நகர மறுக்கும் நினைவுகள் – 7 – கனவு காணும் வாழ்க்கையாவும்..

படம் : நீங்கள் கேட்டவை
கண்கள் அற்றவனின் பாத்திரத்தில் உருளும்ஒற்றை நாணயத்தின் ஒலிகளாய், மரணமும் மயானம் நோக்கி நகர்தலில் துவங்குகிறது பாடல்.
எதிர் எதிர் நிகழ்வுகளை ஒன்று படுத்தி காட்சி ஏற்படுத்தி இருக்கிறார் பாலு சார்.
கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்
துடுப்புகூட பாரம் என்று கரையை தேடும் ஓடங்கள் 
கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்
மனிதனின்அழுகை பதிவு செய்யப்படுகிறது. மீண்டும் பிணம் எரிகிறது. நாய்கள் தனது தாயிடம் பால் அருந்துகின்றன.
மயானத்திலிந்து மனிதன் நடந்து வருகிறான்.சிறிய குழந்தை தனது கண்களை உருட்டிப் பார்க்கிறது. அடுத்த காட்சியில் கல்லறைகள்.
பிறக்கின்ற  போதே, பிறக்கின்ற  போதே இறக்கின்ற செய்தி இருகின்றதென்பது மெய்தானே
பாடுபவன்பாடிக் கொண்டே நடந்து வருகிறான். லாட்டரி சீட்டு வியாபாரம் நடக்கிறது. காமம் அரங்கேற்றம் கொள்கிறது.
ஆசைகள் என்ன, ஆசைகள் என்ன, ஆணவம் என்ன, உறவுகள் என்பதும் பொய் தானே
அசைவுகள்அற்று வயதானவன் படுத்திருக்கிறான்.
உடம்பு என்பது, உடம்பு என்பது உண்மையில் என்ன கனவுகள் வாங்கும் பை தானே
மிகப் பெரிய மனித கூட்டம் நகர்ந்து கொண்டிருக்கிறது. சினிமா விளம்பரப் பலகைகள். படத்தின் பெயர் ஊமை ஜனங்கள். மீண்டும் மெல்லிய சூரிய கதிர்கள் வானில் இருந்து பிரகாசிக்கின்றன. காற்று வேகமாக அடிக்கிறது. நீர் நிலைகளில் நீர் கடந்து கொண்டிருக்கிறது. மரங்கள் பூத்துக் குலுங்குகின்றன. நீர் நிலைகளும் பிறகு நீர் அற்றதால் வெடிப்புற்ற நிலங்களும் காட்சிகளில்.
காலங்கள்மாறும், காலங்கள்மாறும் கோலங்கள் மாறும் வாலிபம் என்பது பொய் வேஷம்.
சிறிய குழந்தை அழும் காட்சியும், வயதான மூதாட்டியின் நிலை பெற்ற பார்வையும். கடற்கரையினில் காதலர்களும் அதைத் தொடந்து வயதானவனின் நிலை பெற்ற பார்வையும்.
தூக்கத்தில் பாதி, தூக்கத்தில் பாதி ஏக்கத்தில் பாதி போனது போக எது நீதம்.
வாகனத்திற்கு வெளியே காலகளை நீட்டி ஒருவன் உறங்குகிறான். குழுக்களாய் மனிதர்கள் ஏதோ ஒன்றைத் தேடுபவர்களாய்.
நட்சத்திரஒட்டலும்பின்பு உழைப்பாளர் சிலையும். பாடல் தொடர்கிறது.
பேதை மனிதனே, பேதை மனிதனே கடமையை இன்றே செய்வதில்  தானே ஆனந்தம்
இசைத்துக்கொண்டே பாடுபவன் அமர்ந்திருக்கிறான்.
கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்
துடுப்புகூட பாரம் என்று கரையை தேடும் ஓடங்கள்
கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்
உறுத்தாதகணவன் மனைவி உறவாய் பாடலும் இசையும் மிக சரியான விகிதத்தில்.
முள்ளை முள்ளாய் எடுப்பது போல், மிக அதிக மனப் பாரங்கள் இருக்கும் காலங்களில் தனித்து இப்பாடலை கேட்கும் போது இப்பாடல் வலிகளை மருந்தாய் இட்டுச் செல்கிறது.
அருவி நம் உடலை தூய்மை செய்வது போல் பாடல் வரிகளும் இசையும் காட்சி அமைப்பும் நம் மனப் பாரங்களை நீக்குகின்றன.
நிலையாமைத் தத்துவங்களின் மிக முக்கிய பணி தன்னை உணர்தல், தன் வலி உணர்தல். அதை இப்பாடல் மிக சிறப்பாகவே செய்கிறது. அதனால் தான் இன்னும் கனவு காணும் வாழ்வு நகர்ந்து கொண்டிருக்கிறது.

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *