அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – குலவரை

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  குலவரை

பொருள்

  • எண்குலமலை
  • சிறந்தமலை
  • நாகம்
  • மந்தாரச்சிலை

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

அருந்தவர்கள் தொழுதேத்தும் அப்பன் தன்னை
   அமரர்கள்தம் பெருமானை அரனை மூவா
மருந்தமரர்க் கருள்புரிந்த மைந்தன் தன்னை
   மறிகடலுங் குலவரையும் மண்ணும் விண்ணும்
திருந்தொளிய தாரகையுந் திசைக ளெட்டுந்
   திரிசுடர்கள் ஓரிரண்டும் பிறவு மாய
பெருந்தகையைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
   பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

தேவாரம் – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து உரை

பெரும் தவமுடையவர்கள் தொழுது போற்றும் தந்தையானவன், தேவர்களின் தலைவன், தீமைகளை அழிப்பவன், மூப்பு எய்தாமல் செய்யும் அமுதத்தைத் தேவர்களுக்கு வழங்கி உதவிய வலிமையுடையவன், எப்போதும் அலைமடியப் பெற்ற கடல், மேம்பட்டமலை, நிலம், வானம், திருத்தமான ஒளியை உடைய விண்மீன்கள், எண்திசைகள், வானத்தில் உலவுகின்ற சூரியன், சந்திரன், அக்னி மற்றும் இன்ன பிறவும் ஆகிய பொருள்களில் உடனாய் இருந்து அவற்றைச் செயற்படுத்தும் மேன்மையை உடையவனாகவும், புலிக்கால் முனிவர்க்குச் சிறந்த உறைவிடமாய் இருந்த தில்லையில் உறைபவனைப் பற்றி பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.

விளக்க உரை

  • பிறவா நாளே  – பிறவி பயனின்றி ஒழிந்த நாளாதல் பற்றி;  அறம், பொருள், இன்பங்களாகிய உலகியல் பயனுள்ளவை என்னும் ஐயத்தினை அறுத்து  அவை துன்பத்தால் அளவறுக்கப்படும் சிறுமை உடையவை, இறையின்பமாகிய பெரும்பயனொடு ஒப்பு நோக்கப் பயன் எட்டாது  எனத் தெளிவித்தலின் பொருட்டு இப்பாடல்.

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

பதியின் வடிவ நிலைகள் யாவை?
அருவம், உருவம், அரு உருவம்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – வார்சடை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  வார்சடை

பொருள்

  • நீண்டசடை

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

மைப்படிந்த கண்ணாளுந் தானுங் கச்சி
மயானத்தான் வார்சடையான் என்னி னல்லான்
ஒப்புடைய னல்லன் ஒருவ னல்லன்
ஓரூர னல்லன் ஓருவம னில்லி
அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும்
அவனருளே கண்ணாகக் காணின் அல்லால்
இப்படியன் இந்நிறத்தன் இவ்வண் ணத்தன்
இவனிறைவன் என்றெழுதிக் காட்டொ ணாதே.

தேவாரம் – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து உரை

இறைவன், நீண்ட சடை உடையவனும், ‘மைபூசிய கண்களை உடைய உமையுடன்  தானுமாகிக் கச்சி மயானத்து வாழ்பவனும்  ஆவான்’ என்று கூறினால் அவன் அவ்வளவே அத்தன்மை மட்டும்  உடையவன் அல்லன்; (ஏனெனில் அஃது அவனது பொது இயல்பு ஆகும்).அவன் எந்தபொருளையும் தன்பொருட்டு ஏற்க விருப்பம் உடையான் அல்லன். உலகில்  இருக்கும் பொருள்களில் ஒருவன் அல்லன்;  ஓரு ஊருக்கு மட்டும்  உரியவன் அல்லன். எந்தப் பொருளாலும் தனக்கு இணையாக உவமை காட்ட இயலாதவன். அதனால் அவனுடைய அந்தத் தன்மையையும், அந்த நிறத்தையும், அந்த வடிவத்தையும் அவன் திருவருளையே கண்ணாகப் பெற்றுக் காணலாமே ஒழிய அவ்வாறு இல்லாமல் மற்றைப் பொருள்கள் போலப் இன்னவகையுட்பட்டவன், இன்ன நிறத்தையுடையவன், இன்ன வடிவத்தை உடையவன் என்று இவனைச் சொல்லாகவோ எழுத்தாகவோ எழுதிக் காட்டல் இயலாது.

