நகர மறுக்கும் நினைவுகள் – விஷமென்று நீ தந்தாலும் அமுதாக மாறாதோ

புகைப்படம் - திரைப்பட இயக்குநர் : திரு.ஐயப்ப மாதவன்

விஷமென்று நீ தந்தாலும்
அமுதாக மாறாதோ
விழி மூடி தூங்கும் போதும்
உன் வண்ணம் தோன்றாதோ

படம்: நெல்லிக்கனி
இசை: சங்கர் கணேஷ்
குரல்: எஸ்.பி.பி., மலேசியா வாசுதேவன்
பாடல்: புலமைப்பித்தன்

80களில் இலங்கை வானொலி இசை கேட்டு பாக்கியம் பெற்றவர்களில் நானும் ஒருவ்ன். (ஒரு பரிதாபமும் இருக்கிறது – கடைசியில்)

பாடல் முழுவதும் நண்பர்கள் இருவரும் பயணம் செய்து கொண்டே இருப்பார்கள், இரு சக்ர வாகனம், குதிரை, நடை… இந்தப் பாடலில் மலேஷியாவும், S.P.B ம்,பரஸ்பரம் தங்கள் நட்பினை வெளிப்படுத்தி இருப்பது போலவே இருக்கும்,

பள்ளிக்காலங்களில் பெரும்பான்மையான பாதிப்புகள் (நல்லது / கெட்டது) நட்பு வட்டாரத்தில் இருந்தே தோன்றும்.

பாடல் வரிகளுக்குள் தன்னை பொருத்தி அதை தன் வடிவமாக காணும் காலங்களுக்கு முன்பே இது போன்ற பாடல்கள் மனதினை தீண்டி விட்டன. இப்பாடலினை வெளியில் இருந்து கேட்கும் போது ஒரு துணையுடன் பாடுவது போலவே இருக்கும். ஆனால் மிக அழகாக நட்பினைப் பற்றி பாடும் பாடல்களில் இதுவும் ஒன்று.

பல காலங்கள் இது இசைஞானி என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். சங்கர் கணேஷ் இசை அமைத்த பல அழகுப் பாடல்களில் இதுவும் இருக்கும்.

கடல் நீரும் வற்றிப்போகும்
நமதன்பு வற்றாது

எனும் இடங்களில் ஒரு வாசனை.. அட.அட..

ஒரு முறை நெல்லிக்கனி என்ற படத்தில் இருந்து சங்கர் கணேஷ் இசையில் எஸ்.பி.பி யும்., மலேசியா வாசுதேவன் பாடியது என்று குரல் ஒலித்தது. பரவசம், பரவசம் கொண்டேன். …. ரேடியோவில் ஒலி அளவினை கூட்டினேன். சத்தமே காணோம். அடச்ச. பேட்டரி தீர்ந்து விட்டிருந்தது. பின் வேறு ஒரு ரேடியோவில் இருந்து பேட்டரியினை மாற்றி ஆன் செய்வதற்குள்..

கவி வேந்தன் கம்பன் வந்து
நமைப் பாட மாட்டானோ
கதையல்ல உண்மையென்று
வரலாறு காட்டானோ

என்ற வரிகள் பாடல் வரிகள் ஒலிக்கத்துவங்கி விட்டன. பாடலினை பலமுறை கேட்டப்பின்னும் முதலில் கேட்க மறந்த வரிகள் இன்னும் வடுக்களாகவே உள்ளன.

https://www.youtube.com/watch?v=h46J0F6W1wQ

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.