ஜகத்பதி

அன்று ஒரு நாள்
ஏரியில் நீராவி மண்டபத்தின் அருகில்
கால்களை அலைத்தபடி நான்.
நினைவுகளில்
தும்பைப் பூவின் தேன் துளி,
வட்டங்கள் பெரிதாகவும்
மிகப் பெரிதாகவும் மாறி மாறி.
கரையினில் சலனமற்று நீ.
கைகளில் இருந்து வீசிய
கற்களும் நீருக்குள் மூழ்கி அலைகளுடன்.
சைகைகளைக் காட்டி
காரணம் கேட்கிறேன்.
முற்றுப் பெறா புன்னகையை உதிர்க்கிறாய்.
அப்போது
கற்கள் மூழ்கி இருந்தன
அலைகள் அற்றதாய் ஏரி.
அப்போதும் சலனமற்று நீ.

ஜகத்பதி* – கால பைரவர் அஷ்டத்தில் வரும் பெயர்.

Loading

சமூக ஊடகங்கள்

முடிவற்ற தேடல்கள்

பெருங்கூட்டமொன்று
கூடிக் கலந்து தேடிக் கொண்டிருந்தது.
ஒருவன் தான் தொலைத்த பணத்தை
தேடுவதாகச் சொன்னான்.
மற்றொருவன் தொலைத்த புகழைத்
தேடுவதாகச் சொன்னான்.
மற்றொருவன் தொலைத்த குடும்பத்தை
தேடுவதாகச் சொன்னான்.
மற்றொருவன் தொலைத்த சந்தோஷங்களை
தேடுவதாகச் சொன்னான்.
கிடைத்த காலவெளியில்
அவரவர் தொலைந்தது கிடைத்ததாக உரைத்தார்கள்.
ஊழி ஓட்டத்தில் ஒருவன் வந்து
உரை பகன்றான் எதைத் தேடுகிறாய் என்று.
என்னைத் தேடுவதாக உரைத்தேன்.
கண நேரத்தில் கூட்டம் கலைந்திருந்தது
‘அவன் கிறுக்கு பயல் என்று’

Loading

சமூக ஊடகங்கள்

மனதின் வலிகள்

எல்லா வெற்றிகளுக்குப்
பின்னும் இருக்கின்றன
மறுக்க முடியா
மனதின் வலிகள்.

Loading

சமூக ஊடகங்கள்

காற்று தனித்திருந்தது

காற்று தனித்திருந்தது
அவ்வேளையில் ஆதியில்
சில பறவைகள்
பறந்து கொண்டிருந்தன.
மாயையின் சாரம் கொண்டிருந்த
இரு பறவைகள் தரையிரங்கின.
உதிர்ந்த ஒற்றை கிளை கொண்டு
கூடு எழுப்பின.
உறவுகளுடன் தாளமிட்டன,
சப்தமிட்டன, நீர் அருந்தின,
மாயப் பிரபஞ்சம் தனக்கானது
என்றும் கொண்டாடின.
வானில் பறந்த பிறிதொரு நாளில்
மரித்துப் போயின.
நகர விரிவாக்கத்தில்
கூடுகளும் கரைந்தன.
காற்று தனித்திருந்தது
எவ்வித தடயங்களும் இன்றி.

Loading

சமூக ஊடகங்கள்

மிலேச்ச தேசம்

ஒருபுள்ளியில் உருவம் அற்று
வெற்றிடத்தில் வேண்டுவன தந்து
தவித்து, தனித்து
நிழலாடி
கனவினை விதைக்கிறது
உன் வரைபடங்கள்.
எண்ணப் பகிர்தலுக்கு
எதிர் அணியில் நான்.
காட்சிகள் கவிதையாக்கம்
கொள்கின்றன.
எட்டும் தூரத்தில் ஒரு குரல்
‘கட்டைல போறவன்
தின்னுட்டு சாமி கும்பிட வேண்டியதுதானே’

*மிலேச்ச தேசம் – மரபுகளைக் கைவிட்ட தேசம்

Loading

சமூக ஊடகங்கள்

நிரந்தரா

யாருமற்ற இரவு
ஓளி நிரம்பியதாகவும்,
புகை நிரம்பியதாகவும்,
இருக்கிறது.
எனக்கான பேச்சுகள்
தொடர் அருவியாக.
மௌனத்தின் சாட்சியாக நீ.
விடை பெறுதலுக்கான
ஆயத்தங்களைச் செய்கிறாய்.
கனத்துப் போகிறது இதயம்.
‘என்றைக்கு வருவாய்’ என்கிறேன்.
‘என்றும் எங்கும் இருப்பவள் நான்,
வருவதும் போவதும் உன் நினைவுகள் தான்’ என்கிறாய்.
இன்னும் கனத்துப் போகிறது.