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

உரை அளவையின் வேறு பெயர்கள் என்ன?
ஆகமப் பிரமாணம், சப்தப் பிரமாணம்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – கடந்தை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  கடந்தை

பொருள்

  • திருப்பெண்ணாகடம்
  • ஒரு குளவிவகை
  • பெருந்தேனீ

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

ஆவா சிறுதொண்ட னென்னினைந் தானென் றரும்பிணிநோய்
காவா தொழியிற் கலக்குமுன் மேற்பழி காதல்செய்வார்
தேவா திருவடி நீறென்னைப் பூசுசெந் தாமரையின்
பூவார் கடந்தையுட் டூங்கானை மாடத்தெம் புண்ணியனே.

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து உரை

செம்மையான தாமரைப் பூக்கள் நிறைந்த கடந்தை என்றும் திருப்பெண்ணாகடம் என்றும் அழைக்கப்பெறும் தூங்கானைமாடத்தில் உறையும் எம் புண்ணியனே! இரக்கக்துடன் கூடிய ஆனந்தம் கொண்டு ‘இச்சிறு தொண்டன் என்னை விருப்புற்று நினைத்தான்’ என்று திருவுளம் பற்றிப் பெரிய பிணிகளும் நோய்களும் தாக்காதவாறு அடியேனைப் பாதுகாக்காமல் விடுத்தால் புண்ணியனாகிய உனக்குப் பழி வந்து சேரும். ஆதலினால் விரும்பும் அடியவர் தலைவனாகிய நீ உன் திருவடிகளில் பற்றித் தோய்ந்த திருநீற்றினை அடியேன் மீது பூசுவாயாக.

விளக்க உரை

  • சிறு தொண்டன் – தொண்டர்களில் சிறியேன்; சிறு தொண்டு புரிவேன்
  • அரும் பிணி நோய் – அகற்றுதற்கு இயலா பிணியையும் நோயையும்
  • எம் புண்ணியனே – எமது சிவபுண்ணியப் பயனாக உள்ளவனே

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

ஞானம் எதைக் குறிக்கும்?
அறியும் கருவி

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – மட்டு

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  மட்டு

பொருள்

  • எல்லை
  • கள்
  • தேன்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

விட்டார் புரங்கள் ஒரு நொடி வேவ ஓர் வெங்கணையால்
சுட்டாய்; என் பாசத்தொடர்பு அறுத்து ஆண்டுகொள்!-தும்பி பம்பும்
மட்டு ஆர் குழலி மலைமகள் பூசை மகிழ்ந்து அருளும்
சிட்டா! திருச் சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே!

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து உரை

சிவக்கொழுந்தே!  வண்டுகள் விரும்பிச் செல்லும் தேன் பொருந்திய மலர்களை அணிந்த கூந்தலை உடைய பார்வதியின் வழிபாட்டினை விரும்பும் மேம்பட்டவனே! பகைவருடைய மூன்று மதில்கள் கைந்நொடிப் பொழுதாகிய ஒரு மாத்திரையில் வெந்து போகுமாறு கொடிய அம்பினால் சுட்டு நீறாக்கினாய், அதுபோல் அடியேனுடைய உலகப்பற்றாகிய தொடர்பை நீக்கி அடிமை கொள்வாயாக!

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

பிரமாதா என்பது எவரைக் குறிக்கும்?
அளப்பவன்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – துறத்தல்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  துறத்தல்

பொருள்

  • கைவிடுதல்
  • பற்றற்றுத் துறவுபூணுதல்
  • நீங்குதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

துறக்கப் படாத வுடலைத் துறந்துவெந் தூதுவரோ
டிறப்ப னிறந்தா லிருவிசும் பேறுவ னேறிவந்து
பிறப்பன் பிறந்தாற் பிறையணி வார்சடைப் பிஞ்ஞகன்பேர்
மறப்பன்கொ லோவென்றென் னுள்ளங் கிடந்து மறுகிடுமே .

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து உரை

எந்த விதமான பற்றும் இல்லாமல் விட்டு  ஒழிப்பதற்கு அரிதான இவ்வுடம்பை விடுத்துக் கொடிய காலதூதருடைய செயல்களால் இறப்பேன். அவ்வாறு இறந்தால் மேலுலகம் அடைவேன். மேலுலகம் சென்று வந்து மீண்டும் பூமியில் இறங்கி மீண்டும் பிறப்பேன். அவ்வாறு பிறந்தால் பிறைச்சந்திரனை அணிந்த நீண்ட சடையை உடைய தலைக்கோலத்தை அணிந்த பெருமானுடைய பெயரை மறந்து விடுவேனோ என்று என் உள்ளம் கிடந்து வருந்துகிறது.

விளக்க உரை

  • துறக்கப்படாத உடல் – மும்மலங்களின் காரணமாக பற்று இல்லாமல் விட்டொழிக்க எளியதாக இல்லாத உடம்பு..

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

அளவை என்பது என்ன?
பொருள் உண்மையை கண்டறியும் கருவி

Loading

சமூக ஊடகங்கள்
error: Content is protected !!