நேர் எதிரில் முழு நிலா
நம் இருவருக்கும் எதிரில்.
பெரியதும் சிறியதுமான
கடல் அலைகள்
ஒன்றைத் தழுவி ஒன்று.
மணலை கைகளில் எடுத்து
குவித்து மீண்டும்
மணலில் விடுகிறாய்.
மெல்லிய காற்று
நம் இருவரையும் தொட்டுச் செல்கிறது
பேச்சை தொடவும் தொடரவும்
விரும்புகிறேன்.
உன்னைத் தழுவிச் செல்லும் காற்று
இடமிருந்து வலமாக
என்னைத் தழுவிச் செல்கிறது என்கிறேன்.
‘காற்றுக்கு ஏது இடமும் வலமும்’ என்கிறாய்.
பிறிதொன்றான தருணங்களில்
நாபிச் சொற்கள்
ஒன்றுகின்றன நாதத்தில்.
ஸகுண உபாசனை – இறைவனுக்கு உகந்த குணங்களை அறிந்து, இறை நம்மை அறிந்த உடன் அந்த குணங்களால் இறைமையை உபாசனை செய்யும் முறை.
புகைப்படம் : HarishKumar
புகைப்படம் : HarishKumar