
பாடல்
தானென்ற வாலையிவள் ரூபங் காணச்
சமர்த்துண்டோ ஆண்பிள்ளை தானு முண்டோ?
பானென்ற வாமத்துக் குள்ளே யப்பா
பராபரையாள் பலகோடி விதமு மாடிக்
தேனென்ற மொழிச்சியிவள் சித்தர்க் கெல்லாஞ்
சிறுபிள்ளை பத்துவய துள்ள தேவி;
ஊனென்ற வுடலுக்குள் நடுவு மாகி
உத்தமியாள் வீற்றிருந்த வுண்மை தானே
கருவூரார் – பூஜாவிதி
கருத்து – வாலையின் பெருமைகளைக் கூறும் பாடல்.
பதவுரை
தன்னில் தானாகவே பூரணம் பெற்றவளாகிய வாலையின் ரூபத்தை காண எவருக்கேனும் திறமை இருக்கின்றதா? தன்னை ஆணென்று கர்வத்தினால் உரைப்பவர்களும் அறிவார்களோ? பால் போன்ற வெண்மை நிறம் கொண்டவளும் இடது பாகம் இருப்பவளும் ஆகிய பராபரையானவள் நினைத்த மாத்திரத்தில் பல கோடி வடிவம் எடுக்கக் கூடியவள்; தேன் போன்ற இனிய மொழியினை உடையவள்; சித்தர் பெருமக்களால் வணங்கப் பெறும் பத்து வயது கொண்ட சிறு பெண் பிள்ளை போன்றவள்; உத்தமியான அவள் இந்த உடலில் நடு நாயகமாக வீற்றிருப்பது என்பதே உண்மை.
விளக்கஉரை
- தானென்ற – தானாகவே / தன்னால்
- பானென்ற – பால் போன்ற
#அந்தக்கரணம் #கருவூரார் #சித்தர்_பாடல்கள் #வாலை #பராபரை