வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 6

(

இந் நிகழ்வுகள் மகாபாரதம் அனுசாஸன பர்வத்தில் இடம் பெற்றுள்ளவை

தொடக்கம் 204 அத்யாயம்.

கூடி இருக்கும் ரிஷிகள் கிருஷ்ணரை பார்த்து ‘உலகில் ஆச்சரியமானது ஒன்றை நீங்கள் கண்டிருந்தாலும், கேட்டிருந்தாலும் அதை உரைக்க வேண்டும்’ என்றனர்.

‘நான் மானிட வடிவத்தில் இருப்பதால் எதுவும் உரைப்பதிற்கு இல்லை, அதனால் என் அறிவும் வரையறைக்கு உட்பட்டது என்றார்.

எனவே ரிஷிகள் அனைவரும் நாரதரே உக்கிரமான தவம் உடையவர், கிருஷ்ணருக்கு அன்பானவர், பழைய சரித்திரங்கள் அனைத்தும் அறிந்தவர் என்று நிச்சயித்து அவரை அணுகினார்கள்

அவர் உமா மகேஷ்வர ஸம்வாதம் குறித்து சொல்லத் தொடங்கினார்.

)

உமை : 

மூன்று விதமான மனிதர்கள் எப்போதும் காணப்படுகிறார்கள். சிலர் எவ்வித முயற்சியும் இன்றி உயர்ந்த அதிகாரத்தையும் செல்வத்தையும் அடைகின்றனர். சிலர் முயற்சி செய்து பாக்கியங்களை அடைகின்றனர். சிலர் எவ்வித முயற்சி செய்தும் ஒன்றையும் அடையாமல் இருக்கின்றனர். அது ஏன்?

சிவன் : 

உலகில் எந்த மனிதர்கள் தானத்தையும் தர்மத்தையும் முக்கியமாக நினைத்து தாமே தேடிப் போய் தானம் முதலியவைகளை வாங்கச் செய்கிறார்களோ அவர்கள் அடுத்து வரும் பிறவிகளில் முயற்சி இல்லாமலே அதன் பலன்களை அனுபவிக்கின்றனர்.

எந்த எந்த காலங்களில் யாசிக்கும் போது தானம் அளிக்கப்பட்டதோ அதன் பலனை அடுத்துவரும் பிறப்பில் சிறிது சிரமப்பட்டு முயற்சிக்குப் பின் அந்த அந்த காலகட்டங்களில் பெறுகின்றனர்.

மனிதர்கள் கெட்ட எண்ணம் கொண்டவர்களாக யாசிப்பவர்களுக்கு எவ்வகையிலும் எந்த ஒன்றையும் கொடாமல் கோபிக்கின்றனரோ அவர்கள் மறு பிறப்பில் எவ்வித முயற்சி செய்தும் ஒன்றையும் அடையாமல் இருக்கின்றனர்.

விதை விதைக்காமல்  முளை  முளைப்பதில்லை. அது போலவே தான தர்ம பலன்களும். மனிதன் எதை எதைக் கொடுக்கிறானோ அதை அதை மட்டுமே அடைகிறான்.

உமை : 

‘சிலர் வயது முதிர்ந்து, தேகங்கள் தளர்ச்சி அடைந்த பின் அனுபவிக்க தகாத காலத்தில் செல்வங்களையும் போக பாக்கியங்களையும் அடைகின்றனர், எது ஏன்?

சிவன் : 

சிலர், செல்வம் பெற்றிருந்தும் தர்ம காரியங்களை வெகு நாட்கள் மறந்திருந்து, தனது உயிருக்கு முடிவுக்காலம் வரும்போது பிணியால் துன்பப்படும் போது தானங்களை கொடுக்கவும் தர்மங்களை செய்யவும் தொடங்குகின்றனர். அவர்கள் மறு ஜென்மங்களில் கஷ்டப்படுபவர்களாகப் பிறந்து இளமை கடந்தப்பின் முதுமை அடைந்து முன் பிறவிகளில் செய்த தான தர்ம பலன்களை அனுபவிக்கின்றனர். இவ்வாறாக அவர்களுக்கு செல்வங்களும் போக பாக்கியங்களும்அவரவர்களின் கர்மம் காலம் கடந்து வருகிறது.

உமை : 

சிலர் போக பாக்கியம் பெற்றிருந்தும் அவற்றை அனுபவிக்க இயலாதவர்களாக இருக்கிறார்களே அது ஏன்?

சிவன் : 

எவர்கள் வியாதியால் பீடிக்கப்பட்டு, பிழைப்பதில் எண்ணம் விட்டப் பிறகு தான தர்மம் செய்ய ஆரம்பிக்கிறார்களோ, அவர்கள் அடுத்துவரும் பிறவிகளில் அதன் பலங்களை அடைந்து நோய்வாய் பட்டவர்களாக அனுபவிக்க இயலாதவர்களாக ஆகின்றனர்

உமை : 

மனிதர்களில் சிலர் அழகு உள்ளவர்களாகவும், லட்சணங்களுடன் கூடிய அவயங்கள் உடையவர்களாகவும், பார்வைக்கு இனியவர்களாகவும் காணப்படுகின்றனர் அது ஏன்?

தொடரும்

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *