உமை
சில மனிதர்கள் தொண்டை நோய் உடையவர்களாக இருந்து துன்பப்படுகின்றனரே, அது ஏன்?
சிவன்
எந்த மனிதர்கள் முன் ஜென்மங்களில் மதி கெட்டு கட்டுவது, அடிப்பது, கொல்லுவது ஆகிய வீண் தண்டனைகளால் பிறர் உருவை அழித்தும், அவர்கள் விருப்பத்தைக் கெடுத்தும், கெட்ட ஆகாரங்களை பிறருக்கு கொடுத்தும், பகையாலும் பொருள் ஆசையாலும் மனம் போனவாறு வைத்தியம் செய்தும், பிராணிகளை எவ்வித கருணையும் இன்றி கொன்றும் மற்றும் இவ்வகை நடத்தையோடு இருந்தவர்கள் பின்னொரு ஜென்மாவில் மானிட தேகம் எடுப்பாராயின் அவர்கள் தொண்டை நோய் உடையவர்களாக இருந்து துன்பப்படுகின்றனர். மற்றும் சிலர் புண் குஷ்டம், வெண் குஷ்டம் மற்றும் தோல் சம்மந்தமான வியாதிகள் உடையவர்களாகவும் துன்புறுகின்றனர்.
உமை
சில மனிதர்கள் அங்கக் குறைபாடு உடையவர்களாகவும், முடமானவர்களாகவும் இருப்பது எந்த கர்மத்தின் பலன்?
சிவன்
முன் ஜென்மத்தில் ஆசையாலும், அஞ்ஞானத்தாலும் விலங்குகளை கொன்றும், அவற்றின் அங்கங்களை அறுத்தும், அவற்றின் விருப்பங்களைக் கெடுத்தும், அவற்றின் நடையை தடுத்தும் இறக்கும் மனிதர்கள் பின்னொரு ஜென்மங்களில் மானிடப்பிறப்பை அடையும் போது அங்கக் குறைபாடு உடையவர்களாகவும், முடமானவர்களாகவும் பிறக்கிறார்கள் அல்லது பிறந்தபின் அவ்வாறு ஆகிறார்கள்.
உமை
சில மனிதர்கள் புண்களாலும் மற்றும் அது சார்ந்த வியாதிகளால் துன்புறுகின்றனரே அது ஏன்?
சிவன்
பூர்வ ஜென்மத்தில் தனது கை வலிமை குறித்து எண்ணம் கொண்டு பிற மனிதர்களை கைகளால் குத்தியும், சூலம் போன்ற ஆயுதங்களால் கிழித்தும் கொண்ட பாவிகள் பின் ஜென்மங்களில் புண்களாலும் மற்றும் அது சார்ந்த வியாதிகளால் துன்புறுகின்றனர்.
உமை
சில மனிதர்கள் காலில் எப்பொழுதும் நோய் உள்ளவர்களாக காணப்படுகின்றனரே, அது ஏன்?
சிவன்
எந்த மனிதர்கள் பூர்வ ஜென்மங்களில் கோபமும் லோபமும் கொண்டு தேவதைகள் இருக்கும் இடத்தை காலால் உதைத்தும், முழங்காலாலும், பின்னங்கால்களாலும் பிராணிகளை துன்புறுத்தியும் ஆகிய இவ்வகையான நடவடிக்கைகள் உள்ளவராக இருக்கின்றனரோ அவர்கள் மறுஜென்மங்களில் பாத வெடிப்பு முதலிய பலவகை கால் சம்மந்தமான வியாதிகளால் துன்புறுகின்றனர்.
உமை
பூமியில் அநேக மனிதர்கள் செல்வம் உடையவர்களாக இருந்தாலும், வறுமை உடையவர்களாக இருந்தாலும் வாதத்தினாலே, பித்தத்தினாலோ அல்லது இரண்டும் சேர்ந்தோ அல்லது இது போன்று பலவகை நோய்களாலும் துன்பப்படுகின்றனரே, அது என்ன வகை வினையின் பயன்?
சிவன்
எந்த மனிதர்கள் பூர்வ ஜென்மங்களில் அசுரத் தன்மை அடைந்து கோபம் கொண்டும், யாருக்கும் கட்டுப்படாமலும் கோபம் கொண்டும், குருவை பகைத்தும், எண்ணம், செயல் ஆகியவற்றால் பிறரை துன்புறுத்தியும், பிராணிகளிடத்தில் அன்பு இல்லாமல் அதை வெட்டியும், துன்புறுத்தியும் மற்றும் இவ்வகை செய்கைகள் உடையவர்களாக இருக்கிறார்களோ அவர்கள் பின்னொரு பிறப்பில் மானிட தேகம் எடுக்கும் போது வாதத்தினாலே, பித்தத்தினாலோ அல்லது இரண்டும் சேர்ந்தோ அல்லது இது போன்று பலவகை நோய்களாலும் துன்பப்படுகின்றனர். இன்னும் சிலர், வாயும் காசம் மற்றும் தாகம் பொன்றவற்றாலும் பலவகை புற்றுக்களாலும் காலில் பலவகை நோய் உள்ளவர்களாகவும் துன்புறுகின்றனர். செய்த கர்மத்தின் பலனை யாராலும் தடுக்க இயலாது.
உமை
மனிதர்களில் சிலர் கோணல் அங்கம் உடையவர்களாகவும், சிறிதான அங்கம் உடையவர்களாவும், ஒற்றைக்கை நொண்டிகளாகவும், கூனர்களாகவும், குள்ளர்களாகவும் காணப்படுகின்றனரே, அது ஏன்?
தொடரும்..