வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 13

உமாமகேஸ்வரஸம்வாதம்

 

உமை

பூமியில் உள்ள மனிதர்களில் சிலர் சக்தி அற்றவர்களாகவும், ஆண்மை அற்றவர்களாகவும், பயன்பாடு அற்றவர்களாகவும், இழி தொழிலில் ஆசை உள்ளவர்களாகவும் கீழான எண்ணம் உடையவர்களோடு நட்பு உடையவர்களாகவும் காணப்படுகின்றனர். அது என்ன வகையான கர்மப் பலன்?

சிவன்

முன் ஜென்மங்களில் கொடும் தொழில்களை விரும்பி பசுக்களை அதன் தன்மை இழக்கச் செய்தும், அதில் வரும் வருமானத்தை வைத்து பிழைத்துக் கொண்டும், கோபத்தினால் மனிதர்களுக்கு ஆண்மையை கெடுத்து அதில் சந்தோஷப் பட்டுக்கொண்டும், பெண்களிடத்தில் முறை தவறி நடந்து கொண்டும், அவ்வாறு பெண்களிடத்தில் பகை கொண்டும் கோள் சொல்லியும் அவர்களுக்கு துன்பம் விளைவித்தும் மற்றும் இவ்வகை நடைஉடைய மனிதர்கள் பிறகு ஒரு பிறவியில் மானிட தேகம் எடுக்கும் போது திறமை அற்றவர்களாகவும், உதவி அற்றவர்களாகவும், இழி தொழில் செய்பவராகவும், வெட்கம் கெட்டவர்களாகவும், சுறுசுறுப்பு இல்லாதவர்களாகவும் ஆகின்றனர். தம் செய்கையினால் அதன் காரண காரியங்களை ஆராய்ந்து பிறர் துயரதை விலக்கினால் அவர்கள் அந்த துயரில் இருந்து விடுபடுவார்கள். பின் ஜென்மத்திலும் தவறுபவர்கள் நரகமே அடைவர். இது ஆண் பெண் இருவருக்கும் பொதுவானது.

உமை

மனிதர்களில் சிலர் அடிமையாகி எல்லா வேலைகளையும் செய்து கொண்டும், அடி பயமுறுத்தல் போன்றவைகளை சகித்துக் கொண்டும் இருப்பவர்களாக காணப்படுகின்றனர். அது ஏன்?

சிவன்

எந்த மனிதர்கள் பூர்வ ஜென்மங்களில் பிறர் பொருளை பறித்தும், வட்டிக்கு வாங்கிய கடன், பயிர், அடைக்கலமாக கொடுக்கப்பட்ட பொருள் ஆகியவற்றை மறைத்தும், பிறர் பொருகளை அபகரித்தும், பிறரை அடித்தும், கட்டியும் துன்புறுத்தியும் அடிமை படுத்தியும் வந்தனரோ அவர்கள் மரண தண்டனை அடைந்தப்பின் யம தண்டனைகள் பெற்று பின் தற்செயலாக மானிட பிறப்பு எடுக்கும் போது பிறந்தது முதல் எல்லா வகையிலும் அடிமைகளாகவே இருப்பர். அவர்கள் யாருடைய தனங்களை அபகரித்தார்களோ அவர்களுக்கு அடிமைத் தொழில் செய்து தம் பயம் தீரும் வரை வேலை செய்கிறார்கள். சிலர் பசுக்களாகப் பிறக்கின்றனர். அவர்கள் முன் ஜென்மத்தில் உண்டான பாவம் அவ்வாறுதான் கழியும். இதைத் தவிர கர்மங்களை அழிக்க தேவர்களாலும், அசுரர்களாலும் இயலாது. பொருளை பறி கொடுத்தவனை எல்லா வகையும் திருப்தி செய்விப்பதுதான் பாவத்தில் இருந்து விடுபடும் வகை. வினையை விடுவிக்க கருதுகிறவன் எல்லா வகையிலும் துன்பங்களை பொறுத்துக் கொண்டு முறைப்படி செய்து தன் எஜமானை திருப்தி படுத்த வேண்டும். எஜமானால் அன்புடன் விடை கொடுக்கப்படுபவன் தன் பாவத்தில் இருந்து விடுபடுகிறான். அப்படிப்பட்ட குணமுள்ள வேலைக்காரனை எஜமானும் சந்தோஷப்படுத்த வேண்டும். தகுந்த காரணம் பற்றி மட்டுமே தண்டிக்க வேண்டும். கிழவர்களையும், சிறுவர்களையும், இளைத்தவர்களையும் காப்பாற்றுபவன் புண்ணியம் அடைவான்.

