அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – என்பு

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  என்பு

பொருள்

  • எலும்பு
  • உடம்பு, உடல்
  • புல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

புன்புலால் உடம்பின் அசுத்தமும் இதனில்
   புகுந்துநான் இருக்கின்ற புணர்ப்பும்
என்பொலா மணியே எண்ணிநான் எண்ணி
   ஏங்கிய ஏக்கம்நீ அறிவாய்
வன்புலால் உண்ணும் மனிதரைக் கண்டு
   மயங்கிஉள் நடுங்கிஆற் றாமல்
என்பெலாம் கருக இளைத்தனன் அந்த
   இளைப்பையும் ஐயநீ அறிவாய்.

திருவருட்பா – இராமலிங்க அடிகள் எனும் வள்ளலார்

கருத்து உரை

துளைக்கப் படாத மணியாகிய என் உயிராகிய பெருமானே! புலால் மணக்கும் இந்த உடம்பிலுள்ள அசுத்தத்தையும், இந்த உடம்பினுள் கலந்திருக்கின்ற மாயையும் பலகாலம் நினைந்து நினைந்து நான் வருந்தி ஏங்கிய ஏக்கத்தையும் நீ அறிந்திருக்கின்றாய்; கொடுமையை தறுவிக்கும் புலால் உண்ணும் மனிதர்களைக் கண்டு, அறிவு மயங்கி, மனம் நடுங்கி அக்கொடுமையை ஆற்றாமல் என்னுடம்பின் எலும்பெல்லாம் கருகும்படி நான் இளைத்திருக்கின்ற இளைப்பையும் நீ நன்கு அறிவாயன்றோ. (அறிந்தாய் – மறை பொருள்).

விளக்க உரை

  • புலால் வெறுக்கும் தன்மை எடுத்துரைத்தல்
  • புன் புலால் உடம்பு –  புலால் நாறும் பொருள்களில் இருந்து உடம்பு தோன்றுவதால் உடலில் எழும் நாற்றம்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – வதை

 

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  வதை

பொருள்

  • கொலை
  • துன்புறுத்தல்
  • வன்கொடுமை

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

அஞ்சுமுகத் தான்மகன்மால் அஞ்சுமுகத் தான் அருள்வான்
அஞ்சுமுகத் தான்அஞ் சணிகரத்தான் – அஞ்சுமுக
வஞ்சரையான் காணா வகைவதைத்தான் ஓர் அரையோ
டஞ்சரையான் கண்கள் அவை.

திருவருட்பா – இராமலிங்க அடிகள் எனும் திருவருட்பிரகாச வள்ளலார்

கருத்து உரை

ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமம், சத்யோஜாதம் ஆகிய ஐந்து முகங்களையுடைய சிவனுக்கு திருமகனும், திருமால் சக்கரப் படையை இழந்து பெற மாட்டாது அஞ்சிய போது அதனைப் பெறுவித்து அருளியவனும், ஐம்புலன் வழி செல்லும் ஆசைகளை அன்பர்கள்பால் செல்லாதவாறு அவைகளை விலக்கி அருளும் ஐந்தாகிய அழகிய கைகளை உடையவனும், கண்கள் மூன்று உடையவனுமாகிய விநாயகப் பெருமான் அஞ்சத்தக்க இயல்பையுடைய வஞ்சகர்களை யான் கூடிக்கெடாதவாறு காத்து அருளுவான்.

விளக்க உரை

  • விநாயகப் பெருமான் வஞ்சரோடு கூடிக் கெடாதவாறு அருளியது குறித்தது வியந்து போற்றியது இப்பாடல்.
  • திருமாலின் சக்கரப் படையை விநாயகரின் கணங்களில் ஒன்று வாயில் கவ்விக் கொள்ள அதனைப் பெறும் வழி அறியாது அஞ்சியபோது செய்வகையை தெரிவித்து அதனைப் பெறுவித்தவர் விகடச் சக்கர விநாயகர் – காஞ்சிப் புராண விகடச் சக்கர விநாயகர் வரலாறு
  • ஓர் அரையோ டஞ்சரையான் கண்கள் –  ஓரு அரையோடு(0.5)  அஞ்சரை (5.5),  ஆக மொத்தம் 6.0, ஆறரையாய் (ஆறில் பாதியான மூன்று கண்கள் உடையவன்)
  • கண்கள் மூன்று உடையவனுமாகிய விநாயகப் பெருமான் – ஓம் ஈச புத்ராய நம: எனும் நாமாவளியோடு ஒப்புமை படுத்தி சிந்திக்கத் தக்கது
  • விநாயகன் ஐந்து கரம் – தன்பால் அன்பு செய்யும் ஆன்மாக்களின் ஆசைகளை(பஞ்ச இந்திரியங்களில் எழும் ஆசைகளை)  விலக்குதல் பொருட்டானது

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

காரியம் தோன்றும் வரை இருந்து பின் நீங்கும் காரணம் எது?
துணைக்காரணம்

Loading

சமூக ஊடகங்கள்