Loading

சமூக ஊடகங்கள்

தாடகை

‘எங்கு சென்றாய் என்னை
தவிர்த்தும் தன்னித்தும் விட்டு’
என்கிறேன்.
தவிர்த்தல் உன்நிலை அன்றி
எனதில்லை என்கிறாய்.
வார்த்தைகள் ரசவாதம் கொள்கின்றன.
உதடுகள் முணுமுணுக் தொடங்குகின்றன

அங்கம் ஹரே:புனகபூஷன
      மாச்ரயந்தீ *

எங்கிருந்தோ வருகிறது
நெருப்பின் கங்குகள்
‘செட்டியார் கடைக்குப் போய்
நோட்ல எழுதிட்டு
சேமியா வாங்கிகிட்டு வர சொல்லு உங்கபன’.

*ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்

Loading

சமூக ஊடகங்கள்

ஞானம் பிறந்த கதை

முழு நிலவில் குளுமையின்
அருகருகினில் நீயும் நானும்.
பேச்சுகள் திசைமாறி
கனவுகள் பற்றிச் செல்கிறது.
என் கனவு முழுவதும்
நாய்கள் என்று உரைக்கிறேன்.
விதவிதமான நாய்களும்
தோற்றங்களும் என்கிறேன்.
முழுவதுமாய் விளக்கச் சொல்கிறாய்.
சில நாட்களில்
அவைகள் என்னிடம் விளையாடுகின்றன.
சில நாட்களில்
பற்கள் விரிய கோபம் கொள்கின்றன.
சில நாட்களில்
காலை நேரத்து நாய்களாக என்னிடம் விளையாடுகின்றன.
சில நாட்களில்
தேடிய முகம் கண்ட மகிழ்ச்சியோடு ஓடி வருகின்றன.
சில நாட்களில்
இருப்பினை தவிர்த்துவிடுகின்றன என்று உரைத்து.
இதைத் தவிர்க்க வழி கேட்கிறேன்.
‘விழித்திரு’ என்கிறாய்.
ஞானத்திறவு கோலாய் உன் வாக்கு.

Loading

சமூக ஊடகங்கள்

மறு உரு

ஆதியில் அன்றொரு நாள்.
எனக்கான குழந்தையாக நீ.
ஒரு பெயரிட்டு என்னை அழைக்கிறாயே,
வேறு பெயர்கள் இல்லையா என்கிறாய்.
ஸ்ரீ மாதா,
ஸ்ரீ மஹாராக்ஞீ
ஸ்ரீ மத்ஸிம்ஹாசனேச்வரீ

..
கோவிந்த ரூபினி.
..
..
மகா பைரவ பூஜிதாய
..
அம்மா,அப்பாவ பாரேன்,
பேசிகிட்டு இருந்தார்,
மயங்கி விழுந்துட்டாரு.

Loading

சமூக ஊடகங்கள்

ப்ரேமரூபா

யாருமற்ற இரவில்
வெற்றுப் புள்ளியாய் நீ.
மனம் காட்டி மோனமிட்டிருக்கிறாய்.
உன் கண்ணசைப்பில்
கைக்குழந்தையாகிறேன்.
என் காதலைச் சொல்ல துணிகிறேன்.
‘ஸ்துலத்தையா, சூட்சமத்தையா’ என்கிறய்.
விழி அருவி மடைதாண்டி
பெரும் சப்தத்தோடு விரைந்து செல்கிறது.
இராவணன் இராமனான பொழுதினை ஒத்து
தன்னை இழத்தல் நிகழ்கிறது.
ஊழிப் பெருங்காற்றின் ஓலிகள் என் காதினில்.
“கிழத்துக்கு இழுக்குது,
இருக்கிற காசை அழிக்கிறத்துக்குன்னு வந்திருக்கிறான்
செத்தாலும் நிம்மதியாய் இருப்பேன்,
போய் டாக்டர கூட்டிகிட்டு வாடா”.

Loading

சமூக ஊடகங்கள்

ஆவாஹனம்

நாளின் முடிவுப் பொழுதினில்
தனித்து நீயும் நானும்.
அறை எங்கும் நறுமணம்.
‘எனக்கான..’ எனத்துவங்குயில்
‘அனைத்தும் அறிவோம்’ என்கிறாய்.
ஆரத்தழுவுதலில்
கனத்திருந்த இதயம் கரைந்து போகிறது.
உனக்கான முத்த மழைகள்
கண்களை நீரினில் கரைத்துவிடுகின்றன.
மீண்டும் வார்த்தைகளைக் கோர்த்து
வாக்கியமாக்க துவங்குகிறேன்.
எல்லைகள் அற்ற பிரணவ ஓலி
எனக்குள் எனக்காக.

Loading

சமூக ஊடகங்கள்

உபாதி

நீண்ட நாட்களுக்குப் பின்
கடவுளுடன் நெருக்கம்.
வாழ்விற்கான மாறுதலுக்கு வழி என்ன என்றேன்.
மறுதலித்தலே வாழ்வினை மாற்றும் என்றார்.
மனைவியிடம் தொடங்கலாமா என்றேன்.
‘விதி வசப்பட்டவர்கள் மாந்தர்கள்,
நீயும் விலக்கல்ல’
என்று கூறி அவ்விடம் அகன்றார்.

Loading

சமூக ஊடகங்கள்

லயம்

எனக்கான கடை நாள் வலிகளை
கண்ணீருடன் விவரிக்கிறேன்.
நித்தியமானவனுக்கு
நித்தம் வலி ஏனோ
என்று விரல் பிடித்து
தலையினைக் கோதி
முத்தம் பதிக்கிறாய்.
எங்கிருந்தோ ஒலிக்கிறது ஒரு குரல்.
கிழம் பாயில படுத்து
அழுது அழுது
உயிரை எடுக்குது.

போய் சேர்ந்தாலும் நிம்மதியா இருப்பேன்.
தூரத்தில் நாய்களின் அழுகை ஒலி.

Loading

சமூக ஊடகங்கள்

சொரூப ஞானம்

விருந்து ஒன்றில்
உன்னை விலகி நின்று
சந்திக்கும் வாய்ப்பு வாய்த்தது.
நீண்ட நெடும் கூந்தல்.
வில்லினை ஒத்த புருவம்.
தெறிக்கும் கண்ணின் பார்வைகள்.
மோனப் புன்னகைக்கு
முத்தாய்ப்பாய் மூக்குத்தி
பரவசம் ஏற்படுத்தும் பச்சை ஆடை.
என்னடா இப்படி பார்க்கிறாய்
என்றான் நண்பன்.
வாவி எல்லாம் தீர்த்தம்,
பூசுவது வெண்ணீரு எனும்
அவனுக்கான காலமும் வரும்.

Loading

சமூக ஊடகங்கள்

ஆத்ம பிண்டம்

முக்கியமானவர்கள்
முக்கிய மற்றவைகளுடன்
முக்கியமற்றவர்கள்
முக்தியினைத் தேடி.
தேவைகளின் பொருட்டு
தேடுபவர்களும் தேடப்படுபவைகளும்.

Loading

சமூக ஊடகங்கள்

ஞானம் பிறந்த கதை

அனுதினமும் செல்லும்
ஆலயமும்
அருகினில் காவலாளியின் குரலும்
காசு அற்ற பயலுகளுக்கு          
கடவுள் என்ன,
வெளியில இருந்து
வேடிக்கை பார்க்க                  
வேண்டியது தானே
என்றான்.
தேடிய ஞானம் தெளிவாக.

Loading

சமூக ஊடகங்கள்

நித்யவாசினி

உடல் நீங்கிய உயிர்.
வேடிக்கைகள் எளிதாக்கி
காட்சிகள் என்னுள்ளே.
பகுப்பாய்வுகள் பலவிதமாய்.
பாத அழுக்குகள்
பலதூரம் நடந்திருபதை காட்டுகின்றன
என்றான் ஒரு மாணவன்.
கைகள் அழுக்கானவைகள்.
அதனால் அவன் உழைப்பாளி
என்றான் மற்றொருவன்.
குடித்திருப்பதை குடல் காட்டுகிறது
என்றான் மற்றொருவன்.
இதயத்திலிருந்து வரும் வேர்கள்
கவிஞனாய் காட்டுகின்றன
என்றான் மற்றொருவன்.
எனக்கு உறவானவன் அவன் என்கிறாய் நீ.
உதிர்த்துவிட்ட சொல்லின் முடிவில்
உயிர் பெறுகிறது
உறைந்துவிட்ட ஒரு இதயம்.

Loading

சமூக ஊடகங்கள்

நித்யம்

இருப்பது
என்றைக்குமாய் இருக்கின்றது.
இருக்க முயற்சிப்பது
இருக்க துவங்கியது.
இல்லாதவைகள்
என்றைக்கும் இல்லாமல்.

Loading

சமூக ஊடகங்கள்

விடியல் தேடி

வினாக்களோடு விடிகின்றன
விடியல்கள்.
விடைகளோடு முடிகின்றன
கவிதைகள்.

Loading

சமூக ஊடகங்கள்

வறுமையும் வலியும்

என்றாவது உணர்ந்து
இருக்கிறீர்களா
பொருளற்று நண்பனை
சந்தித்த குசேலனின்
ஆழ்ந்த  மன வலிகளை.

Loading

சமூக ஊடகங்கள்