உமை

சில மனிதர்கள் இழிதொழிலில் விருப்பம் உள்ளவர்களாகவும்,ஏழையாகவும், மிகுந்த சிரப்படுபவர்களாகவும், விகார ரூபம் உடையவர்களாகவும், கெட்ட எண்ணம் உடையவர்களாகவும் காணப்படுகின்றனரே, அது ஏன்?

சிவன்

பூர்வ ஜென்மத்தில் அதிக அகங்காரமும் தற்பெருமையும் உடையவர்களாக பெரியோர்களை வணங்காமல்  தம் தர்மத்திற்கு உரிய காரியங்களை செய்யாமல் பிறரை பலவந்தமாக கட்டாயப்படுத்தி தன்னை வணங்கும்படி செய்தும், செல்வத்தினால் எப்பொழுதும் பிறரை அவமதித்தும், குடித்தும், கடும் சொல் முதலியவற்றை கொண்டவராகவும் இருந்த மனிதர்கள், மரண தண்டனை அடைந்தப்பின் யம தண்டனைகள் பெற்று பின் தற்செயலாக மானிட பிறப்பு எடுக்கும் போது விருப்பம் உள்ளவர்களாகவும்,ஏழையாகவும், மிகுந்த சிரப்படுபவர்களாகவும், விகார ரூபம் உடையவர்களாகவும், கெட்ட எண்ணம் உடையவர்களாகவும் காணப்படுகின்றனர். அவ்வாறு இருக்கும் மனிதர்களை விவேகம் உள்ளவன் எக்காலத்திலும் இகழவும் கோபிக்கவும் கூடாது. ஏனெனில் அவர்கள் தம் வினைப்பயன்களை அனுபவிக்கின்றனர். துயரப்படும் அம்மனிதர்கள் அது குறித்து சிந்திக்கும் போதும் வருத்தம் கொள்ளும் போதும் அவர்கள் பரிசுத்தம் அடைவார்கள்.

உமை

சில மனிதர்கள் பிறர் வாயிலை அடைந்தும் உள்ளே செல்ல முடியாமல் தடுக்கப்பட்டு நிறுத்தப்படுகின்றனர், எத்தனை முயற்சி செய்தும் அவர்களை சந்திப்பதற்கும், தம் கருத்தை சொல்வதற்கும் இயலாதவர்களாக இருக்கின்றனரே. அது ஏன்?

சிவன்

முன் ஜென்மங்களில் செல்வம் மற்றும் அதிகாரம் ஆகியவைகளைப் பெற்று இருந்தும் மனதால் குறுகி பிறரிடம் பேசாமலும் செல்வம் பற்றிய கர்வத்தினால் மற்றவர்களை உள்ளே விடாமலும், பொருளாசை, பெண்ணாசை கொண்டு எவரையும் மதிக்காமலும், தன் நிலையை மட்டுமே கொண்டும், எல்லா போகங்கள் இருந்தும் எவருக்கும் கொடுக்காமலும், திறமை இருந்தும் பிறருக்கு உதவி செய்யாமலும், புண்ணிய கர்மங்களை செய்யாமலும் இருந்த மனிதர்கள் பின்னொரு பிறப்பில் பிறர் வாயிலை அடைந்தும் உள்ளே செல்ல முடியாமல் தடுக்கப்பட்டு நிறுத்தப்படுகின்றனர், எத்தனை முயற்சி செய்தும் அவர்களை சந்திப்பதற்கும், தம் கருத்தை சொல்வதற்கும் இயலாதவர்களாக இருக்கின்றனர்.

உமை

சில மனிதர்கள் அரசர்களாலும், திருடர்களாலும் மற்றும் நீராலும் எல்லா பொருள்களும் அபகரிக்கப்பட்டவர்களாக இருக்கின்றனரே, அது ஏன்?

தொடரும்..

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *