைந்தவர்களால் மட்டுமே பெறக்கூடிய அனுபவம் என்பதால் பொருள் உணர்ந்து எழுத முயற்சித்து இருக்கிறேன். குறை எனில் மானிடப்பிறப்பு சார்ந்தது. நிறை எனில் குருவருள்