
பாடல்
பொன்னை நாடி நாடி நொந்து
புலர்ந்த துன்பம் போதும் போதும்
உன்னை நம்பிச் சித்தி எட்டும்
உற்று வக்கும் உவகை ஈவாய்!
முன்னை வேத முடிவில் ஆடி
மூவர் போற்றும் முதல்வன் ஆனாய்!
தென்னை போலும் வாழை நீடும்
திருத்து றையூர்ச் சிவபி ரானே!
திருத்துறையூர் சிவபெருமான் பதிகம் – திருவாமாத்தூர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்
கருத்து – பொன்னாசை விடுத்து உன்னை அடைந்ததால் அட்டமாசித்தி அருள திருத்துறையூர் சிவனிடத்தில் வேண்டும் பாடல்.
பதவுரை
நீர் குறைவான போதும் வளரும் தென்னை மரங்களும், நீர் அதிகமான இடத்திலே வளரும் வாழை மரங்களும் இருக்கப்பெற்றதான திருத்துறையில் உறைகின்ற சிவனே, வேதத்தின் முடிவுகள் உன்னைப் போற்றும்படி ஆடி ப்ரம்மா, திருமால், ருத்ரன் ஆகிய மூவரும் போற்றும்படியாக அவர்களுக்கு முதல்வன் ஆனவனே! உலகியல் வாழ்வு சார்ந்து பொன்னைத் தேடித் தேடி அதன் காரணமாக துயரம் அடையப்பெற்று அதன் காரணமாக தளர்ந்து அடையப்பெற்ற துன்பம் போதும்; உன்னை நம்பி இருப்பதன் காரணமாக சித்தத்தன்மையினை கொடுக்கக்கூடிய அணிமா, மகிமா, இலகிமா ஆகிய மூன்றும் உடலால் எய்தும் சித்துக்களையும், கரிமா, ப்ராப்தி, பிரகாம்யம். ஈசத்துவம், வசித்துவம் ஆகிய மனதால் எய்தும் சித்துக்களையும் மகிழ்வுடன் களிப்பு கொள்ளுமாறு அருள்வாய்.
விளக்க உரை
- நடுநாட்டுத் தலம்
- உவகை – உவப்பு, மகிழ்ச்சி, களிப்பு
- அணிமா – அணுவைப் போல் சிறிதான தேகத்தை அடைதல்.
- மகிமா – மலையைப் போல் பெரிதாதல்.
- இலகிமா – காற்றைப் போல் இலேசாய் இருத்தல்.
- கரிமா – கனமாவது-மலைகளாலும், வாயுவினாலும் அசைக்கவும் முடியாமல் பாரமாயிருத்தல்.
- பிராப்தி – எல்லாப் பொருட்களையும் தன்வயப் படுத்துதல், மனத்தினால் நினைத்தவை யாவையும் அடைதல், அவற்றைப் பெறுதல்.
- பிராகாமியம் – தன் உடலை விட்டு பிற உடலில் உட்புகுதல். (கூடு விட்டுக் கூடு பாய்தல்)
- ஈசத்துவம் – நான்முகன் முதலான தேவர்களிடத்தும் தன் ஆணையைச் செலுத்தல்.
- வசித்துவம் – அனைத்தையும் வசப்படுத்தல்